Mental Health Society Tellippalai, Jaffna.
Close

பாலியல் ஆரோக்கியம்

பாலியல் என்பதனை, ஒருவர் எவ்வாறு தனது பாலியல் சார்ந்த விடயங்களை உணர்ந்து கொள்கிறார், அவர் எவ்வாறு அவற்றை வெளிப்படுத்துகின்றார் என்பதன் அடிப்படையில் வரையறை செய்து கொள்ளலாம்.

 

ஏனைய பல தொழிற்பாடுகளைப் போன்று மனிதர்களின் பாலியல் நடத்தைகளிலும் (பாலுறவு, பாலியல் தெரிவு, எதிர்பார்ப்புகள், ஆசைகள் போன்றவை) மூளையே மிகவும் பிரதான பாத்திரத்தை ஆற்றுகின்றது. வழமையாக, பாலியல் என்ற விடயத்துடன் இணைத்து வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியே அளவுக்கதிகம் கதைக்கப்பட்டாலும், “மனிதருடைய மிக முக்கியமான பாலுறுப்பு மூளைதான்” என்று கூறினால், அது மிகையாகாது. எனவே, ஒருவருடைய பாலியல் அனுபவங்களில் அவர் சார்ந்த பண்பாடு, சூழல், முன்னைய அனுபவங்கள், நம்பிக்கைகள், கற்பனைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியன மிகவும் பெரியளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

 

பாலியல் தொடர்பான அருட்டல்களுக்கும், அல்லது அவை இல்லாது போய்விடுவதான நிலைமைகளுக்கும் எமது ஐம்புலன்களிலிருந்தும் உருவாகும் உள்ளீடுகள் மகத்தான பங்களிப்பை நல்குகின்றன. ஐம்புலன்களினால் உருவாகும் சமிக்ஞைகள் முள்ளத்தண்டின் வழியாக பாலியல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகின்றன. இந்தச் சமிக்ஞைகளானவை பாலியல் அருட்டல் தொடர்பானதாக இருந்தால், பாலுறுப்புகள் உடலுறவுக்காகத் தயார்ப்படுத்தப்படுகின்றன.

 

பாலியல் அருட்டல்நிலை ஏற்பட்டாலும், ஒருவருடைய மூளைதான் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வெளிப்படையான பாலியல் நடத்தைகளைக் காட்டுவது பொருத்தமானதாக இருக்குமா இல்லையா என்பதனைத் தீர்மானிக்கின்றது. ஒருவருடைய பாலியல் துணைவரைத் தவிர வேறொருவர் காரணமாக பாலியல் அருட்டல் நிலையை அடைதல் என்பதனை அசாதாரணமாகவோ, அல்லது வெட்கப்படவேண்டிய ஒன்றாகவோ கருதத் தேவையில்லை. உண்மையில் ஒருவர் அச்சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதே முக்கியமானது.

 

ஒருவர் திறந்த மனதோடு தன்னுடைய பாலியல் சார்ந்த தேவைகள், ஆசைகள், விருப்பத் தெரிவுகள் என்பவற்றைத் தனது பாலியல் துணைவருடன் உரையாடுவதோடு, எவ்வாறான விடயங்கள் தங்கள் இருவருக்கும் அதிகமான இன்பத்தை அளிக்கின்றன என்பது பற்றியும் ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். அத்தோடு, தமது துணைவரது விருப்புகள், விருப்பமின்மைகள் ஆகியவற்றிற்கு மதிப்பளித்துக்கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளுதல் என்பதுவும் அதேயளவிற்கு முக்கியமானது. இந்தவாறான நடவடிக்கைகள், குறிப்பாக நீண்டகால உறவுகளைப் பொறுத்தவரையில், பாலியல் வாழ்க்கையின் தரத்தை மிகவும் மேம்பாடான நிலையில் வைத்திருப்பதற்கும், சலிப்பை அகலச் செய்வதற்கும் உதவுகின்றன. நல்லதொரு பாலியல்சார் உறவைக் கொண்டிருக்கும் தம்பதியினர், தமது ஒட்டுமொத்தமான உறவுநிலையிலும் திருப்திகரமாக இருக்கின்றார்கள் என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

