உளநலம் என்பது ஆரோக்கியம் என்பதனுடைய ஒரு முக்கியமான, ஒருங்கிணைந்த அலகாகும். ஆரோக்கியமாக இருத்தல் என்பது, நோய்களற்று இருப்பது மாத்திரமல்லாமல், ஒருவர் தனது உடல், உள, சமூக, ஆன்மிக நலன்களில் பரிபூரண நிலையையும் பெற்றிருப்பதே ஆகும்.
இளம்பராயத்தில் வீடு, பாடசாலை, மற்றும் சமூகத்தில் சிறந்து செயற்படுவதற்கும், எதிர்மறையற்ற வாழ்வைப் பேணுவதற்கும் சிறுவர்களின் உள ஆரோக்கியம் நல்லதொரு நிலையில் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். சிறுபிள்ளைகள் தமது வயதுக்கேற்ற விருத்தி மற்றும் உணர்ச்சி ரீதியான மைல்கற்களை அடைதல், ஆரோக்கியமான சமூகத்திறமைகளைக் கற்றல், மற்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளல் போன்றவற்றில் மேம்பாடடைகின்றபோது, அவர்கள் உளநலத்துடன் இருப்பதனை உறுதிப்படுத்தலாம்.
போதுமானளவு அன்பும் ஆதரவும் தமக்குக் கிடைப்பதாக உணர்ந்து கொள்ளல், பலம் வாய்ந்த, ஒற்றுமையான குடும்பத்திலிருந்து கிடைக்கும் பாதுகாப்பு உணர்வைப் பெறுதல், நாளுக்கு நாள் மாறாத ஒரு நிலையான சூழலில் வாழுதல், உடலியல் தேவைகளான உணவு, நீர், சுத்தமான சுற்றாடல், மருத்துவக் கவனிப்பு போன்றவை கிடைக்கப்பெறுதல், ஒரு சாதாரண சூழலில் கிடைக்கக்கூடிய வாழ்வின் அனுபவங்கள் பெறப்படல், நல்ல முன் மாதிரிகள் அமைந்திருத்தல், துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாது இருத்தல், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடிருத்தல், தமது எதிர்கால நிகழ்வுகளை நிர்ணயிக்கும் உணர்வைப் பெற்றிருத்தல், தமது வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏன் நிகழ்ந்தன என்பது பற்றிய புரிந்துணர்வைக் கொண்டிருத்தலும், அவற்றை ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் பெற்றிருத்தல், இவை அனைத்தோடும், அவர்களின் முழுமையான விருத்திக்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படல் என்பன சிறுவரின் உளநலத்திற்கும், மேன்மையான நன்னிலைக்கும் உரிய காரணிகளாகக் கொள்ளப்படுகின்றன.
சிறுவர்களில் உளநலப் பிரச்சினைகள் ஏற்படுவது என்பது பொதுவானது. அவை சிகிச்சையளிக்கக்கூடியவை. பொதுவாக நோக்குமிடத்து, பிள்ளைகளுக்குக் கண்டறியக்கூடிய மனநலப் பிரச்சினைகள் இருந்தாலும், அவ்வாறு பிரச்சினைகள் உள்ளவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் எந்த உதவியையும் பெறாது, அல்லது சிறிதளவு உதவியை மட்டுமே பெற்றிருப்பவர்களாக இருக்கிறார்கள். சிகிச்சை அளிக்கப்படாத மனநலப் பிரச்சனைகள், சிறுவர்களின் வீடு, பள்ளி மற்றும் சமூகத்தில் அவர்களின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும்.
சிறுவர்களில் உளநல குறைபாட்டால் அவர்களின் கற்றல், நடத்தை மற்றும் உணர்ச்சிகளை கையாளுதல் போன்றவற்றில் மாற்றங்கள் உருவாவதோடு, பிரச்சினைகள் அற்று அமைதியான முறையில் ஒரு நாளைக் கடப்பதுகூட அவர்களுக்குச் சிரமமானதாக அமைந்துவிடும். பெரும்பாலான சிறுவர்கள் தமது சிறுபராயத்தில் பயம், கவலை, குழப்பமான நடத்தைகள் போன்றவற்றைச் சில சமயங்களில் அனுபவிக்க நேரிடலாம். மனநலப் பிரச்சினைகள் உள்ள பிள்ளைகள் சிகிச்சை பெறாது இருக்கின்றபோது, பாடசாலை நிறுத்தம் அல்லது இடைவிலகல், குற்றவியல் நீதி அமைப்புடன் தொடர்புபடுதல் மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்றவற்றிற்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகின்றன.
