Mental Health Society Tellippalai, Jaffna.
Close

உளநலப் பராமரிப்பில் சமூக சேவையாளரின் பங்கு

உளநலப் பராமரிப்பு என்பது வெறுமனே மருந்துகளை வழங்குவது, அல்லது உளவியல் ரீதியிலான சிகிச்சைகளை வழங்குவது மட்டுமல்ல. அது ஒருவருடைய தொழிற்படு நிலையை மேம்படுத்துவதோடு, அவருடைய உளசமூகப் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்குவதனையும் இணைத்துக் கொண்டிருக்கும். உளநலப் பராமரிப்பில் ஈடுபடும் சமூக சேவையாளர்கள், உளநல சேவைகள் முழுமையை அடைவதற்கு உதவி செய்வார்கள்.

பொதுவாக, சமூக சேவையாளர் என்போர் உதவி தேவைப்படுபவர்களுக்கான நேரடியான களப்பணிகளை வழங்குவதோடு, அவர்களின் சிக்கல்களை நிவர்த்தி செய்தல், சமூக ஆய்வுகள், சமூக ஒருங்கிணைப்பு, மற்றும் சமூக விழிப்புணர்வுகளில் ஈடுபடுதல், நலிவுற்றவர்களை ஆதரித்தல், நலிவுற்றவர்களுக்குச் சாதகமான மனப்பாங்கு மாற்றங்களை ஏற்படுத்தல் போன்றவற்றில் திறனாற்றலுடன் செயற்பட்டு, உதவி தேவைப்படும் மக்கள் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கைத்தரம் மற்றும் உளநலத்தை மேம்படுத்துவதற்கான தொழில்முறைப் பயிற்சிகளைக் கற்றுத்தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சமூகத்தைப் புரிந்து கொண்டு, சமூக நியதிகளை அறிந்து கொண்டு, வறுமையால் பாதிக்கப்பட்ட, வலுவிழந்த, நோயால் பீடிக்கப்பட்ட, வேலையற்ற, தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ள, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் மேற்கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார்கள். மேலும், சிறந்த சமூக சேவையாளர்கள் மனிதரது மனப்பாங்கு, வளர்ச்சி, மற்றும் சமூக, கலாச்சார, பொருளாதார இடைத்தொடர்புகள் பற்றிய பூரண அறிவைக் கொண்டிருப்பார்கள். அத்தோடு, அவர்கள் கருணை, இரக்கம், அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனம், சிறந்த ஆளிடைத்தொடர்புகள், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமை, செவிமடுத்தல், ஒழுங்குபடுத்தும் ஆற்றல் போன்றவற்றையும் தன்னகத்தே கொண்டிருப்பார்கள்.

உளநோயாளிகளின் பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக மற்றும் சூழல் காரணிகளை அறிந்துகொண்டு, அதற்கான பரிகாரங்களையும் சிகிச்சையில் இணைத்துக் கொள்ளும்போதே உளநலப் பராமரிப்பு வினைத்திறன் வாய்ந்ததாக மாறுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே மனநல மருத்துவத்தில் சமூக சேவையாளர்கள் அதிகளவாக உள்வாங்கப்பட்டார்கள். இவ்வாறு உள்ளீர்க்கப்பட்ட சமூக சேவையாளர்கள் உளமருத்துவ சமூகசேவையாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

உளமருத்துவ சேவைகளை வழங்குவதில் சமூக சேவையாளர்கள் பல்வேறு பங்குகளை வழங்கி, உளநோய்கள் மற்றும் உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உளநலம் மற்றும் உடல் நலத்தை மேம்படுத்த உதவுகின்றார்கள். உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், அவர்களது உளசமூகப் பிரச்சினைகளை அடையாளங் காணுதல், அவற்றிற்கான பொருத்தமான இடையீடுகளை மேற்கொள்ளுதல், சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்கப்பெறாத சேவைகளை அடைய வழிசமைத்தல், அவர்களுக்கான ஆதரவுகளைத் திரட்டுதல், அவர்களுக்கு உதவக்கூடிய வலையமைப்புகளை ஏற்படுத்துதல் போன்ற சேவைகளையும் வழங்குகின்றார்கள். இவர்கள் உளமருத்துவப் பிரிவு, சுகாதார சேவைகள் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம் என்பவற்றுடனும், உதவி தேவைப்படுபவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்துடனும் இணைந்து செயற்படுவார்கள்.

