Mental Health Society Tellippalai, Jaffna.
Close

உளநோயாளர்களுக்கான புனர்வாழ்வு: ஒரு சமூகநிலை நோக்கு

உளநோயுடையவர்களுக்கு அல்லது உளநலம் சம்பந்தமான வேறு பிரச்சினைகள் உடையவர்களுக்கு வழங்கப்படும் உளசமூகப் புனர்வாழ்வானது, அவர்களுடைய தனித்துவமான நோய் மீட்டெழுதல், சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்து கொள்ளல், திருப்திகரமான மற்றும் தரமான வாழ்க்கையை வாழுதல் என்பவற்றை மேம்படுத்துகின்றன.

உளநோயுடையவர்களுக்கான புனர்வாழ்வுச் சேவைகளானவை தங்கி நின்று புனர்வாழ்வு பெறும் இல்லங்கள் தொடக்கம், அவரவருடைய வீடுகளில் வைத்தே புனர்வாழ்வளித்தல் வரைக்குமான பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகின்றன.

உளநோயாளர்களுக்கான புனர்வாழ்வைப் பொறுத்தவரையில் அதில் தொழில் சம்பந்தமான பயிற்சிகளும், சமூகத்தோடு இணைந்து கொள்ளலுக்கான தயார்ப்படுத்தலும் முக்கியமானவை.

சமுதாயத்தின் மத்தியில் அமைந்து புனர்வாழ்வு நடவடிக்கைகளை வழங்கி வருகின்ற புனர்வாழ்வு நிலையங்களை சமுதாயப் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கலாம். அதிகளவினதான, சிக்கலான தேவைகளை உடைய உளநோயாளர்களின் நோய் மீட்டெழுதலுக்கு உதவுவது என்பதே இந்தச் சமுதாயப் புனர்வாழ்வு நிலையங்களின் இலக்காக அமைந்துள்ளது. சமுதாயப் புனர்வாழ்வு நிலையங்களானவை ஒருவர் தங்கி நிற்பதற்கான வசதிகளை வழங்குவதோடு, ஒரு நாளின் இருபத்திநான்கு மணித்தியாலங்களிலும், ஒரு கிழமையின் ஏழு நாட்களிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட புனர்வாழ்வுத் திட்டத்தையும் அவருக்கு வழங்குகின்றது. பொதுவாக இந்த உதவியானது புனர்வாழ்வு பெறுபவருக்காகத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டதாக இருக்கும். இவ்வாறு தங்கி நிற்கும் வசதியானது கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டு இருத்தல் வேண்டும். அத்துடன் வீட்டுத் தரிசிப்புகளும், தொடர்பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும்.

சமுதாய அடிப்படையிலான உளநலப் புனர்வாழ்வு சேவைகளானவை மருத்துவ அணுகுமுறைகளைப் பின்பற்றாது, ஓர் உளசமூகப் பராமரிப்பு மாதிரியைக் குவிமையப்படுத்த வேண்டும். இவ்விதமான சேவைகள் இருப்பதனால் வைத்தியசாலைகளில் நீண்டகாலம் தங்க வேண்டிய தேவையும், திரும்பத் திரும்ப அனுமதி பெறவேண்டிய தேவையும் குறைவடைகின்றன.

கடுமையான உளநோய்கள் ஏற்பட்ட முதல் பத்து வருடங்களுக்குள் இவ்வாறான சேவைகள் வழங்கப்பட்டால் அவை நேரான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என ஓர் ஆய்வு குறிப்பிடுகின்றது. எனினும், இந்தச் சேவைகளின் பயன்பாட்டை வெளிக்கொணர்வதற்கு மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