சிறுவர்களில் உளப்பிரச்சினையோடு தொடர்புடைய அறிகுறிகள் பாரதூரமானதாகவும், தொடர்ச்சியாகவும், அவர்களது வீடு, பாடசாலை மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளில் இடையூறு ஏற்படுத்துவனவாகவும் இருக்குமாயின், அவர்களது உளநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு பிள்ளையினது உணர்ச்சிகள் அல்லது நடத்தைகளில் சிக்கல்கள் இருந்தால், அவற்றைப் பொதுவாகப் பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும்தான் முதலில் கவனிக்கிறார்கள். பெற்றோர் தமது அவதானிப்புகளை ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பராமரிப்பாளர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் தமது பிள்ளைக்கு உதவிநாட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கலாம்.
பாடசாலைச் செயற்பாட்டில் பின்னடைவு, வலுவான முயற்சிகள் இருந்தபோதிலும் மோசமான அடைவு மட்டங்கள், தொடர்ச்சியாகக் காணப்படும் கவலை அல்லது பதட்டம், பாடசாலைக்குச் செல்லவோ அல்லது சாதாரண நாளாந்த நடவடிக்கைகளில் பங்கேற்கவோ திரும்பத் திரும்பத் தொடர்ந்து மறுப்பது, அதீத வேகம் அல்லது துடியாட்டம், படபடப்பு, தொடர்ச்சியாக ஏற்படுகின்ற பயங்கரக் கனவுகள், தொடர்ச்சியாகக் காணப்படும் கீழ்ப்படியாமை, அடிக்கடி கோபப்படுதல், மனச்சோர்வோடு இருத்தல், எரிச்சல்படுதல் போன்ற அறிகுறிகள் உளநலப் பிரச்சினைகளுடைய சிறுவர்களில் அவதானிக்கப்படும் பொதுவான அறிகுறிகளாகக் காணப்படுகின்றன.
இவ் அறிகுறிகளை அவதானிப்பதில் பெற்றோர், சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
மூளை நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய கோளாறுகள், உளவிருத்திக் குறைபாடுகள், ஓட்டிசம், அவதானக் குறைவுடன் கூடிய மிகையியக்கக் கோளாறு, எதிர்ப்புறுதிக் கோளாறு, பதகளிப்பு நோய்கள், நடத்தைக் கோளாறு, மனசோர்வு போன்ற நிலைமைகள் சிறுவர்களில் பொதுவாகக் காணப்படும், உளமருத்துவப் பராமரிப்புத் தேவைப்படும் உளப்பிரச்சினைகளாக இருக்கின்றன.
அவதானக் குறைவுடன் கூடிய மிகையியக்கக் கோளாறு (ADHD)
அவதானக் குறைவுடன் கூடிய மிகையியக்கக் கோளாறு (ADHD) என்பது சிறுவர்களில் ஏற்படுகின்ற மிகவும் பொதுவான உளக்கோளாறுகளில் ஒன்றாகும். பொதுவாக சிறுவர்கள் வளர்கின்றபோது இது தானாகவே குறைந்துவிடக்கூடியது. ஆயினும், சிலவேளைகளில் இது முதிர்வயது வரைகூடத் தொடரலாம். சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ADHD நோயால் பாதிக்கப்படும்போது, அவர்கள் தமது நாளாந்த வேலைகள், படிப்பு மற்றும் விளையாட்டுகள் என்பவற்றில் கவனம் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன், அவர்கள் தங்கள் ஆற்றல் நிலை மற்றும் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். மேலும், ஓரிடத்தில் பொறுமையாக இருப்பதற்கும், அமைதியாக உட்காருவதற்கும் அவர்கள் சிரமமப்படுவார்கள். அவர்களின் கவனம் மிகவும் எளிதாகக் திசைதிருப்பப்படக் கூடியதாக அமைந்திருப்பதனால், அவர்கள் தமது வீட்டு வேலைகள், பாடசாலைப் பணிகளைச் செய்துமுடிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வார்கள்.
இந்த பிரச்சனைகள் ADHD தான் எனக் கண்டறியப்படுவதற்கு, அவை ஒரு நபரின் வயது மற்றும் வளர்ச்சிநிலை என்பவற்றின் இயல்பான வரம்பிற்கு வெளியே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பிள்ளைகள் சில சமயங்களில் அதிக துடியாட்டமாக, அதிக தூண்டுதலுடன் அல்லது பதற்றத்துடன் இருப்பது என்பது பொதுவானது, ஆனால், ADHD உள்ள சிறுவர்களில் இந்த நடத்தைகள் மிகவும் கடுமையானவையாகவும், எல்லா நேரங்களிலும் அவதானிக்கக் கூடியவையாகவும், மற்றும் அனைத்துச் சந்தர்ப்பங்களுக்கும் பொருந்துவனவாகவும் இருக்கின்றன.
