பாரிய உளநோய்களானவை அவற்றினுடைய நேரடியான நோய் அறிகுறிகளின் தாக்கத்திற்கும் அப்பால் சில வேளைகளில் ஒருவருடைய தொழிற்படும் ஆற்றலையும் பெருமளவில் பாதித்து விடுகின்றன. பாரிய உளநோய்களின் தாக்கத்துக்குள்ளானவர்கள் தமது தற்சுகாதார நடவடிக்கைகளைத் திருப்திகரமாக நிறைவேற்றுவதிலும், தமது நாளாந்தத் தொழிற்பாடுகளைத் திறனாற்றலுடன் செய்வதிலும் குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம். மேலும், அவர்களது தன்னியல்பான உற்சாகம், உந்துசக்தி ஆகியனவற்றிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவையனைத்திற்கும் மேலாக, பாரிய உளநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமது உணர்ச்சிகளைப் பொருத்தமான முறையில் வெளிக்காட்டுவதிலும், மற்றவர்களுடன் திறனாற்றலுடன் தொடர்பாடுதலிலும், புதிய உறவுகளை ஏற்படுத்துவதிலும், அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதிலும், சமூகமயமாதலிலும் குறைபாடுகளைக் கொண்டிருக்கக்கூடும். சுருக்கமாகச் சொன்னால், பாரிய உளநோய்கள் சிலவேளைகளில் அவற்றினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிலும் அவர்கள் சுயமாக இயங்கக்கூடிய, இன்னுமொருவரில் தங்கியிராது வாழக்கூடிய திறன்களை வெவ்வேறு அளவுகளில் பாதித்து விடுகின்றன.
பாரிய உளநோய்களுக்கான மருந்துகள் ஆரம்பத்தில் 1950களிலேயே அறிமுகமாகின. அதன் பின்பு, கடந்த ஆறு தசாப்த காலங்களில் பாரிய உளநோய்களின் சிகிச்சைக்கென விதவிதமான மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை யாவும் பாரிய உளநோய்களினால் ஏற்படுத்தப்படும் பலவிதமான நோய் அறிகுறிகளைக் குறைப்பதற்கு உதவினாலும், அவற்றுள் ஒன்று கூட பாரிய உளநோய்களால் ஏற்படுத்தப்படும் அறிவாற்றல் குறைபாடு மற்றும் தொழிற்பாட்டுக் குறைபாடு என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது அக்குறைபாடுகளில் இருந்து நிவர்த்தி பெறுவதற்கு உதவ முடியாத ஒரு துரதிஷ்டமான நிலையே நிலவுகின்றது.
இந்தப் பின்னணியில்தான் பாரிய உளநோய்களினால் ஒருவரில் ஏற்படுகின்ற தொழிற்படுநிலை சார்ந்த குறைபாடுகளில் இருந்து அவரை மீட்டு, ஓரளவுக்கேனும் அவர் நோய் ஏற்படுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு, அல்லது அந்நிலையை அண்மித்த ஒரு தொழிற்படு நிலைக்குக் கொண்டு வருவதனை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள், உளமருத்துவத் துறையில் அறிமுகமாயின. இந்த நடவடிக்கைகள் யாவும் கூட்டாக “புனர்வாழ்வு நடவடிக்கைகள்” எனப் பெயர் பெற்றன.
உளமருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளானவை உளநோயின் தாக்கத்திற்கு ஆளான ஒருவர் தனது மருத்துவரை முதன்முதலாகச் சந்திக்கும் கணத்திலிருந்தே ஆரம்பமாகி விடுகின்றது என்று கூறலாம். இன்னுமொரு வகையில் கூறுவதாயின், பாரிய உளநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரைச் சந்திக்கும் ஓர் உளமருத்துவர் தனது முதலாவது சந்திப்பிலேயே அந்நபரது தொழிற்படும் ஆற்றல் பற்றிய ஒரு மதிப்பீட்டையும், அந்நபருக்குத் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றிய திட்டமிடலையும் ஆரம்பித்துவிடுவார். இந்தப் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பல்வேறுவிதமான ஆலோசனைகள், சிறியளவிலானதான வீட்டு வேலைகள், கட்டமைக்கப்பட்ட நாளாந்தச் செயற்பாடுகள், பொழுதைப் பிரயோசனமாகப் போக்குகின்ற செயற்பாடுகள், உடற்பயிற்சிகள், விளையாட்டுக்கள், தொழில்சார் நடவடிக்கைகள், திட்டமிடல் தொடர்பான பயிற்சிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட செயற்பாடுகள், வருமானம் ஈட்டும் வாழ்வு முறைமைகள் போன்ற பல்வேறுவிதமான செயற்பாடுகளைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றன.
ஆயினும், சிலவேளைகளில், அல்லது சிலவிதமான சூழ்நிலைகளில் இந்தவிதமான புனர்வாழ்வுச் செயற்பாடுகளை ஒரு மருத்துவ விடுதியில் வைத்தோ, அல்லது பாரிய உளநோயின் தாக்கத்துக்குள்ளானவரின் குடும்ப மற்றும் சமூகச் சூழலில் வைத்தோ செயலாக்கம் பெறவைக்க முடியாத யதார்த்தம் நிலவுகின்றது. இந்த யதார்த்தத்தினை அடியொற்றியே உளநோய்களினால் தமது தொழிற்படும் ஆற்றல்களிலும், சமூகமயமாதற் திறன்களிலும் கடுமையான பாதிப்புக்குள்ளானவர்களை ஒரு குணமாக்கும் தன்மைகள் நிறைந்த ஓர் ஆதரவான சூழலில் போதியளவு காலம் தங்க வைத்து, அவர்களைப் புனர்வாழ்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி, அவர்களது வாழ்க்கைத் திறன்களை மீட்டெடுப்பதற்கான ஒரு முயற்சியாகத் “தங்கி நின்று புனர்வாழ்வு பெறுகின்ற நிலையங்கள்” தோற்றம் பெற்றன.
பாரிய உளநோய்களின் தாக்கத்திற்குள்ளானவர்கள் பல வேளைகளில் தமது ஆரம்ப சிகிச்சையினை வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதன் பின்பு, அவர்கள் வீடு திரும்பித் தமது குடும்பத்தவர்களோடும், சமூகத்தோடும் மீளிணைக்கப்படுவதற்கு முன்பதாக, ஓர் இடைத்தங்கல் வதிவிடத்தில் தங்கியிருந்து தமது திறன்களை மீளப் பெறுவதற்கான இல்லங்கள் உருவாகின. இந்த வகையிலான இல்லங்கள் ஐரோப்பிய கருத்துநிலையில் “இடைவழி இல்லங்கள்” (halfway homes) ஆகப் பரிமாணம் பெற்றன. இலங்கையில் அவை “இடைத்தங்கு பராமரிப்பு நிலையம்” (intermediate care unit) எனப் பெயர் மாற்றம் பெற்றன.
இவ் புனர்வாழ்வானது, உளநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு அவர்கள் சமூகத்தில் ஓர் நல்ல நிலையில் இருப்பதற்கும் உதவுகின்றது. உண்மையில் புனர்வாழ்வு என்பதும் ஓர் சிகிச்சை முறையே.
Extract from an article by Dr. S. Sivayokan, published in Resurgence, a book commemorating the 10th anniversary of the residential rehabilitation centre, Kudil (2017)