ஆளுமை என்பதனை ஒருவருடைய பிரத்தியேகமான குணாதிசயங்களின் தொகுப்பாக விளங்கிக் கொள்ளலாம். அது ஒருவர் சிந்திக்கும், உணரும் மற்றும் நடந்துகொள்ளும் விதத்தைக் குறிக்கும். ஒருவருடைய அடையாளம் மற்றும் ஒருவர் தன்னைப்பற்றிக் கொண்டுள்ள உணர்வுகள் எப்படிப்பட்டவை என்பவற்றை இது பிரதிபலிக்கும்.
ஒவ்வொருடைய ஆளுமையும் தனித்துவம் வாய்ந்தது. வெவ்வேறான வாழ்க்கை அனுபவங்களை மக்கள் கடந்துசெல்லும் போது அவர்களது ஆளுமைகள் வளர்ச்சியடைகின்றன. பொதுவாக, பெரும்பாலானோர் தமது கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, தேவைப்படும்போது தமது நடத்தை வெளிப்பாடுகளை மாற்றிக்கொள்ளத் தேவைப்படும் போதுமான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பார்கள்.
அவ்வாறான நெகிழ்வுத் தன்மையற்ற, ஏனையவர்களோடு எளிதில் ஒத்துப்போகாத, இறுக்கமான குணாதிசயங்களைக் கொண்டிருந்து, அதனால் தாமும் வருந்தி, மற்றையவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் கோளாறுள்ள ஆளுமைகளாகின்றன. ஆளுமைக் கோளாறு இருக்கும் ஒருவருக்கு அவரது கோளாறுள்ள, பிரச்சினைகளைக் கொடுக்கின்ற நடத்தைமுறைகளைக் கட்டுப்படுத்துவதென்பது மிகவும் சிரமமானதாக இருக்கும். ஆளமைக் கோளாறுள்ளவர்கள் தமது அன்றாட அலுவல்களை சமாளிப்பதில் சிரமப்படும் அளவிற்குக் கடும் எல்லைதொடும் எண்ணங்களையும், உணர்சிகளையும் கொண்டிருக்கலாம்.
ஆளமைக் கோளாறுள்ள பலர் தமது இயல்புகளைக் கட்டுப்படுத்த இயலாத விதங்களில் செயல்படுவார்கள். மற்றும் அவரகள் சூழல்களுடனும், ஆட்களுடனும் தம்மைத் தொடர்புபடுத்திக் கொள்வதில் சிரமப்படுவார்கள். இந்தச் சவால்களின் காரணமாக, அவர்களுடைய தொடர்புறவுகள், மற்றவர்களுடனான சமூக நேர்கொள்ளல்கள், நாளாந்தச் செயற்பாடுகள், வேலை மற்றும் படிப்பு போன்ற விடயங்களில் அவர்கள் கணிசமானளவு பிரச்சினைகளையும், மட்டுப்பாடுகளையும் அடிக்கடி எதிர்கொள்வார்கள்.
ஆளுமைக் கோளாறுகள் என்பன, அதனால் வருந்துபவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ துன்பத்தை ஏற்படுத்தும் மனப்பாங்கு மற்றும் நடத்தைமுறைகளைக் கொண்டுள்ள ஒருவகை உளநலப் பிரச்சினைகளாகும். ஆளுமைக் கோளாறுகளைத் தோற்றுவிக்கும் மற்றும் தோற்றுவிக்கவல்ல காரணிகள் பல்வகைமைத் தன்மை வாய்ந்தவை. அத்துடன் ஆளுமைக் கோளாறுகளின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்பவை பரந்துபட்டவையாகும்.
ஆளுமைக் கோளாறுகள் இருப்பவர்கள் தமக்கு ஆளமை கோளாறு உடைய ஒன்றாக இருக்கின்றது என்பதை அனைத்து வேளைகளிலும் உணர மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் சிந்திக்கும் விதமும், நடந்துகொள்ளும் விதமும் அவர்களைப் பொறுத்த வரையில் மிகவும் இயற்கையானதாகவும், அவர்களுடைய ஆளுமையின் பிரிக்க முடியாத அங்கங்களாகவும் இருப்பதைப் போலவே அவர்களுக்குத் தோன்றும்.
அறிகுறிகள்
ஆளமைக் கோளாறுகளின் பொதுவான அறிகுறிகள் வருமாறு:
- அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள்
- மற்றவர்கள் மீதான அதிகளவு சார்பு
- சுய ஆராதனை (தீவிர தற்பெருமை)
- தடுமாற்றங்கள் நிறைந்த உறவுமுறைகள்
- சமூகத் தனிமை
- திடீர் கோப வெளிப்பாடுகள்
- மற்றவர்களை நம்பாமை மற்றும் சந்தேகித்தல்
- நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வதில் சிரமம்
- உடனடி மனநிறைவிற்கான எதிர்பார்ப்பு
- உணர்ச்சிப் பீறல்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமம்
- மது அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகம்
- சுய தீங்கிழைப்பு, தற்கொலை எண்ணங்கள் மற்றும் முயற்சிகள்
ஆளமைக் கோளாறுகள் உடையவர்கள் இந்த அறிகுறிகளில் சிலவற்றை அவ்வவ்போது வெளிப்படுத்தலாம். ஆயினும், ஆளுமைக் கோளாறு உள்ள ஒவ்வொருவருக்கும் இவ்வனைத்து அறிகுறிகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
காரணங்கள்
ஒருவருடைய ஆளுமையானது கோளாறுள்ள ஓர் ஆளுமையாக உருவெடுப்பதற்குப் பல்வேறு வகையான தனிமனித, குடும்ப, சூழல் மற்றும் சமூகக் காரணிகள் இடைவினையாற்றுகின்றன.