எதிர்ப்புறுதிக் கோளாறு (ODD – Oppositional Defiant Disorder)
சிறுவர்களில் காணப்படும் எதிர்ப்புறுதிக் கோளாறு (ODD) என்பது ஒரு நடத்தைக் கோளாறாகவும் கருதப்படுகிறது. இந்தக் கோளாறு உடைய சிறுவர்கள் திடீரென, ஒருவிதத்தாலும் தூண்டப்படாத கோபத்தை வெளிக்காட்டலாம். அதுபோல், அவர்கள் எந்தக் காரணமும் இன்றியே வெறுப்பு அல்லது கோபத்தை உணர்ந்து கொள்ளலாம். அவர்கள் தங்கள் நடத்தைக்காக மற்றவர்களைக் குறை கூறலாம், பெரியவர்களுடன் வாதிடலாம், வேண்டுமென்றே மற்றவர்களைத் தொந்தரவு செய்யலாம், தம்மை நோக்கி விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்டலாம் அல்லது அவற்றிற்கு இணங்க மறுக்கலாம்.
எதிர்ப்புறுதிக் கோளாறு உடைய சிறுவர்கள் தமது குடும்பம் அல்லது வகுப்பறையில் தொடர்ந்து வாதிடுவது, மற்றும் சவாலான நடத்தைகளை வெளிக்காட்டுவதனால், அவர்கள் தமது சகாக்கள் அல்லது உடன்பிறந்தவர்களிடமிருந்து தனிமைப்படுத்தலாம். அத்துடன் இந்தக் கோளாறு காரணமாக அவர்கள் நேர்மறையான உறவுகளைக் கற்றுக்கொள்வதும், அல்லது அவற்றை வளர்த்துக் கொள்வதும் கடினமானதாக அமைந்துவிடும்.
ஓட்டிசம் (Autism)
ஓட்டிசம் என்பது ஒரு சிக்கலான, மூளை மற்றும் நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய ஒரு நிலைமையாகும். இது தொடர்பாடல், சமூகமயமாதல், நடத்தைகள், புலனுணர்வுகள் ஆகியவற்றில் தொடர்ச்சியாகச் சவால்களை ஏற்படுத்துகின்ற ஒரு நீண்டகால நிலைமையாகும். ஓட்டிசம் உடைய பிள்ளைகளின் அறிகுறிகளும், புத்திக் கூர்மையும், அவர்களது தொழிற்படு நிலையும், பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் வேறுபடுவனவாகக் காணப்படும்.
ஓட்டிச நிலைமையின் ஆரம்ப அறிகுறிகளை ஒரு குழந்தை ஒரு வயதை அடைவதற்கு முன்னரான காலப்பகுதியிலேயே பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், அல்லது குழந்தை மருத்துவர்களால் கவனிக்க முடியும். இருப்பினும், ஒரு குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகின்றபோதே அறிகுறிகள் வெளிப்படையானவையாக, தொடர்ச்சியானவையாகப் புலப்படுகின்றன. சூழலில் இருந்து ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துத் தொடர்பாட முடியாது இருத்தல், பேச்சு மற்றும் மொழிவிருத்தியில் குறைபாடுகளைக் காட்டுவது, ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்ட முடியாது இருத்தல், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது, பயம், ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது, பாவனை விளையாட்டுகளில் ஈடுபட இயலாது இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் அழுகை, சோகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது, வலியை உணராமல் இருப்பது, மாற்றங்களை அசௌகரியமாக உணர்வது, அர்த்தமில்லாத சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்வது போன்றவை ஓட்டிசம் எனும் நிலைமையின் பொதுவான அறிகுறிகளாகும்.
ஓட்டிசத்தைக் குணமாக்குவதற்கான சிகிச்சை என்று எதுவும் இல்லை. ஆனால், ஓட்டிசம் உடைய பிள்ளைகளின் பிரச்சினைகளை சிறப்பான, பிரத்தியேகமான பயிற்சிகள் மூலம் குறைத்துக் கொள்ளலாம். ஓட்டிசம் பாதிப்புடைய குழந்தைகள் கண்தொடர்பைப் பேண, தொடர்பாட, பேச, நடக்க, உணவுகளை உட்கொள்ள, பிறரோடு பழக, சுதந்திரமாக வாழ்வதற்குரிய வாழ்க்கைத் திறன்களைக் கற்க, பாடசாலைக் கல்வியுடன் தொடர்புடைய விடயங்களைக் கற்க என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புப் பயிற்சிகள் உள்ளன. ஓட்டிச அறிகுறிகள் வெளிப்பட்ட ஆரம்ப நிலையிலேயே, தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுப் பொருத்தமான பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகளை ஆரம்பிப்பது சிறந்த பலாபலன்களைத் தரும்.
Compiled by K. Heerthikan