 

 

முதுமையில் பாலியல்

சிலருக்கு வயது அதிகரிக்கின்ற பொழுது பாலியல் தொடர்பான உந்துதல் குறைவடைந்து செல்வதுவும், அதன் காரணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அளவு மற்றும் அதற்குச் செலவழிக்கின்ற நேரம் என்பன குறைவடைந்து செல்வதுவும் இயல்பானது. மறுதலையாக, “எமக்கு இப்போது வயதாகிவிட்டது அல்லது எமக்கு வளர்ந்த பிள்ளைகள் இருக்கின்றனர், அதனால் நாம் உடலுறவு கொள்வது பொருத்தமற்றது” எனும் பழங்கதை ஒன்றும் நிலவி வருகின்றது. உண்மையில், பாலியல் நாட்டத்திற்கு வயதுகள் எல்லைகளாகிவிட முடியாது.

 

முதுமையப் பராயத்தில் சிலவிதமான உடல்சார் திறனாற்றல் குறைபாடுகள் உடலுறவிற்குத் தடங்கலாக அமைந்துவிடலாம். ஆயினும், பொருத்தமான மருத்துவ வழிகாட்டுதல்களோடு பெரும்பான்மையான தடங்கல்களை வெற்றி கொள்ளலாம். மேலும், பாலியல் திருப்தி என்பதை உடலுறவு கொள்ளாமலே, ஐம்புலன்களாலும் கிடைக்கப்பெறுகின்ற பாலியல் இன்பத்தை உணர்ந்து கொள்ளும்படி மூளையைப் ‘பயிற்றுவித்தலின்’ மூலமும், பெற்றுக் கொள்ளலாம். எனவே, உடலுறவுச் செயற்பாடு மட்டும்தான் பாலியல் வாழ்க்கையை அனுபவிப்பதற்குரிய அத்தியாவசியமான ஒன்று என்றில்லை.

  

பாலியல் மற்றும் பாலியல் ஆரோக்கியம் என்பவற்றோடு தொடர்புடைய பிரச்சினைகளும் எண்ணக்கருக்களும்

 

பாலியல் வன்முறை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வரையறைப்படி, “பாலியல் ஆரோக்கியம் என்பது ஒருவர் தன்னுடைய பாலியல் சார்ந்து உடல், உள, சமூக தளங்களில் நன்னிலையோடு இருப்பதாகும். அது பாலியல் மற்றும் பாலியல் உறவு தொடர்பாக ஒரு நேர் மனப்பாங்குடனான, கௌரவத்தோடமைந்த அணுகுமுறையையும், வற்புறுத்தல்கள், பாகுபாடு காட்டல்கள் மற்றும் வன்முறைகள் அற்றவிதத்தில் மகிழ்வான மற்றும் பாதுகாப்பான பாலியல் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்களையும் வேண்டி நிற்கும்.”

 

எனவே பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுமாறு ஒருவரும் (அது அவர்களது வாழ்க்கைத் துணைவராக இருந்தாலும்) வற்புறுத்தப்படலாகாது. யாராவது அவ்வாறான வற்புறுத்தல்கள் அல்லது வன்முறைகளை அனுபவிப்பார்களேயாயின், அவர்கள் அதுபற்றி சட்டத்துடன் தொடர்புடைய அமைப்புகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது அவர்கள் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளிடமிருந்து தமக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

