தொழில்வழிச் சிகிச்சை முறை என்பது நோய் காரணமாகவோ, திறனாற்றல் குறைபாடு காரணமாகவோ பாதிக்கப்பட்ட ஒருவரை, அவரது அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளிலும், தொழில்களிலும் ஈடுபட உதவுவதன் மூலம், அவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் ஒரு சிகிச்சை முறையாகும்.
உளநலன் சார்ந்த நோய்கள் மற்றும் கரிசனங்களைக் கொண்டவர்களால் அவர்களது அன்றாடச் செயற்பாடுகளிலும், தொழில்களிலும் வழமைபோல் ஈடுபட முடியாமல் போகலாம். இது அவர்களது உளநலனை மேலும் பாதிப்பது மட்டுமன்றி, அவர்களுக்குச் சமூக பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் காரணமாகலாம்.
தொழில்வழிச் சிகிச்சை முறையானது ஒருவரது குறைகளைத் தாண்டி, புதுமையான வழி வகைகளைப் பயன்படுத்தி, அவரைத் தனது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட உதவும் இசைவாக்க உத்தியை அடிப்படையாகக் கொண்டது.
இச்சிகிச்சை ஒருபுறத்தில் தொழிலின் தேவைப்பாடுகளையும், மறுபுறத்தில் பாதிக்கப்பட்டவர்களின் திறன், இயலாமை ஆகியவற்றையும் ஆராய்ந்து, மாற்று வழிகளின் ஊடாக அத்தொழிலைச் செய்வதற்கு உதவுகின்றது. மேலும், தொழில்வழிச் சிகிச்சையானது உளநலம் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரின் சமூக உளநலன், உணர்வுசார் நலன் ஆகியவற்றை மேம்படுத்தவும், அவரில் காணப்படும் மறையான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முறைகளைத் தடுக்கவும், இவற்றின் மூலமாகப் பாதிக்கப்பட்டவரினதும் அவரைச் சார்ந்தவர்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவுகின்றது.
மனச்சோர்வு, பதகளிப்பு போன்ற பொதுவான உளப்பிரச்சினைகள் உள்ளவர்கள் இச்சிகிச்சையின் மூலம் தமது தொழிலை செவ்வனே செய்ய முடிவதோடு மட்டுமல்லாது, அவற்றிலிருந்து குணமடையவும் முடியும். அதுபோல் உளப்பிளவை, கடுமையான மனச்சோர்வு போன்ற பாரிய நோய்களின் தாக்கத்தினால் தமது தொழிற்படும் ஆற்றல்களில் குறைபாடுகள் ஏற்பட்டவர்களுக்கும் இச் சிகிச்சை முறையானது பெரிதும் உதவுகின்றது.
Compiled by S. Vithyasahar