Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Dementia (அறளை பெயர்தல்)

அறிமுகம்

மனிதர்களுக்கு மறதி என்பது இயற்கை கொடுத்ததுவே. நாம் முதுமை அடையும் போது மறதி ஏற்படுவது இயற்கையே. ஆனால் அறளை பெயர்தல் என்பது முற்றிலும் வேறுபட்டது. இந்நோய் மூளையின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கின்றது.

அறளை பெயர்தல் என்பது அநேகமான வேளைகளில் முதலில் ஞாபகமறதியாகத் தொடங்கி, பின்பு மெதுவாக மனிதனின் அடிப்படை செயல்பாடுகளைப் பாதிப்பதாக மாறிவிடுகிறது. இப்பாதிப்பிற்குரியவர்கள் அன்றாட வாழ்க்கைப் பணிகளை எதிர்கொள்ளும் திறனையும், தொடர்பு கொண்டு பேசும் திறனையயும் மெதுவாக இழப்பார்கள். தாமே சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்வார்கள். இவர்களின் உணர்ச்சிகளும் மனநிலையும் கூட மாறிவிடலாம். இதனால் இந்நோய்வாய்ப்பட்டவர்கள் சில நேரங்களில் பொருத்தமில்லாத முடிவுகளை எடுப்பார்கள். இவற்றுடன் மற்றவர்களுடன் இயல்பாகப் பழகும் விதங்களிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

அறளை பெயர்தலுக்கான பொதுவான காரணங்கள்

அல்சைமர் நோய் (Alzheimer’s Disease)

அறளை பெயர்தலுக்கான பொதுவான காரணம் அல்சைமர் நோய் ஆகும். அல்சைமர் நோய் குறிப்பாக நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் பாதிக்கின்றது. புதிய செய்திகளைக் கற்றல் கடினமாக இருக்கும். உதாரணமாக சமீபத்தில் நடந்த நிகழ்வுகள், புதிய தொலைபேசி எண்கள், மற்றும் நியமனங்களை நினைவில் வைப்பது கடினமாக மாறும். இந்நோய் பரம்பரையாகவும் வரக்கூடும்.

குருதிக்குழாய் சம்பந்தப்பட்ட அறளை பெயர்தல் (Vascular Dementia)

இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலை எண்ணியவாறு இயக்க இயலாமல் போகும், அறிந்துணரும் திறன் குறைவடையும், மறதி ஏற்படும். உணர்ச்சிகளும் மனநிலையும் மாறுபடலாம். பொதுவாக இந்நோய் புகைப்பிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோய், மற்றும் அதிக கொலஸ்ரோல் படிவுகளையுடைய நபர்களைப் பாதிக்கின்றது.

லூவி வஸ்து அறளை பெயர்தல் (Lewy Body Dementia)

இந்நோய் உள்ளவர்களுக்குச் சிந்தித்தல் மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற செயல்பாடுகளில் பெருமளவிலான உயர்வு தாழ்வுகள் ஏற்படலாம். இவர்களின் பொதுப்போக்கு திடீரென மாற்றம் அடைந்து, மிகுந்த குழப்பத்தில் இருப்பர். மேலும் இவர்கள் மற்றவர்கள் புலன்களுக்கு உட்படாத காட்சிகள் மற்றும் சத்தங்களை உணர்ந்து கொள்வார்கள் (மாயப்புலணுர்வுகள்). காரணமில்லாது திடீரென விழுந்தெழும்புவதும் இதனது ஒரு அறிகுறியாகக் கொள்ளப்படுகின்றது.

பிரன்டொடெம்போரல் அறளை பெயர்தல் (FrontoTemporal Dementia)

மூளையினது நுதல் சோணை மற்றும் கடைநுதற் சோணை ஆகியவை மிக அதிக அளவுகளில் பதிப்புக்குள்ளாகுவதனால் இவ்வகையான அறளை பெயர்வு ஏற்படுகின்றது. பொதுவாக 50 – 69 வயதுடையவர்களுக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்றும். மூளையின் முன்பகுதி (நுதல் சோணை) ஒருவரது நடத்தை மற்றும் அவரது குணாதிசயத்தைச் செயல்படுத்தும். மூளையின் பக்கவாட்டுப் பகுதி (கடைநுதல் சோணை) ஞாபக சக்திப் பயன் பாட்டிற்கு உதவும். இவ்விரண்டு பகுதிகளும் பாதிப்பதனால் அவற்றினது பிரதான தொழிற்பாடுகள் சார்ந்த அறிகுறிகள் தோன்றும்

அறளை பெயர்தலை ஏற்படுத்தும் இடர்தகவுள்ள ஏனைய காரணிகள்

 • நாட்பட்ட, சிகிச்சையளிக்கப்டாத மனச்சோர்வு
 • அளவுக்கு அதிகமான மது அருந்துதல்
 • சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தைரொய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
 • சிலவகைப்பட்ட விட்டமின் குறைபாடுகள்
 • நாட்டபட்ட நீரிழிவு நோய் மற்றும் ஏனைய தொற்றா நோய்கள்

அறளை பெயர்தலின் அறிகுறிகள்

சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை என நம்புவார்கள். யாரேனும் உதவி செய்ய முன் வந்தால் அவர்களிடம் கோபம் கொள்வார்கள். பாதிக்கப்பட்டவரின் ஆளுமை, பொதுப்போக்கு மற்றும் மற்றவர்களோடு பழகும் தன்மை முற்றிலுமாக மாறிவிட்டதாக உறவினர்களுக்கு புலப்படும்.

நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் பாதிக்கும். அவர்களால் மற்றவர்களுடைய பெயர் மற்றும் இடங்களின் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும். மற்றவர்களைப் புரிந்து கொள்வதும், மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் கடினமாக இருக்கும்.

பொதுவாக மற்றவர்களோடு பேசும் போது சரியான, பொருத்தமான வார்த்தைகளை உபயோகிப்பது கடினமாக இருக்கும். தமக்கு மிகவும் தெரிந்த நபரின் பெயரை மறப்பதாலும், தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது கடினமாக இருப்பதாலும் அவர்கள் விரக்தியும் மனச்சோர்வும் அடைவார்கள்.  சில நேரங்களில் தமது உடைமைகளை வைத்த இடம் நினைவில்லாததால், அவற்றை யாரோ எடுத்துச் சென்றுவிட்டதாக அல்லது களவாடிச் சென்றுவிட்டதாக அவர்கள் எண்ணுவார்கள்.

மேலும், அறளை பெயர்வு ஏற்பட்டவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க இயலாது, மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளலாம். தமது பொறுப்புக்களை மறந்து போகலாம். செய்ததையே மீண்டும் மீண்டும் செய்யலாம். முரட்டுத்தனமாகவும், எரிச்சலுடனும், கூச்சமற்ற வகையிலும் நடந்து கொள்ளலாம். சரளமாகப் பேசும் திறனும், மனதில் இருக்கும் ஊக்குவிப்பும் சிலருக்குக் குறையலாம்.

சில நேரங்களில் அவர்கள் வார்த்தைகளின் அர்த்தங்களை மறந்து விடலாம். மற்றைய நேரங்களில் தகுந்த வார்ததைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

அறளை பெயர்தலின் ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் என்ன செய்யலாம்?

 • நாட்குறிப்பை பயன்படுத்தலாம். அன்றாட தேவைகளையும் நியமனங்களையும் பட்டியலிட்டுக் கொண்டால் அவற்றை நினைவுபடுத்திக் கொள்வதற்கு அது உதவியாக இருக்கும்.
 • பிடித்த புத்தகங்களையும், செய்தித்தாள்களையும் படிக்கலாம். குறுக்கெழுத்துப் புதிர், சிறிய கணித்தல்கள், ஏனைய மூளைக்கு வேலை கொடுக்கும் பயிற்சிகள் மற்றம் விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபடலாம். மனதை உற்சாகத்துடன் வைத்திருப்பதற்கான உடல் பயிற்சி மற்றும் உளப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
 • ஆரோக்கியமான, சமநிலையான உணவை உள்ளெடுக்கலாம்.

அறளை பெயர்தல் ஏற்பட்டவர்களுக்கு மற்றவர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்?

 • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் சலிப்படையாது, பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் விஷயங்களை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தலாம்.
 • பாதிக்கப்பட்டவர்கள் வழமையாகச் செய்த விடயங்களைத் தொடர்ந்து செய்வதற்கு ஊக்குவிக்கலாம்.
 • அறளை பெயர்தலால் ஏற்படும் மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் அவர்களது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதற்கு உதவலாம்.
 • பாதிக்கப்பட்டவர்கள் தமது புரிந்து கொள்ளும் திறனை இழந்து கொண்டு இருப்பார்கள். ஆகையால், அவர்கள் மீண்டும் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் போது அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத விடயங்களைப் பொறுமையாக விளக்கி உதவி செய்யலாம்.
 • பாதிக்கப்பட்டவர்கள் தனது அன்றாட வேலைகளை (முன்பு செய்த வேகத்தைவிட) மெதுவாக செய்யும் போது, அவசரப்பட்டு, குறுக்கிட்டு அவர்களுக்கு உதவி செய்யாது, அவர்களை மெதுமெதுவாகத்தானும் வேலை செய்ய விடுவது நல்லது. இது அவர்களது ஆற்றல் குறைபாட்டினால் உருவாகும் மனச்சோர்விலிருந்து விடுபட உதவுவதுடன், அவர்களின் தன்னம்பிக்கையையும் அதிகரித்துவிடும்.

உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அறளை பெயர்தலின் அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடவும். அறளை பெயர்தலின் வகையைப் பொறுத்தும், குடும்ப சூழ்நிலைகளைப் பொறுத்தும் அவர்களுக்கான சிகிச்சை அளிக்கும் திட்டம் வகுக்கப்படும்.

 

 

Adapted from the article on dementia by The Royal College of Psychiatrists.