பால்நிலை அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை

பாலியல் ஆரோக்கியம் பற்றிக் கதைக்கின்ற பொழுது அதில் பால்நிலை அடையாளம், பாலியல் நோக்குநிலை ஆகிய இரண்டு முக்கியமான கருத்துநிலைகள் உள்ளன. பால்நிலை அடையாளம் என்பது ஒருவர் அவரது உயிரியல் ரீதியில் (பரம்பரை அலகுகளினால்) தீர்மானிக்கப்பட்ட பால் எது என்பதனைத் தாண்டி, தனது பால் அடையாளத்தை ஆணாகவா அல்லது பெண்ணாகவா உணர்ந்து கொள்கிறார் என்பதனைக் குறிக்கின்றது. வழமையாக உயிரியல் ரீதியில் ஆணாகப் பிறந்த ஒருவர் தன்னை ஆணாகவும், பெண்ணாகப் பிறந்த ஒருவர் தன்னைப் பெண்ணாகவும் உணர்ந்து கொள்வர்.

 

ஆனால் ஒருவர் தனது உயிரியல் ரீதியலான பால்நிலையுடன் அடையாளங் காணுவதில் சங்கடங்களை அனுபவிக்கின்ற பொழுது, அவ்வாறானதொரு நிலை அவருக்கு மிகவும் கடுமையான துன்பதுயரங்களைக் கொடுத்து நிற்கும். இவ்வாறான முரண்பாடு ஏன் ஏற்படுகின்றது என்பது பற்றிய விளக்கங்கள் இன்னமும் தெளிவானவையாக இல்லாதுவிடினும், உயிரியல் ரீதியில் ஒதுக்கப்பட்ட பால் நிலை தொடர்பில் ‘சங்கடமாக உணர்ந்து கொள்ளல்’ என்பது ஒருவருடைய கட்டுப்பாட்டை மீறிய ஒரு விடயமாகும். அவ்வாறானவர்கள் ‘தாம் பிழையான ஓர் உடம்பில்’ இருப்பதாக உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் ‘பால்நிலை (தொடர்பாக) அமைதியற்ற மனநிலை’ எனும் ஒரு நிலைமையினால் வருந்திக் கொண்டிருப்பார்கள்.

 

பால்நிலை நோக்குநிலை என்பது ஒருவரது பாலியில் ஈர்ப்புத் தொடர்பான விருப்பத் தெரிவைக் குறிக்கின்றது. அது எதிர்ப்பாலார் மீது இருந்தால் அவர்கள் ‘இருபாலுறவாளர்கள்’ (ஈரினச் சேர்க்கையாளர்கள்) என்றும், அந்தக் கவர்ச்சியானது ஒத்த பாலார் மீது இருந்தால் அவர்கள் ‘ஒருபாலுறவாளர்கள்’ (ஓரினச் சேர்க்கையாளர்) என்றும் குறிக்கப்படுவார்கள். சிலர் ஒத்தபாலார், எதிர்ப்பாலார் ஆகிய இரண்டுபாலாருடனும் ஈர்ப்புடன் இருப்பார்கள். ஓரினச் சேர்க்கையில் (ஒருபாலுறவில்) ஈடுபடுதல் என்பதுவும் ஓர் இயல்பான, ஆரோக்கியமான பாலியல் நடத்தைதான் என்பதனை விளங்கிக் கொள்வது முக்கியமானது. எனவே அதற்கு எதிராக மாறுபாடு காட்டி, அதனைப் புறந்தள்ளக் கூடாது. எவ்வாறு ஈரினச் சேர்க்கையாளர்களின் (இருபாலுறவாளர்களின்) மூளையானது தமது எதிர்ப்பாலைச் சேர்ந்த ஒரு துணையை நோக்கிப் பாலியல் அருட்டல் ஏற்படுமாறு நரம்புச் சுற்றுக்களைக் கொண்டிருக்கின்றதோ, அவ்வாறே, ஓரினச் சேர்க்கையாளர்களின் (ஒருபாலுறவாளர்களின்) மூளையும் தமது ஒத்தபாலுடைய துணையை நோக்கி பாலியல் அருட்டல் ஏற்பாடும் விதமாக நரம்புச் சுற்றுகளைக் கொண்டிருக்கும். மேற்குறிப்பிட்ட இரண்டும் ஒருவருடைய சுயவிருப்பத்தினாலோ, உளசக்தி அல்லது மனக்கட்டுப்பாட்டினாலோ மாற்ற முடியாததாக இருக்கும். 

