Mental Health Society Tellippalai, Jaffna.
Close

சதிபதி உறவு

ஓர் உறவு உருவாகின்ற பொழுது, அது ஒரு குறுகிய காலத்தில் நிறைவடைந்து போகின்ற ஒன்றாகவோ, அல்லது வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கின்ற ஒன்றாகவோ ஆகிவிடலாம். அது ஒரு நீண்ட காலம் நிலைத்து நிற்கின்ற உறவாக இருந்தால், அந்த உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இருவரும் அந்த உறவு தொடர்பில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்பது பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கின்றது.

 தம்பதியினரிடையே உருவாகும் சதிபதி உறவுகளை எடுத்துக் கொண்டால், அந்த உறவுகளின் இயக்கப்பாடானது கடந்த சில தசாப்தங்களாக நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. கல்விநிலையில், குறிப்பாக பெண்களின் கல்விநிலையில் ஏற்பட்ட முன்னேற்றம்,வாழ்க்கைத் துணைவர்கள் இருவரும் வேலைக்குச் செல்லுதல், தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை எளிதாகக் கிடைக்கக் கூடியவாறாயிருத்தல், மற்றும் இருவரிடையேயும் காணப்படும் அதிக அடுக்குகளினாலான எதிர்பார்ப்புகள் போன்றன இந்த மாற்றங்கள் ஏற்படுவதில் பங்களித்திருக்கின்றன. உண்மையில், ஒரு தம்பதியினரிடையே காணப்படும் உறவுநிலையானது எண்ணிறந்த காரணிகளின் தாக்கத்திற்குள்ளாகின்றது.

 தம்பதியினருக்கிடையே இருக்கின்ற உறவின் முக்கியமானதொரு விடயமாக அவர்கள் இருவருக்குமிடையே காணப்படும் அந்நியோன்யம் என்பது அமைந்திருக்கின்றது. தமக்கிடையேயான அந்நியோன்யமானது உயரிய அளவில் இருக்கின்றது எனத் தெரிவிக்கின்ற தம்பதியினர், தமது ஒட்டுமொத்தமான உறவு நிலையிலும் உயர் திருப்தியோடு இருக்கிறார்கள் என்பது மீளவும், மீளவும் நிரூபணமாயிருக்கின்றது. அந்நியோன்யம் என்பது தமக்கிடையேயான நெருக்கம் பற்றி இரு துணைவர்களதும் பொதுவாக எப்படி உணர்ந்து கொள்கிறார்கள் என்பதனைக் குறித்து நிற்கின்றது. அந்நியோன்யம் (நெருங்கியிருப்பதான உணர்வு) ஆனது பல கூறுகளைக் கொண்டிருக்கின்றது.

1.பாலியல் ரீதியிலான நெருக்கம்:

இது தம்பதியினர் இருவரும் தமக்கிடையே பாலியல் ரீதியாக எவ்வளவு தூரம் திருப்தியடைந்திருக்கிறார்கள் என்பதோடு தொடர்புடையது. ஒருவரோடொருவர் பாலியல் உறவு தொடர்பான தமது விருப்பங்கள், விரும்பாமைகள் பற்றித் திறந்த மனதோடு உரையாடுவது முக்கியமானது. அத்துடன்,ஒவ்வொருக்குமான பாலியல் அருட்டலை இன்னமும் சிறப்பானதாக எவ்வாறு மாற்றலாம் என்பதனை அறியும் நோக்கோடு, ஒவ்வொருவரினது உடலையும் நன்றாக ஆராய்ந்து பார்த்தலும் முக்கியமானது. ஒரு தம்பதியனர் தமது பாலியல் வாழ்க்கையைத் திருப்திகரமாக அமைத்துக் கொண்டால், ஒட்டுமொத்தமான அவர்களது பிணைப்பும்,உறவு நிலையின் முழுமையும் முன்னேற்றமடையும். இது உயிரியல் ரீதியலான ஒரு விளக்கத்தையும் கொண்டிருக்கின்றது. பாலியலுறவின்போது ஏற்படுகின்ற அதிஉச்ச திருப்தி நிலையில், ஒக்சிரோசின் எனப்படும் ஓமோன் (இது காதல் ஓமோன் எனப் பரவலாக அறியப்படுகிறது) வெளிவிடப்பட்டு, அது இரத்த ஓட்டத்தில் கலக்கின்றது. இந்த ஓமோன் ஆனது மேற்கூறப்பட்ட நேர் அனுபவங்களோடு தொடர்புபட்டிருக்கின்றது

