மனம் என்பதற்கான ஒரு குறிப்பான அமைவிடம் எமது உடலில் இல்லை. ஆயினும், மனம் என்பதனை பெரும்படியாக அறிகை, உணர்ச்சி, நடத்தை என்னும் மூன்று தொழிற்பாடுகளின் கூட்டு என விளங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு மனம் என்பதனை ஓர் இயங்கியல் விடயமாக விளங்கிக் கொண்டால், அந்த இயக்கப்பாடுகளில் பெரும்பாலானவற்றை எமது மூளையின் வெவ்வேறு பகுதிகள் பொறுப்பெடுத்துச் செய்து கொண்டிருப்பதனை உணரலாம். ஆயினும், வெறுமனே மூளையின் தொழிற்பாடுகள் என்பதற்கும் அப்பால் மனம் என்று ஒன்று இயங்குகின்றது என்பதனை பல தத்துவவியலாளர்களும், உளவியலாளர்களும் நம்புகிறார்கள்.
சற்று ஆழமாகக் கவனித்தால், மனதின் தொழிற்பாடுகள் என மேலே குறிப்பிட்ட அறிகை, உணர்ச்சி, மற்றும் நடத்தை ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்போடும், கொடுத்து வாங்கும் ஒத்திசைவோடும் இயங்கிக் கொண்டிருப்பதனை உணரலாம். உதாரணமாக, எமது உணர்ச்சி ஏதோவொரு காரணத்துக்காகக் கவலை எனும் ஒரு வடிவத்தை எடுக்கின்றபோது, எமது எண்ணங்கள் (அறிகை) எமது தோல்விகள் பற்றியும், நிறைவேறாத விடயங்கள் பற்றியுமான மறை எண்ணங்களாக உருவெடுப்பதனையும், எமது நடத்தைக் கோலமானது உற்சாகம் குறைந்த ஒன்றாகவும், ஒதுங்கியிருப்பதாகவும் மாற்றம் பெறுவதனையும் நாம் அவதானிக்கலாம். அதாவது, மனதின் அடிப்படையான இந்த மூன்று தொழிற்பாடுகளிலும் ஏதாவது ஒன்றில் ஏற்படுகின்ற ஒரு மாற்றமானது, மற்றைய இரண்டு கூறுகளையும் பாதித்து விடுகின்றமையைக் காணலாம்.
எமக்கு உளப்பிரச்சினைகள், உளநோய்கள் ஏற்படுகின்ற வேளைகளிலும் அடிப்படையில் மனதினுடைய இந்த மூன்று கூறுகளில் ஒன்றே முதலில் பாதிக்கப்படுகின்றது. பின்பு மற்றவை அதனைப் பின் தொடர்கின்றன. உளப்பிளவை, அறளை போன்ற உளநோய்கள் இந்தப் பொதுவிதிக்குச் சற்று விதிவிலக்கானவை.
இந்த அவதானிப்புகளின் அடியொற்றி, உளப்பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளைக் கருத்துருவாக்கம் செய்யும்பொழுது, குறிப்பாக உளசிகிச்சைகளை வடிவமைக்கும் போது, ஆரம்ப காலங்களில் மனதின் இந்த மூன்று தொழிற்பாட்டுக் கூறுகளில் ஒன்றைத் தமது பிரதான இலக்காகக் கொண்டு அச்சிகிச்சைகள் ஆரம்பமாயின. அறிகைச் சிகிச்சை (Cognitive Therapy), நடத்தைச் சிகிச்சை (Behaviour Therapy), உணர்ச்சிசார் சிகிச்சை (Emotive Therapy) என அவை உருவாகின. எமது எண்ணங்களில் மாற்றங்கள் உருவாகின்றபோது, அது எமது உணர்ச்சிகளையும், நடத்தைகளையும் மாற்றுகின்றன. எமது உணர்ச்சி வெளிப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றபோது அவை எமது நடத்தைகளிலும், நாம் சிந்திக்கும் முறைகளிலும் மாற்றங்களை உருவாக்குகின்றன. இவை தவிர, தனியே எமது நடத்தைகளில் மாற்றங்களை உருவாக்கி, அவற்றை வளர்த்தெடுக்கும் பொழுதும், அதன் விளைவாக எமது அறிவுசார் தொழிற்பாடுகளிலும், உணர்ச்சி வெளிப்பாடுகளிலும் மாற்றங்கள் உருவாக்குகின்றன.
