Mental Health Society Tellippalai, Jaffna.
Close

ஓர் இடைத்தங்கு அலகில் நடைமுறைப்படுத்தப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகள்

புனர்வாழ்வு அலகில் அனுமதி பெறுகின்ற எல்லோருமே சில அடிப்படையான விடயங்களில், மற்றவர்களில் தங்கியிராது வாழ்வதற்கான திறன்களில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எதிர்பார்க்கப்படும். உதாரணமாக, புனர்வாழ்வு பெறும் அனைவரும் தற்சுகாதாரம் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளையும் திருப்திகரமான முறையில் செய்து முடிக்க வேண்டியது கட்டாயமானது. அதற்கு மேலாக, அவர்கள் எதிர்காலத்தில் தமது வீடுகளில் அல்லது ஏனைய வதிவிடங்களில் வாழும்பொழுது தேவைப்படக் கூடிய ஏனைய விடயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. புனர்வாழ்வு பெறுகின்ற ஒருவர் தமது வதிவிடத்தை ஒழுங்கான முறையில் பேணுதல், வீடு கூட்டுதல், முற்றம் கூட்டுதல், வளவைத் துப்பரவு செய்தல், கழிவுகளை முகாமைத்துவம் செய்தல், பூக்கன்றுகள் வளர்த்தல், பயன்தரு பயிரினங்களை உண்டாக்குதல், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை முறையாகவும் பாதுகாப்பாகவும் பாவித்தல் போன்ற பல விடயங்களில் பரிச்சயமும், தேர்ச்சியும் அடைந்திருப்பது அவசியமாகின்றது.

இந்த விடயங்களோடு, வதிவாளர்கள் அடிப்படையான சமையல் திறன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒரு முக்கிய புனர்வாழ்வு இலக்காகக் கொள்ளப்படுகிறது. பெண்கள் மாத்திரமன்றி, ஆண்களும் அடிப்படையான சமையல் திறன்களில் தேர்ச்சி பெறுவதனைப் புனர்வாழ்வு நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன. தேநீர் தயாரித்தல், காலை மாலை உணவுகளைத் தயார் செய்தல், மதிய உணவான சோறுகறி ஆக்குதல், சிறிய பலகாரங்கள் செய்தல் போன்ற பல்வேறு சமையல் திறன்களில் வதிவாளர்கள் தேர்ச்சி பெறுவதனைப் புனர்வாழ்வுப் பணியாளர்கள் உறுதி செய்வார்கள்.

எந்த ஒரு விடயத்தையும்போல் சமையல் என்பதுவும் பல்வேறு படிமுறைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். சமைப்பதற்கான திட்டமிடுதல், மூலப் பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், முன்ஆயத்த வேலைகளில் ஈடுபடுதல், சமையல் பாத்திரங்களைக் கழுவுதல், விதவிதமான அடுப்புகளைக் கையாளுதல், பொருத்தமான முறைகளில் உணவு தயாரித்தல், அதன்போது கடைப்பிடிக்கப்படும் ஒழுங்கு முறைகளில் பரிச்சயம் கொள்ளுதல், உணவைப் பரிமாறுதல், உண்ட பின்பு மிகுதியான உணவை முகாமைத்துவம் செய்தல், சமைத்த பாத்திரங்களை, சமையல் அடுப்பைத் துப்பரவு செய்தல் என்று ஒரு நேரத்துச் சமையலோடு பல்வேறுவிதமான நடவடிக்கைகள் தொடர்புபட்டுள்ளன. ஆகவே, சமையல் செய்தல் எனும் “ஒரு” விடயத்தைக் கற்றுக் கொள்ளுதல் என்பது உண்மையில் பல்வேறு திறன்களைக் கற்றுக் கொள்ளுதலுக்குச் சமனானது. ஒவ்வொரு புனர்வாழ்வுச் செயற்பாடும் இத்தகையதே. புனர்வாழ்வுப் பணியாளர்கள் இதனைப் புரிந்து கொண்டு வதிவாளர்கள் ஒரு விடயத்தில் உள்ள பல்வேறு திறன்களைக் கூறுகளாகக் கற்றுக் கொண்டு, பின்பு அதில் முழுமை பெறுவதற்கு உதவி செய்வார்கள்.

புனர்வாழ்வுப் படிமுறைகளில் இன்னுமொரு குறிப்பிடக்கூடிய அம்சமாக உள்ள “பொழுதைப் பிரயோசனமான முறையில் போக்குதல்” எனும் விடயமானது முக்கியத்துவம் பெறுகின்றது. இவற்றில் தினசரி பத்திரிகை வாசித்தல், சமகால விடயங்கள் பற்றிக் கலந்துரையாடல், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் அதனைத் தொடர்ந்து செய்தல், உள்ளக மற்றும் வெளியக விளையாட்டுகளில் ஈடுபடுதல், கோயில், கடற்கரை, தெருவெளி போன்றவற்றிற்குச் சென்று வருதல், சைக்கிளில் வெளியே சென்று வருதல், காலாற நடத்தல் போன்றன குறிப்பிடத்தக்கனவாகும்.

புனர்வாழ்வின் இன்னுமொரு முக்கியமான இலக்காக “தமது நோயைத் தாமே முகாமைத்துவம் செய்யப் பழகுதல்” என்பது அமைந்திருக்கின்றது. புனர்வாழ்வு பெறுபவர்கள் தமது நோய் பற்றிய அறிவைப் பெறுவதற்கும், அந்நோயை முகாமைத்துவம் செய்வதில் உள்ள படிமுறைகளை அறிந்து கொள்வதற்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுகின்றன. இவை வதிவாளர்கள் வீடு சென்ற பிறகும் அதிக சிரமங்களின்றி மருந்துகளை உள்ளெடுப்பதற்கு உதவுகின்றன.

புனர்வாழ்வு நடைமுறைகளின் ஒவ்வொரு படியிலும் புனர்வாழ்வு பெறுபவருக்குப் பொறுப்பான பணியாளர், புனர்வாழ்வு பெறுபவருடைய விருப்பத்துக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களது ஆசைக்கும் மதிப்பளித்து, அவற்றை உள்வாங்கியே தீர்மானங்களை மேற்கொள்வார். புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இந்த முத்தரப்பு இடைவினையானது முக்கியமானது. பணியாளர்-வதிவாளர்-குடும்பத்தவர் எனும் முத்தரப்பினரும் இணைந்தே பெரிய தீர்மானங்களை மேற்கொள்வர். தீர்மானங்கள் எடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கும் விடயங்கள் குழுக் கலந்துரையாடலில் அளிக்கை செய்யப்பட்டு, ஆராயப்பட்டு, வழிப்படுத்தப்படும்.

Extract from an article by Dr. S. Sivayokan, published in Resurgence, a book commemorating the 10th anniversary of the residential rehabilitation centre, Kudil (2017)