- ஆளுமைக் கோளாறுகள் அல்லது மனநலப் பிரச்சினைகளைக் கொண்ட குடும்ப வரலாறு
- குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த துஷ்பிரயோகங்கள் அல்லது புறக்கணிப்புக்கள்
- குழந்தைப்பருவத்தில் இருந்த நிலையற்ற அல்லது குழப்பமான குடும்ப வாழ்க்கை
- குழந்தைப்பருவத்தில் ஏற்படுகின்ற நடத்தைக் கோளாறுகள்
- குழந்தைப்பருவத்தில் பெற்றோரை இழந்திருத்தல்
- வேறு குறிப்பிடத்தக்க பேரதிர்ச்சிகளுக்கு முகங்கொடுத்தல்
ஆளுமைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளை அவர்கள் விருப்பப்பட்டு வரவழைத்துக் கொள்வதில்லை, அத்துடன் இந்தக் கோளாறு உருவாவதற்கு அவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
ஆளுமைக் கோளாறுகளின் சில வகைகள்
சந்தேக இயல்புடைய ஆளுமைக் கோளாறு: ஒருவரையும் நம்பாமை, எல்லா விடயங்களையும் சந்தேகத் தன்மையோடு பார்த்தல் மற்றும் அணுகுதல், ஏனையவர்களின் செயல்கள் யாவும் தங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றமையாகவே இருக்கின்றன எனத் (தவறாகத்) தற்கணித்துக் கொள்ளல், சண்டை பிடித்தல் (வீண்) விவாதம் செய்தல்.
சமூகவிரோத ஆளுமைக் கோளாறு: முரட்டுத்தனமாகவும், வன்முறைத்தனமாகவும், அல்லது மற்றவர்களது உரிமைகளை மீறும் அளவிற்குச் செயற்படுவதுடன், மற்றவர்களைப் பற்றிக் கவனயீனமாகவும், தமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் இயல்புகள் அற்ற தன்மையோடும் இருத்தல்.
விலகியிருக்கும் ஆளுமைக் கோளாறு: விமர்சனம் அல்லது நிராகரிப்பு ஆகியவற்றினால் அதீத உணர்ச்சிவசப்படல், மற்றும் அளவுகடந்த கூச்ச சுபாவத்தைக் கொண்டிருத்தல்.
விளிம்புநிலை ஆளுமைக் கோளாறு: திடீர் உணர்சிவசப்படலுக்கு ஆளாகிச் செயல்படல், பெரும் ஆபத்தான காரியங்களை மேற்கொள்ளல், உறவுகளை உருவாக்குவதிலும், அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதிலும் குறைபாடுகளைக் கொண்டிருத்தல், கணிசமான துயரத்திற்கு ஆளாதல், கோபச் சீற்றங்கள் அல்லது நிலையற்ற மனநிலைகளைக் கொண்டிருத்தல் மற்றும் தமக்குத் தாமே தீங்கு விளைவுக்கும் நடத்தைகளில் ஈடுபடுதல்.
தற்காதல் ஆளுமைக் கோளாறு: மற்ற அனைவரையும் விட தாமே மிகவும் சிறப்பானவர் என்று நம்பிக்கொண்டிருத்தல் மற்றும் நடந்து கொள்ளல்.
கண்டித (கட்டாய) ஆளுமைக் கோளாறு: மற்றவர்களை அளவுக்கதிகமாய்க் கட்டுப்படுத்தும் தன்மை, எதிலும் முழுமை நாடும் எண்ணம், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் மூழ்கியிருத்தலும் அவற்றை இறுக்கமாகக் கடைப்பிடித்தலும், ஒரேவிதமான ஒழுங்கோடமைந்த நடத்தைகளை வெளிக்காட்டல் மற்றும் அவற்றை மற்றவர்களிடமும் எதிர்பார்த்தல்.
சமூகத் தவிர்ப்பு (தனிமையாயிருக்கும்) ஆளுமைக் கோளாறு: சமூக உறவாடல்களைக் குறைத்துக் கொள்ளல், மற்றவர்களுடைய உணர்வுகள் பற்றி உண்மையில் கவனயீனமாக இருத்தல், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, மாயாஜாலச் சிந்தனைகளைக் கொண்டிருத்தல், வழமைக்கு மாறான எண்ணங்களையும், புலன்வாங்கல்களையும் கொண்டிருத்தல்.
ஆதரவுதவி பெறல்
சிகிச்சையளிக்கும் விதமானது ஆளுமைக் கோளாறின் வகையைப் பொறுத்தது. பல ஆளுமைக் கோளாறுகள் உளநலப் பிரச்சினைகளோடு சம்மந்தப்பட்டவையாக் காணப்படுவதோடு, அவை நீண்ட காலத்திற்கும் தீராதவையாக நின்று நீடிப்பவை. எனவே இவற்றிற்குத் தகுந்த உளவியல் உதவிகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளல் அவசியமானது.
ஆளுமைக் கோளாறுகளுக்கான செயலூக்கம் மிக்க சிகிச்சைகளைப் பற்றிய புரிதல்கள் தற்போது வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. எனவே, ஆதரவு, உதவி மற்றும சிகிச்சைகைள எவ்வளவு முன்கூட்டியே நாடுகின்றோமோ, அந்த அளவிற்கு அவை செயலூக்கம் நிறைந்தவையாக அமைந்திருக்கும்.
ஆளமைக் கோளாறுகளுக்கான உதவியை நாடும்பொழுது அதனை உங்களுடைய மருத்துவரிடமிருந்து ஆரம்பிப்பது நல்லது.
Adapted from an article on Personality Disorders by ‘Embrace multicultural mental health’, run by Mental Health Australia.