காலம் செல்லச் செல்ல, தனியே மனதினுடைய ஒரு தொழிற்பாட்டுக் கூற்றை மட்டும் இலக்கு வைக்காது, ஒன்றுக்கு மேற்ப்பட்ட கூறுகளை இலக்காகக் கொண்ட பல உளசிகிச்சை முறைகள் உருவாகின. உதாரணமாக, அறிகைசார் நடத்தைச் சிகிச்சை (Cognitive Behaviour Therapy), தர்க்கரீதியிலான உணர்ச்சி வெளிப்பாட்டுச் சிகிச்சை (Rational Emotive Therapy) போன்ற சிகிச்சைகள் தோற்றம் பெற்று வளர்ச்சிடைந்தன. இவ்வாறான இணைந்த சிகிச்சை முறைகளில் அறிகைசார் நடத்தைச் சிகிச்சையானது மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாக உருமாறியது. பல உளவியலாளர்களும், கல்வி நிறுவனங்களும் அதனை வளர்த்தெடுத்து, ஆய்வுகள் ஊடாகப் புடம்போட்டு, மெருகுபடுத்தியிருக்கிறார்கள். அண்மைக் காலத்தில் உருவாகிய பல்வேறு புதிய உளசிகிச்சை முறைகளும் விரும்பியோ, விரும்பாமலோ அறிகைசார் நடத்தைச் சிகிச்சையின் அடிப்படை விதிகளை அடியொற்றியவாறு, குறிப்பான சில புதிய விடயங்களை உள்ளடக்கி விருத்தியடைந்து இருக்கின்றன.
மேலைத்தேயத்தில் உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சிகள் தேக்கமடைகின்றபோது, அங்கிருக்கும் உளவியலாளர்கள் கீழைத்தேயத்தில் காலங்காலமாக வழக்கிலிருந்த பல வழிமுறைகளைப் பற்றிக் கவனஞ் செலுத்தத் தொடங்கினார்கள். யோகாசனம், தியானம், நிகழ்காலத்தில் வாழ்தல், மனம்நிறை கவனம், அகநோக்கு போன்றவற்றோடு, வாழ்க்கையை அர்த்தப்படுத்துதல், நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பல விடயங்களும் நடைமுறைகளும் கீழைத்தேய மரபுகளில் செல்வாக்கோடு இருப்பதனை அவதானித்த மேலைத்தேய உளவியலாளர்கள், அந்த விடயங்களை, சிறு சொல்மாற்றங்களோடு அல்லது புதிய சொற்களை அறிமுகப்படுத்துவதனூடு தமதாக்கிக் கொண்டார்கள். காலனித்துவ மரபின் எச்சசொச்சங்களோடும், நவகாலனித்துவத்தினால் உருவாகிய அறிவுத்தள அடிமைத்தனத்தோடும் இருக்கின்ற நாமும், எமது நிறுவனங்களும் மேலைத்தேயத்தினால் உருவாக்கி, எமக்களிக்கப்படும் விடயங்களை, அது எம்மது என்பது உணராமலே ‘அச்சரம் பிசகாது’ பின்பற்றுகிறோம். வெகுவிரைவில் கர்மாவை அடியொற்றிய அறிகைச் சிகிச்சை (Karma Based Cognitive Therapy), சடங்குகளோடு வாழ்தல் (Living with Rituals) போன்ற ‘புதிய’ சிகிச்சை முறைகள் புழக்கத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
உளவியலில் புதிதாகப் புகுவோர்களுக்கும், அதில் தேக்கமடைபவர்களுக்குமான உவப்புத் தத்துவமாக ஆழ்மனம் என்பது இருக்கின்றது. சிக்மண்ட் பிரொய்ட்டினால் பரவலாக்கப்பட்ட நனவு மனம், நனவிலி மனம் என்னும் கருத்துநிலை மாதிரிகளும், இட், ஈகோ, சுப்பர் ஈகோ என்பவற்றுக்கிடையிலாக முரண்பாட்டு மாதிரியும், பின்னர் அவரது மகள் அனா பிரொய்ட்னொல் பரவலாக்கப்பட்ட பாதுகாப்புக் கவசங்கள் எனும் கருத்துநிலை மாதிரியும் இன்னமும் சக்திவாய்ந்தவையாகவும், பொருத்தப்பாடு உடையவையாகவும் அமைந்திருக்கின்றன. இந்த அடிப்படையான தத்துவங்களை அடியொற்றி உருவாகிய சிகிச்சை முறைகள் உளப்பகுப்பாய்வு முறைகளாகவும், ஆழ்மனத்தைக் கையாளும் முறைகளாகவும் உருவாகின. அவை ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமானவையாக இருந்தாலும், தற்காலத்துச் சொல்நெறியில் அவற்றிற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