உளமருத்துவ சமூக சேவையாளர்கள் தேவையான இடங்களில் உளவள ஆலோசகர்களாகவும் தொழிற்பட்டு, நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பங்களிற்கும் உதவிசெய்வார்கள். பிரதானமாக, அவர்கள் நோயாளிகளைக் கணிப்பீடு செய்து, அவர்களது நோய் நிலைமைகளை அடையாளங் காணுவதோடு, நோயாளர்களுக்குத் தேவையான பராமரிப்புக்குரிய வழிமுறைகளையும் விருத்தி செய்வார்கள். மேலும், நோயாளிகளுக்கான தனிப்பட்ட ஆலோசனைகளையும், நோயாளிகளைப் பராமரிப்பதில் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.

உளமருத்துவ சமூக சேவையாளர்கள் நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும் சிகிச்சை முறைகளை விளக்கி, அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள். அத்துடுன் அவர்கள் நோயாளிகளின் தகவல்களைச் சேமித்து வைப்பதோடு, நோயாளிகள் தொடர்பான அறிக்கைகளையும் தயாரித்து, நோயின் போக்கினையும், சிகிச்சையின் விளைவுகளையும் மேற்பார்வை செய்வார்கள். மேலும், நோயாளிக்கான சிகிச்சைகளை தனியாக அல்லது குழுக்களாக ஒழுங்கு செய்து, அந்தச் சிகிச்சை முறைகளை ஏனைய உறுப்பினர்களுக்கும் விளக்கி, தேவையேற்படின் ஏனைய வெளி அலுவலர்களின் உதவிகளைப் பெற்று, நோயாளிகளை மீண்டும் சமூகத்திற்குள் இணைப்பதற்கான வழிமுறைகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.

உளமருத்துவ சமூக சேவையாளர்கள், உளநலப் பிரச்சினைகளை கொண்டிருப்பவர்களுக்குப் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம், அவர்கள் அப்பிரச்சினைகளைச் சமாளித்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவிசெய்வார்கள். இவற்றைவிட, நேயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ மற்றும் பொருளாதார சேவைகளை பெறுவதற்கும் அவர்கள் வழிசமைப்பார்கள். அத்துடன் குணமடைந்து வரும் நோயாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒழுங்குகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள். அரச மற்றும் அரச சாற்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடி நோயாளி மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான நிதிப் பங்களிப்பினைப் பெற்றுக்கொடுப்பதிலும் உளமருத்துவ சமூகசேவையாளர்கள் முனைப்புடன் தொழிற்படுவார்கள்.

தங்குமிடம் இல்லாத உளநோயாளர்களுக்காக, பணக்காரர்கள் மற்றும் சொத்துப்பத்து உள்ளவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் உளமருத்துவ சமூக சேவையாளர்கள் உதவுவார்கள். இயலுமானவரை, நோயாளிகளோ, அல்லது நோயாளிகளின் குடும்பத்தினரோ இன்னொருவரில் தங்கியிராது சுயமாகச் செயல்படுமாறும் அவர்கள் வழிசமைப்பார்கள்.

இவ்வாறு உளநலப் பராமரிப்பில் ஒரு சமூக சேவையாளரின் பங்கு இன்றியமையாத ஓர் அங்கமாகின்றது. நோயாளரின் பல்வேறு வளர்ச்சிப்படிகளில், மருத்துவ சமூகத்தோடு சமூக சேவைளாளர்களின் பங்கும் தேவைப்படுகின்றது, அதுவே நோய்வாய்ப்பட்டவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு மிகவும் உறுதுணையாகவும் அமைந்திருக்கின்றது.

 

Compiled by K. Mahinthan