2.உடல்ரீதியலான மற்றும் வாய்மொழியற்ற நெருக்கம்:

வார்த்தைகள் இல்லாது தழுவுதல், கட்டியணைத்தல் போன்ற இடைவினைகள் ஊடாக அன்பைப் பரிமாறும் செய்முறைகளை இது கொண்டிருக்கின்றது. மனிதர்கள் பாலூட்டிகள். பாலூட்டிகளின் நடத்தைகளை நாம் உற்றுநோக்கினால், அவை ஒன்றையொன்று சீராட்டுதல், கட்டித் தழுவுதல் போன்ற வகையிலான விடயங்களை எவ்வளவு ஈடுபாட்டுடன் செய்து கொள்கின்றன என்பதனைக் கண்டு கொள்ளலாம். இலங்கையில், பெற்றோர் தமது குழந்தைகளுடன் ஒரே கட்டிலில் துயில்வதனை, அல்லது பெற்றோர் இருவரும் தமது குழந்தைகளுடன் வெவ்வேறு கட்டில்களில் தூங்குவதனைப் பொதுவாகக் காணலாம். இது தம்பதியினரைப் பொறுத்தவரையிலும்சரி, பிள்ளைகளைப் பொறுத்தவரையிலும் சரி ஆரோக்கியமற்ற ஒரு நடத்தையாகவே பார்க்கப்பட வேண்டும். ஒரு தம்பதியினர் உடல்ரீதியலாக நெருக்கத்தைக் கொண்டிருப்பதற்கான சிறந்ததொரு வழியாக ஒன்றாகத் துயிலுதல் என்பது அமைந்திருக்கின்றது.

3.உணர்ச்சிகளில் (உணர்வுரீதியான) நெருக்கம்:

இது தம்பதியினர் தமது ஒத்துணர்வினூடாக ஒவ்வொருவரினதும் உணர்வுகளோடும்,அனுபவங்களோடும் எந்த அளவிற்குத் தொடர்போடு இருக்கிறார்கள் என்பதனை விபரிக்கின்றது. தமது துணைவரோடு கதைத்தல், அவரைச் செவிமடுத்தல், அவருக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் அவரோடு கூடவிருத்தல், அவர் அழுவதற்காகத் தோள் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளை இது உள்ளடக்கும்.

4.செயற்பாட்டு ரீதியிலான நெருக்கம்:

செயற்பாட்டு ரீதியிலான நெருக்கம் என்பது தம்பதியினர் தமது நாளாந்த வாழ்வில் கொண்டிருக்கும் உறவாடலை விபரிக்கின்றது. பணிகளைப் பகிர்ந்து கொள்ளுதல், தமது வாழ்க்கையை ஒன்றுசேர்ந்து ஒழுங்கமைத்தல், ஒவ்வொருவரும் தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருத்தல் போன்ற விடயங்களை இது உள்ளடக்குகின்றது. தீர்மானங்களை எடுக்கின்றபோது தம்பதியினரில் ஒருவர் மற்றையவரை எந்தவகையிலும் ஈடுபடுத்தாது, அவரை முழுமையாக வெளியில் விட்டுவிட்டுத் தமது கூட்டுக் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் சேர்ந்து தீர்மானங்களை எடுக்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமானது. இரண்டு பேர் தங்களுக்குள் ஓர் உறவை உருவாக்கி, அதனைக் கொண்டு செல்வது எனத் தீர்மானித்ததன் பின்னர் ஓர் இணையாக அவர்கள் கூட்டுக் குடும்பத்தவர்களாலும், சமூகத்தாலும் தம்மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு நின்றுபிடிக்கும் வல்லமையைக் கொண்டிருக்க வேண்டும். கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்களும் தம்பதியினர் தமக்கிடையே நெருக்கமான தொடர்பை வைத்திருக்க வேண்டிய தேவையை உணர்ந்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