 

 பாலியல் தொடர்பான கட்டுக் கதைகள்

1.சுயபாலின்பமானது ஒருவருடைய உடலைப் பலவீனப்படுத்துகிறது

சுயபாலின்பம் காணுதல் என்பது ஆண்களாலும், பெண்களாலும் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு சாதாரணமான, இயல்பான பாலியல் நடத்தையாகும். ஒருவர் சுயபாலின்பம் காணும் நடத்தைகளில் ஈடுபடுகிறார் எனில், அது அவரது உள மற்றும் பாலியல் நன்னிலையைக் காட்டுகின்றது. மாறாக, ஒருவர் சுயபாலின்ப நடத்தைகளில் ஈடுபடாது இருப்பாராயின், அது ஒரு நோயின் வெளிப்பாடாக இருக்கும் என்றும் கருதத் தேவையில்லை. மேலும், சுயபாலின்ப நடத்தைகளில் ஈடுபடுவதற்கு வயது ஒரு தடையல்ல.

 

2.முதல் உடலுறவானது பெண்களுக்கு நோவை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துவிடும்

இது மிகவும் பரவலாக இருக்கின்ற ஒரு கட்டுக்கதையாகும். இதனால் இளவயதுப் பெண்கள் தமது முதலாவது உடலுறவு தொடர்பாக மிகுந்த அச்சத்தோடு இருப்பார்கள். முதலாவது உடலுறவு என்பது வலியை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்காது. ஒரு பெண் உடலுறவு கொள்வது பற்றி மிகவும் பயந்துபோய் இருந்தால், அவருக்குச் சிலவேளைகளில் ‘யோனியிறுக்கம்’ எனும் ஒரு நிலைமை ஏற்படலாம். இது ஒரு குணமாக்கக்கூடிய உளப்பிரச்சினையாகும்.

 

3.ஒரு பெண் தனது முதலாவது உடலுறவின்போது இரத்தம் சிந்துவாள்

இந்தவாறான ஒரு கட்டுக்கதை சில தசாப்பதங்களுக்கு முன்னர் மிகவும் பரவலாக இருந்தது. ஆயினும், தற்போது பெரும்பாலான இளவயதினர் இதனை நம்புவதில்லை. இருந்தபோதிலும், மிகவும் சிறிய அளவினர் இப்பொழுதும் தமது துணைவரோடு உடலுறவு கொண்டதன் பின்னர் இரத்தக்கறைகள் ஏற்பட்டுள்ளனவா எனத் தேடிப் பார்க்கின்றனர். அவ்வாறு இரத்தம் ஏதாவது வெளிப்படால், அது யோனியினுள் இருக்கின்ற மிக மெல்லிய மென்சவ்வான ‘யோனிச் சவ்வு’ கிழிபடுதல் மூலமே ஏற்படுகின்றது. சில பெண்களில் இந்த யோனிச் சவ்வானது இல்லாமலிருக்கலாம். வேறு சிலரில் கடுமையான உடல் ரீதியிலான செயற்பாடுகள் காரணமாக அது ஏற்கனவே கிழிந்து போயிருக்கலாம். இன்னும் சிலரில் அது உடலுறவின்போது கிழிபடாமலும் போகலாம். இந்தக் கட்டுக்கதையை நம்புகின்றவர்கள் ஒரு பெண் தனது முதலாவது உடலுறவின்போது இரத்தம் சிந்தாது விட்டால், அவளை ஒரு ‘துர்நடத்தையுள்ள’ ஒருவராக அவமரியாதை செய்வார்கள். இதை மேலும் சற்று விரிவாக ஆராய்ந்தால், “நல்ல நடத்தை என்பது ஒருவர் தனது திருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொண்டிருக்கிறாரா? இல்லையா என்பதனால்தான் தீர்மானிக்கப்படுகிறதா? என்ற வினா தவிர்க்கமுடியாதபடி எழுகிறது. அவ்வாறாயின் அதேவிதமான கருத்துநிலையை ஆண்களுக்கும் உபயோகிக்கலாமா?