உளவியலாளர்களுள் இன்னும் ஒரு தொகுதியினர் Counselling எனும் ஓர் உளசிகிச்சை முறையை, உள உதவி வழங்கும் மார்க்கத்தை உருவாக்கினர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் உறைந்திருக்கின்றது என்பதனையும், அந்த ஆற்றல் சிலவேளைகளில் இயங்கமுடியாது அல்லலுறுகின்ற பொழுது, அந்த உள ஆற்றலை மீட்டெடுக்க உதவுகின்ற ஒரு வழியாக, ஒரு பொறிமுறையாக ‘கவுன்சிலிங்’ என்பதனை உபயோகிக்க முடியும் எனவும் அவர்கள் நம்பினார்கள். ஒப்பீட்டளவில் சிக்கலான உளவியல் தத்துவங்களின் பின்புலம், அதிவிசேடமான பயிற்சிகள் போன்ற எவையும் இல்லாது, மிக எளிமையான முறைகளை மட்டுமே உபயோகித்துத் துன்புற்றிருக்கும் ஒருவர் தமது துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு உதவுகின்ற ஒன்றாக இந்தக் ‘கவுன்சிலிங்’ என்பது பரிணாமம் பெற்றது. இதனது எளிமையான பண்பு காரணமாக இந்த முறைமை மிகவும் பிரபல்யமானது. சற்று ஊன்றிக் கவனித்தால், இந்த எளிமையினுள்ளும் மிகக் கனதியான உளவியல் தத்துவங்களும், உளசிகிச்சை முறைகளும் புதைந்து இருப்பதனைக் காணலாம்.
இவ்வாறு தோற்றம் பெற்ற ‘கவுன்சிலிங்’ என்ற செயன்முறையின் பல நுண்கூறுகள் எமது பண்பாட்டில், எமது நாளாந்த உரையாடல்களில், நாம் பொருத்தமானவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுகின்ற செயற்பாடுகளில் விரவிக் காணப்படுகின்றன. ஆயினும், அவை மிகவும் இயல்பாக, அடையாளக் குறியில்லாது, முறைசாராது நடைபெறுகின்றன.
ஆங்கிலத்தில் Counselling என்ற சொல் பல்வேறு அர்த்தங்களோடும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. அது உளவியல் உதவி அல்லது சிகிச்சை சார்ந்து பிரயோகிக்கப்படும் போது அது தனக்கேயுரித்தான அடிப்படை விதிகளையும் முறைமைகளையும் கொண்டிருக்கும். இவ்வாறு உளவியல் உதவியாக, உளச் சிகிச்சையாக ‘கவுன்சிலிங்’ என்ற பதத்தை உபயோகிக்கத் தொடங்கியபோது, அது முதலில் ‘உளவளத்துணை’ எனும் நாமத்தைப் பெற்றது. பின்பு உளவளத்துணை என்ற சொல்லைவிட ‘சீர்மியம்’ என்ற சொல்லே பொருத்தமானது எனும் ஒரு கருத்துருவாக்கம் தோன்றியது.
ஆயினும், இந்த எளிமையான, பிரபல்யமான, மிகவும் பரவலாக உபயோகிக்கப்படுகின்ற ‘கவுன்சிலிங்’ செயன்முறையானது தனக்கேயுரித்தான பல மட்டுப்படுத்தல்களைக் கொண்டிருக்கின்றது என்பதே யதார்த்தமாக இருக்கின்றது. இன்னுமொரு வகையில் சொல்லப் போனால், இந்தக் ‘கவுன்சிலிங்’ என்பது சர்வரோக நிவாரணி அல்ல. குறிப்பான, மற்றும் சிக்கலான பல உளப்பிரச்சினைகளுக்கு எளிமையான ‘கவுன்சிலிங்’ மட்டும் தீர்வுகளைத் தந்துதவாது. அவ்வாறான நிலைமைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆராய்ச்சிகளால் நிரூபணமான சில விசேட உளச்சிகிச்சை முறைகளே பயன்தருவனவாக இருக்கும்.
Adapted from Dr. S. Sivayokan’s review for the book “சீர்மியத்தில் சிறப்பு முறைகள்” written by Kokila Mahendran