 ஒன்றாகவிருத்தல் என்பது ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்றாயினும், வாழ்க்கைத் துணைவர் ஒவ்வொருவரும் தனித்தனியாக தத்தமக்கு ஆர்வமாயுள்ள விடயங்களில் கலந்து கொள்வதனை ஊக்குவித்தலும், அதற்கு ஆதரவாயிருத்தலும் என்பதுவும் அதேயளவு முக்கியமானது. இது தம்பதியினர்க்கிடையேயான பரஸ்பரம் மதிப்பளிக்கும் பண்பை வளர்த்துவிடும். அத்துடன் நீண்டகால உறவில் ஏற்படக்கூடிய சலிப்படைதலைக் குறைத்து விடுவதிலும் இது உதவி செய்யும்.

 அந்நியோன்யம் என்பது தம்பதியினர்க்கிடையே காணப்படுகின்ற தொடர்பாடல் முறைமைகளோடு நெருக்கமாகப் பின்னிப்பிணைந்திருக்கின்றது. தமது துணைவருக்குச் செவிமடுத்தல்,நாளாந்த விடயங்களை மற்றும் பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடுதல், துணைவரது எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்தல், காதலையும், வியப்பையும், ஒப்புதலையும் வெளிப்படுத்துதல் மற்றும் மன்னித்துக் கொள்ளுமாறு கூறுதல் போன்றன ஓர் ஆரோக்கியமான நேரான தொடர்பாடலுக்குரிய முக்கியமான விடயங்களாக இருக்கின்றன. தம்பதியினர் ஒருவரோடொருவர் தமது பலவீனங்களையும், தாம் பாதிக்கப்படக்கூடிய விடயங்களைப் பற்றியும் கலந்துரையாடக் கூடியவர்களாகவும், ஒவ்வொருவரதும் மனந்திறந்து காட்டுதல்களைப் பரஸ்பரம் அங்கீகரிக்கின்றவர்களாகவும் இருக்கின்ற பொழுது, அவர்கள் தமக்கிடையே அதிகளவு அந்நியோன்யத்தை உணர்ந்து கொள்வார்கள். தொடர்ச்சியான நச்சரிப்புகள்,ஒருவர் கதைக்கின்றபோது அதற்குக் கவனத்தைக் கொடுக்காதிருத்தல், துணைவரோடு கண்தொடர்பைப் பேணாது விடுதல், தொடர்பாடலைத் தவிர்த்துக் கொள்ளுதல், ஒருவரோடுவர் ஆக்ரோஷத்தோடு கத்திக் கூச்சலிடுதல் போன்றவை ஆரோக்கியமற்ற தொடர்பாடல் வகைகளுக்குள் அடங்குகின்றன.

 ஓர் உறவானது காலத்தினூடும் வாழ்க்கை வட்டத்தினூடும் வாழ்வில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளினூடும் ஒரு நீரோட்டம்போல் பாய்ந்து செல்கின்றது. வழமையாக இந்த நீரோட்டமானது திருமணத்துக்கு முந்திய பருவம் (அவர்கள் திருமணம் செய்வதாகத் தீர்மானித்திருந்தால்), திருமணத்திற்குப் பிந்திய பருவம், பெற்றோராயிருக்கும் பருவம் (அவர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானித்திருந்தால்), பிள்ளைகள் பிரிந்து சென்றதன் பின்பு, இருவரில் ஒருவர் இறக்கும்வரை அல்லது விவாகரத்துப் பெற்று அல்லது பெறாது பிரிந்து செல்லும்வரை ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பருவம் போன்ற கால அவத்தைகளில், வாழ்க்கையில் இடையிடையே ஏற்படுகின்ற நேர் மற்றும் மறை நிகழ்வுகளோடு சேர்ந்திருக்கும்.

