தெரிந்த ஒரு பொருள், ஒரு உயிரினம், ஒரு விடயம் அல்லது ஒரு சூழ்நிலை தொடர்பாகப் பொருத்தமில்லாத, மிகையான மற்றும் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதீத பயம் அச்ச நோய் எனப்படும். அச்சத்தின் மூலப்பொருளாக அந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தீமை பயக்கும் ஆபத்துகள் காணப்படுகின்றன. ஆயினும், அப்பயமானது அச்சந்தர்ப்பத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளுடன் ஒப்பிடும்போது, மிகவும் அதிக பரிமாணத்துடன் சிந்திக்கப்படுவதனால், அது மிகையாக வெளிப்படத்துப்படுகின்றது. அச்சம் ஒரு நோயாக உருவாவதற்கு ஒருவருக்கு முன்பு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்கள், அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் காரணியின் ஆபத்துத் தொடர்பாகப் பார்த்து அல்லது கேட்டு அவற்றின் மூலமாக காலப்போக்கில் உருவாகும் அதீத பய உணர்வு காரணமாக அமையலாம். அச்ச நோய்களை விலங்கு தொடர்பானது, இயற்கைச் சூழல் தொடர்பானது, குருதி-ஊசி-காயம் தொடர்பானது, சந்தர்பங்கள் தொடர்பானது, இவை தவிர ஏனையவை என ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
அச்ச நோயுடையவர்கள் பயத்தை ஏற்படுத்தும் தூண்டல்களுக்கு உள்ளாகும் போது, மிகையான அச்சம் அல்லது பதகளிப்பு நிலையை அடைவதோடு, (சிறுவர்களில் இந்தப் பதகளிப்பானது கோபம், அழுகை போன்ற நடத்தைகளால் வெளிப்படுத்தப்படும்), பயமுறுத்தும் காரணிகளைத் தவிர்த்துக் கொள்ளல், பயத்தின் மிகையான சித்தரிப்பு, நாளாந்த நடவடிக்கைகளில் கணிசமான பாதிப்பு போன்ற அறிகுறிகளையும் வெளிக்காட்டுவார்கள்.
அச்ச நோய்களுக்கு அறிகை நடத்தத்தைச் சிகிச்சை மூலம் ஒருவரைப் படிப்படியாக அச்சமூட்டும் காராணிகளுக்கு முகங்கொடுக்கச் செய்வதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். பொதுவாக இந்நோய்க்கு மருந்துகள் வினைத்திறன் குறைந்தவையாக இருக்கின்றன. ஆயினும், Benzodiazepines, antidepressants மற்றும் β-blockers போன்ற மருந்துகள் அச்ச நோய்களின் அறிகுறிகளை குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
Compiled by K. Heerthikan