Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Acute Confusional State (தீவிரமான மாறாட்ட நோய்)

சிலவேளைகளில் உடல் சார்ந்த நோய்களும் உளநோய்களுக்குரிய அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். உதாரணமாக உடலில் தைரொக்சின் சுரப்பு அதிகமாகின்ற பொழுது, பயம், பதட்டம், கைகளில் நடுக்கம் போன்ற பதகளிப்பு அறிகுறிகள் உருவாகலாம். அதுபோல் அச்சுரப்பு குறைவடைகின்ற பொழுது, கவலையான உணர்வு, உடல் உளச் சோர்மானம், பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு போன்ற மனச்சோர்வு அறிகுறிகள் தோன்றலாம். இந்த உடல் சார்ந்த நிலைமைகள் மூளையின் தொழிற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் உளநோய் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

உடல்நோய்கள் மூளையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிகமாகின்ற பொழுது இன்னுமொரு தொகுதி உளநோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தலாம். இவ்வாறான வேளைகளில் நோயுற்றவர்கள் தமது சூழல் பற்றிய விழிப்புநிலை அற்றவராக, நேரம் – காலம் – நபர்கள் பற்றிய தெளிவு இல்லாதவராக, ஒரு மாறாட்டமான மனநிலையில் காணப்படுவர். அவர்களது கவனிக்கும் திறன் மற்றும் கருத்தூன்றல் என்பவற்றில் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும். அவர்கள் மாயப் புலனுணர்வுகளையும், போலி நம்பிக்கைகளையும், பொருள் மயக்க நிலைமைகளையும் அனுபவிப்பார்கள். இவற்றின் காரணமாக அவர்களது உணர்ச்சி வெளிப்பாடுகளும், நடத்தைகளும் குழப்பம் நிறைந்தவையாகக் காணப்படலாம். சிலர் மிகவும் அமைதியாக, தூண்டல்களுக்கேற்ற பொருத்தமான துலங்கல்களைக் காட்டாது இருக்கும் அதேவேளை, வேறுசிலர் அதிகரித்த, அந்தரப்படுகின்ற நடத்தைகளை வெளிக்காட்டுவார்கள். முக்கியமாக அவர்கள் பகலில் அமைதியாக உறங்குபவர்களாகவும், இரவில் தூக்கமின்றிக் குழப்பமான நடத்தைகளை வெளிக்காட்டுபவர்களாகவும் மாறியிருப்பார்கள். இவ்வாறான ஒரு நோய்க்கூட்டுத் தொகுதியானது மாறாட்டம் அல்லது மாறாட்டமான மனநிலை (Confusion) என்று அழைக்கப்படுகின்றது.

இந்த மாறாட்டமான மனநிலையானது திடீரென்று ஏற்பட்டு மிகவும் தீவிரமாக வெளிப்படுத்தப்படுகையில் அது தீவிரமான மாறாட்ட நோய் (Acute Confusional State) என அழைக்கப்படுகின்றது. அடிப்படையில் மூளையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கின்ற எந்தவிதமான நோய் நிலைமைகளும் தீவிரமான மாறாட்ட நோயின் வெளிப்பாடுகளை உருவாக்கலாம். தலையில் ஏற்படும் காயங்கள், மூளையில் ஏற்படுகின்ற இரத்தக் கசிவுகள் மற்றும் தொற்றுக்கள் போன்றவை மூளையை நேரடியாகப் பாதிக்கின்றன. உடலுறுப்புகளின் செயலிழப்புகள், உடலில் நச்சுப்பதார்த்தங்களின் அதிகரிப்பு, ஓமோன்கள் மற்றும் உப்புக்களின் சமநிலையிழப்பு போன்ற காரணிகள் மூளையை மறைமுகமாகப் பாதிக்கின்றன. இவையனைத்தும் தீவிரமான மாறாட்ட நோயை ஏற்படுத்தும் காரணிகளாகின்றன. சுருங்கக் கூறின், எல்லாவிதமான உடல்நோய்களும், அவற்றினது கடுமைத் தன்மை அதிகரிக்கின்ற பொழுது, தீவிரமான மாறாட்டத்தை ஏற்படுத்தக் கூடியன.

தீவிரமான மாறாட்ட நோயானது அடிப்படையில் உடல் சார்ந்த நோய்களின் கடுமையை மறைமுகமாக வெளிப்படுத்தி நிற்பதனால் அவ்வாறான ஒரு மாறாட்ட நிலைமை அவதானிக்கப்படுமிடத்து, உடனடியாக வைத்திய ஆலோசனை பெறப்படுவது அவசியமானது. மாறாட்ட இயல்புகளோடு காணப்படும் எந்த ஒரு நோயாளியும் தகுதி வாய்ந்த வைத்தியர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, பொருத்தமான வைத்திய சிகிச்சை பெறவேண்டியது மிகவும் முக்கியமானது.