 இந்தச் சீரிய பயணத்தின் பொழுது, உறவினைப் புதுப்பொலிவோடு வைத்திருக்க வேண்டியது அவசியமானது. தம்பதியினரின் வாழ்வில் பிள்ளைகள் வருகின்றபோது, அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்காது, தங்களுடைய முழுநேரத்தையும் பிள்ளைகளோடு செலவழிக்க முயலுவார்கள். ஆயினும், தங்களது வாழ்க்கைப் பயணத்தின் பிரதிபலிப்புகளை மீட்டிப்பார்ப்பதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கவேண்டியது மிகவும் அத்தியவசியமானது. தங்களுடைய மகிழ்வான தருணங்கள் பற்றி கடினமான சூழ்நிலைகளை இருவரும் இணைந்து எவ்வாறு கடந்து வந்தார்கள் என்பது பற்றி, எதிர்கால இலக்குகள் பற்றியெல்லாம் அவர்கள் மீட்டிப் பார்க்கலாம்.

 தங்களுக்கு வயதாகின்றபோது பிள்ளைகள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்போடு தமது உழைப்பின் ஒவ்வொரு சதத்தையும் பிள்கைளுக்காகச் செலவழிக்காது, தம்பதியினர் தமது எதிர்காலத்துக்கொன்றும் சில சேமிப்புகளை வைத்திருக்க வேண்டியது அவசியமானது. தம்பதியினர் பொருளாதார ரீதியில் மற்றவர்களில் தங்கியிருக்காதவர்களாக (சுதந்திரமானவர்களாக) இல்லாத வேளைகளில், அவர்கள் தமது பிள்ளைகளால் அல்லது ஏனையவர்களால் ஆணையிடப்படும் விதிமுறைகளின்படி வாழவேண்டிய நிலை ஏற்படலாம். இது அவர்களின் மனமகிழ்வையும், சுதந்திரமான உணர்வையும் பெரிதும் பாதித்துவிடும்.

 ஒரு தம்பதியினரிடையேயுள்ள உறவானது ஆரோக்கியமாக அமைந்திருக்கும் பொழுது, பிள்ளைகள் வளர்வதற்கான ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை அது உருவாக்குகின்றது. மேலும், அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோரின் உறவாடும் முறைகளை அவதானித்தபடி, அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு மரியாதை அளிக்கிறார்கள்? அவர்கள் தங்களது பணியினை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்கள்? அவர்கள் பிரச்சினைகளுக்கு எவ்வாறு இணைந்து முகங்கொடுகிறார்கள்? அவர்கள் மற்றையவரின் சுதந்திரத்தை அல்லது சுயாதீனத்தை எவ்வாறு மதிக்கிறார்கள்? அவர்கள் எவ்வாறு தொடர்பாடுகிறார்கள்? அவர்கள் தங்களுக்குரிய நேரத்தை எவ்வாறு ஒதுக்கிக் கொள்கிறார்கள்? என்பவற்றை அவதானித்தபடி வளர்ந்து வருவார்கள். அவர்கள் தாங்கள் வளர்ந்து பெரியவர்களாகும் பொழுது தாம் அவதானித்த நேரான (அல்லது மறையான) விடயங்களைத் தமது சொந்த உறவாடல்களில் சேர்த்துக் கொள்வார்கள். எனவே, இவ்வாறான விடயங்களை ஒரு சதிபதி உறவில் இணைத்துக் கொள்வது என்பது தம்பதியினர் மகிழ்வாகவும் திருப்தியாகவும் உணர்ந்து கொள்வதற்கு உதவுவதோடு (அவர்களது பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதன் மூலம்) அது சந்ததியூடாகக் கடத்தப்படும் விளைவையும் கொண்டிருக்கின்றது.

 சதிபதியுறவை மிகவும் மோசமாகப் பாதிக்கக் கூடிய விடயங்களில் ஒன்றாக வாழ்க்கைத் துணைவர்களில் ஏற்பட்டிருக்கின்ற உளநோய்(கள்) அமைந்திருக்கின்றது. மது மற்றும் போதையை ஏற்படுத்தும் பதார்த்தங்களின் துர்ப்பாவனை, மனச்சோர்வு, பாலியல் கோளாறுகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தவாறான உளநோய்(கள்) தொடர்பான பிரச்சினைகளை வெற்றி கொள்வதற்குரிய தகுந்த சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதும், தேவைப்படுமிடத்து பொருத்தமான உளவளத்துணையைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகின்றன.

 This is an extract from the Tamil translation of the book, ‘You and Your Mental Health by Dr. Dewasmika Ariyasinghe, Senior Lecturer and Specialist in Psychiatry