கடுமையான, நீடித்த காலம் நிலைத்து நிற்கின்ற உளநோயுடைய அனைவருக்கும் புனர்வாழ்வு தேவைப்படுகின்றது. உளநோயுடையவர்களுக்கான புனர்வாழ்வானது பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவான தொழில்வாண்மை ஆதரவோடு சமூகத்தில் வாழ்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், மற்றும் வேலை செய்வதற்கும் தேவைப்படும் அறிவாற்றல், உணர்வு மற்றும் சமூகம் சார்ந்த திறன்களை விருத்தி செய்வதற்கு உதவுதல் என்பதனைத் தனது இலக்காகக் கொண்டிருக்கின்றது. உளநோயுடையவர்களுக்கான புனர்வாழ்வளித்தலின் ஒட்டுமொத்தமான தத்துவ நோக்கானது இரண்டு விதமான இடையீட்டு மூலோபாயங்களைக் கொண்டிருக்கின்றது. முதலாவது மூலோபாயமானது உளநோய்வாய்ப்பட்டவர்கள் நெருக்கீடாக உணருகின்ற சந்தர்ப்பங்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற திறன்களை உருவாக்குவதாக, தனியாள் சம்பந்தப்பட்டதாக, அமைந்துள்ளது. இரண்டாவது மூலோபாயமானது சுற்றுச்சூழல் சார்ந்து, நெருக்கீட்டை ஏற்படுத்துகின்ற சூழல் காரணிகளைக் குறைப்பதாக அமைந்துள்ளது. திறனாற்றல் குறைபாடுடைய மிகப்பெரும்பான்மையானோருக்கு இவையிரண்டும் இணைந்த ஓர் அணுகுமுறைமையே தேவைப்படுகின்றது. தற்பொழுது, உளநோயாளர்களுக்கான புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் மெருகேற்றமானது பாதிக்கப்பட்ட, புனர்வாழ்வு தேவைப்படும் ஒவ்வொரு தனிநபருக்கும் கிடைக்கக்கூடியதான ஒரு புள்ளியை அடைந்துள்ளது.

எமது நாட்டில் நோயின் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்புச் சுமையானது பெருமளவில் உறவினர்களது தலைகளின் மேலேயே இறக்கப்படுகின்றது. உண்மையில் இவ்வாறான முறைசாராப் பராமரிப்பானது சுகாதார சேவை வழங்கல்களிலும், புனர்வாழ்வளித்தலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது. மிகப்பெரும்பான்மையான உளநோயாளர்கள் தமது நோயின் தீவிரமான நிலைமைகளுக்குச் சிகிச்சை பெற்றதன் பின்னர், தமது குடும்பத்தவர்களுடனோ அல்லது உறவினர்களுடனோதான் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கடினமான பணியைப் பல குடும்பங்கள் தன்னார்வத்துடன் தேர்ந்தெடுப்பதில்லை.

உண்மையில், உளநோயுடையவர்களைப் பராமரிப்பது என்பது குடும்பங்களின்மேல் குறிப்பிடத்தக்களவு சுமையைக் கொண்டு வருகின்றது. இவ்வாது முறைசாராப் பராமரிப்பை வழங்குபவர்கள் அதிகளவான நெருக்கீடு மற்றும் மனச்சோர்வு, குறைந்தளவான உடல் ஆரோக்கியம், வினையாற்றலுடன் தொழிற்படும் தன்மை மற்றும் நன்னிலையோடிருப்பதான உணர்வு போன்ற பாதகமான விளைவுகளுக்கு முகங்கொடுப்பார்கள். இதற்கு மேலாக, எல்லாக் குடும்பங்களும் தங்களது திறனாற்றல் குறைபாடுடைய குடும்ப உறுப்பினருக்கு முழுமையான ஆதரவைக் கொடுத்து, ஏற்கனவே போதாமைகளோடு இருக்கும் சுகாதார சேவைகளுக்குப் பதிலாகப் பராமரிப்பை வழங்குவதனைத் தாம் பொறுப்பெடுப்பார்கள் என்றும் இல்லை. பராமரிப்பாளர்கள் தமது நெருக்கீடுகளை எதிர்கொள்ளும் திறன்களில் குறைபாடுகளையும், குறைவான சமூக ஆதரவையும் கொண்டிருக்கின்றபோது, அவர்கள் மிக உயரிய அளவுகளில் பராமரிப்புச் சுமையை உணர்ந்து கொள்வார்கள்.

ஆயினும், குடும்பங்களானவை தமது உறுப்பினர்கள் நோயிலிருந்து மீண்டெழுவதற்குத் தேவைப்படுகின்ற ஆதரவை மிகவும் இயல்பான சூழலில் வைத்து வழங்குகின்றன. எனவே, உளநோயாளர்களுடைய புனர்வாழ்வு ஆரம்பிக்கும் காலப்பகுதியிலிருந்தே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உதவ வேண்டும் என்ற ஓர் ஆர்வம் தற்போது வளர்ந்து வருகின்றது.

உளநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வில் புறமொதுக்கப்படுதல், களங்க மனப்பாங்கோடு அணுகப்படுதல் போன்ற மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். உளநோயாளர்களைக் களங்க மனப்பாங்கோடு அணுகுவது தொடர்பாகப் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மனிதர்களை “விசர்” “பைத்தியம்” எனும் சுட்டுப் பெயர்களால் அழைப்பது என்பது மிக மோசமான எதிர்மறை விளைவுகளையும். ஒருவர் தன்னைக் களங்கமானவராக உணர்ந்து கொள்வதனையும் ஏற்படுத்துகின்றது. மேலும், இது மனஉறுதி சிதைவடைதலையும் குறைவான வாழ்க்கைத் தரத்தையும், வேலைவாய்ப்பின்மையையும் உருவாக்கி, அவர் சமூகத்துடன் இணைந்து கொள்வதில் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றது. மறுதலையாக, உளநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் “உளநோயாளி” என முத்திரையிடப்பட்ட பின்னர், சமூகம் கொண்டிருக்கும் எதிர்மறையான மனப்பாங்குகளைப் பற்றி அறிந்துணர்ந்து கொள்ளும் பொழுது, தான் சமூகத்தினால் புறக்கணிக்கப்படலாம், பெறுமதியற்றவராக்கப்படலாம், அல்லது புறமொதுக்கப்படலாம் என எண்ணுவார். இத்தவிதமான விஷவட்டமானது நோய்மீட்டெழுதலுக்கும், சாதாரண இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்குமான வாய்ப்புகளைக் குறைத்து விடுகின்றது.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வீடுகளில் வசிக்கும் உளநோயாளர்களுக்கான தனியாள் உளசமூகப் புனர்வாழ்வு மற்றும் உதவிச் சேவைகளை வழங்க வேண்டும்.

சமூகத் திறனாற்றலை வளர்த்தல் என்பது தனியாள் தொடர்பான உளசமூகப் புனர்வாழ்வளித்தலின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்திருப்பதனால், வழங்கப்படும் சேவைகளானவை சேவைபெறுபவர்களின் வீடுகளில், அவர்களின் சமூகத்தில் வைத்து வழங்கப்பட வேண்டும்.

திறனாற்றல் குறைபாடுடையவர்களுக்கான புனர்வாழ்வளித்தலில் “தாம் தமது உறுப்பினர்களைப் பராமரிக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்” என்ற விடயத்தைக் குடும்பங்களும் உணர்ந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. திறனாற்றல் குறைபாடுடையவர்களின் குடும்பங்கள் அவர்களைப் பராமரிப்பதில் பிரத்தியேகமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கலாம். இந்தப் பிரச்சினைகள் சமுதாயப் புனர்வாழ்வு நிலையங்களில் பணிபுரிகின்ற உளவளத்துணையாளர்களின் உதவியோடு, தனித்தனியாக அணுகப்பட்டு, தீர்வுகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஓர் இடைக்கால நடைமுறையாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பணியாளர்கள் உளநோயாளர்களின் புனர்வாழ்வில் ஈடுபடுதல் வேண்டும். புனர்வாழ்வு நிலையங்கள் ஒவ்வொரு சுகாதாரப் பிரிவிலும் அல்லது ஒவ்வொரு சுகாதார நிர்வாகப் பிரிவிலும் அமைந்திடல் வேண்டும். பொது சுகாதாரப் பணியாளர்களோடு, அந்தந்தப் பகுதியில் அமைந்திருக்கும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த, சமூக சேவையாளர்களும், உளவளத்துணையாளர்களும், ஏனைய பணியாளர்களும் இதில் இணைந்து கொள்ள வேண்டும். பலவகையில் இது ஓர் அரச – தனியார் கூட்டிணைவாக அமைந்திருப்பது சிறந்தது.

நாட்டின் பல பாகங்களில் இவ்வாறான புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். புனர்வாழ்வுக்கான தேவைகளைக் கொண்டுள்ள உளநோயாளர்கள் அதிகமாயிருக்கும் பிரதேசங்களிலிருந்து இவை ஆரம்பிக்கப்படலாம்.

 

Extract from an article by Dr. N. Sivarajah, published in Resurgence, a book commemorating the 10th anniversary of the residential rehabilitation centre, Kudil (2017)