Banner
Home
Events
Photo Gallery
Contact us

"வேருக்குள் உறுதிகொண்டு........."

 

1990 களின் ஆரம்பம். டொரோண்டோவின் கலை, இலக்கியச் சூழலில் சீரிய நாடகங்களுக்கான ஒரு அமைப்பு அவசியம் என உணரப்பட்ட ஒரு காலம்.இதனைக் கருத்திற்  கொண்டு 1996 ம் ஆண்டு நாடக ஆர்வலர்களான நண்பர்கள் சிலர், பல்வேறு கொள்கைகளுக்கும் அப்பாற்பட்டு, "சீரிய நாடகங்களின் நேர்த்தியான மேடையற்றங்களுக்கான ஒரு களம்" என்ற ஒரே அடிப்படையில் நட்பு ரீதியில் ஒன்றுபட்டுத் தோற்றுவித்த அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும்.இவ்வமைப்பின் நாடக நிகழ்வுகள்  "அரங்காடல்" என்ற பெயரில் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.


அன்று மனவெளிக்கு இருந்த நோக்கங்கள் அன்றைய நாடகச் சூழலின் தேவைகள், அதனைச் சாத்தியப்படுத்தும் வகையிலான அமைப்பின் செயற்பாடுகள் என்பனவற்றை நான்காவது, ஆறாவது கையேடுகளில் உள்ள சிறு குறிப்புகள் ஓரளவு புரியவைக்கும் என்பதால் அவை இதனிறுதியில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

 
 
இதுவரை நடைபெற்ற பதினான்கு   அரங்காடல்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன என்பதுடன் அவ்வபோது பல நாடகப்பட்டறைகளையும் மனவெளி ஏற்பாடு செய்திருக்கிறது.பாவனை நாடகங்கள், மொழிபெயர்ப்பு, மற்றும் தழுவல் நாடகங்கள், நடனவகை நாடகங்கள், நாடகமேடைப் பாடல் அரங்குகள் கவிதா நிகழ்வுகள் என்று பலவும் இவற்றுள் அடங்கும்.ஏற்கனவே சிறுவட்டத்துள் மட்டும் அறியப்பட்ட ஈழத்துஇந்திய, மற்றும்  மேலைத்தேய நாடகாசிரியர்களையும்  கலைஞர்களையும் பரவலாக அறிமுகப்படுத்தியதுடன், புதியவர்களை நாடகப்பிரதிகள் எழுதத் தூண்டி, புதிய கலைஞர்களை-முக்கியமாக பெண்களை நாடகத்துறை நோக்கி ஈர்த்துக் கொண்டதிலும் மனவெளிக்கு முக்கிய பங்கு உண்டு.


டொரொண்டோவில் வெகுஜனக் கலாசாரச் சூழலின் மத்தியிலும், சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களைத் திசை திருப்பி, ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த பார்வையாளர் கூட்டமொன்றைப் படிப்படியாக வளர்த்தெடுக்கும் வகையிலேயே இதுவரை அமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.இன்று மேலும் சில சீரிய நாடகக் குழுக்கள் உருவாகியிருப்பதும் அவர்களின் காத்திரமான அரங்க நிகழ்வுகளும், மகிழ்வும் மனநிறைவும் தருகிற சேதிகள்.


பதினான்கு அரங்காடல்கள்வரை கூட்டுழைப்புடனும், தீவிரத்துடனும் ஒரு தொடர்ச்சியைப்  பேணி வந்திருந்த  போதிலும் கடந்த மூன்று வருடங்களாக தாயகச் சூழல் காரணமாகவும், தனிப்பட்ட நடைமுறைச் சிக்கல்களாலும் தவிர்க்கமுடியாதபடி அமைப்பின் செயற்பாடுகளில் ஏற்பட்ட மந்தநிலை குறித்து மனவெளி மனம் வருந்துகிறது. இது தற்காலிகமானதே.வருகிற ஜனவரி 08-2012 ஞாயிறு அன்று மார்க்கம் கலையரங்கில் நடைபெறவுள்ள பதினைந்தாவது அரங்காடலைத் தொடர்ந்து, தனது செயற்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்தும் என்று மனவெளி உறுதியுடன் நம்புகிறது.


தென்னிந்திய சின்னத் திரைகளும், தொலைக்காட்சிகளும் கணனி வலைக்கட்டமைப்புகளும்  வீட்டுக்குள் வந்து ஆட்சி செலுத்தும் இன்றைய சூழலில் மேடை நிகழ்வுகளின் மீதான பார்வையாளர்களின் நாட்டம்-ஜனரஞ்சக நிகழ்வுகள் உட்பட-பெரிதும் அருகி வருவதை அவதானிக்க முடிகிறது .பொதுவாக நாடகத்துறைக்குள்ளும் நாடகக் குழுக்களின் அமைப்பு  ரீதியான   செயற்பாடுகளிலும் இளையதலைமுறையினரை உள்வாங்க வேண்டிய தேவையையும் உணர முடிகிறது. சீரிய நாடக முயற்சிகளில் ஈடுபடுபவர்களைச் சோர்வடையச் செய்யும் இத்தகைய காரணிகளையும் கருத்திற் கொண்டு செயற்படவேண்டியதே இன்றைய அவசியமான தேவை.இனிவரும் காலத்தில் இதனை  நோக்கிய பயணத்தில் நாடக ஆர்வலர்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் மனவெளி வேண்டி நிற்கிறது .
 

நன்றி

 

-மனவெளி கலையாற்றுக்குழு.