 

4.‘சிலவகையாள பாலியல் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையல்ல

இருவர்க்கிடையே நடைபெறும் பாலியல் செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டால், விதவிதமான பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை அந்த இருவரும் கொண்டிருக்க வேண்டும் என்பதுவும், அவை ஆபத்துக்களை ஏற்படுத்தாத செயற்பாடுகளாக இருக்க வேண்டும் என்பதும்தான் முக்கியமானது. குறிப்பாக நீண்டகால உறவிலிருப்பவர்களைப் பொறுத்தவரை, இவ்வாறான செயற்பாடுகள் பாலியல் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவதோடு, சலிப்பு ஏற்படுதலிலிருந்தும் விடுவிக்கின்றன. பல்வகைமையான அனுபவத்தைப் பெறுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணைவர்களை நாடாது, ஒரு உறவிலேயே பல்வகையான செயற்பாடுகளை நாடி அதனை அடைவது எல்லாவகையிலும் ஆரோக்கியமானது.

 

மறுபுறுத்தில், சிறுவர்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது, பாதிக்கப்படுபவர்களின் விருப்பம் இல்லாமலே அவர்கள்மீது தமது பாலியல் உறுப்புகளால் உரசுவது, பொதுவெளியில் பாலுறுப்புகளை வெளிக்காட்டுவது போன்ற பல்வேறுவிதமான ‘பாலியல் விலகல்’ நடத்தைகள் இருக்கின்றன. இவை யாவும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களாகும். இந்த வகைப்பட்ட நிலைமைகள் தகுந்த நடத்தைமாற்றுச் சிகிச்சை முறைகளை உபயோகித்துச் சிகிச்சையளிக்க கூடியன.

 

 

  உளநலம் தொடர்பான பிரச்சினைகள்

பாலியல் ஆராக்கியத்தைப் பாதிக்கும் உளவியல் காரணிகள்

1.சூழல் உகந்த ஒன்றாக இல்லாது இருத்தல்

ஒருவர் பாலியலை மகிழ்வாக அனுபவிக்க வேண்டுமாயின், பாலியல் அருட்டல் மற்றும் பாலியல் எண்ணங்கள் தொடர்பான தூண்டல்கள் மிகவும் முக்கியமானவை. இன்னுமொருவகையில் கூறுவதாயின், பாலியல் இன்பமானது பயன்தருமளவில் இருக்கவேண்டுமாயின், கவனஞ் செலுத்துதல் மற்றும் கருத்தூன்றல் என்பவை முழுமையாக இருக்க வேண்டும். ஒருவர் தமது உறவின் அந்தரங்கத் தன்மை காணாததுபோல் உணர்ந்து, அல்லது கர்ப்பம் தரித்துவிடக் கூடுமோ என்ற பயத்தினை உணர்ந்து, அந்த உணர்வுகளில் மூழ்கி இருப்பாராயின், அவருடைய அந்த எண்ணங்களும் உணர்வுகளும் பாலியல் திருப்தியை அடைவதற்குத் தடையாக இருந்துவிடும். எனவே பாலியல் செயற்பாடுகளின்போது தேவையானளவு அந்தரங்கத் தன்மை பேணப்படுவதும், நம்பகமானதொரு கர்ப்பத்தடை முறையை உபயோகிப்பதுவும் இன்றியமையாதது.

 

2.உறவு செழுமையற்று இருத்தல்

பாலியல் அருட்டல் மற்றும் பாலியல் இன்பம் என்பவற்றில் மூளையே பிரதானமான பங்கை வகிப்பதனால், குறைபாடுள்ள தொடர்பாடல் முறைமையை உடைய, புரிந்துணர்வு அற்ற, உறவாடலைத் துஷ்பிரயோகம் செய்கின்ற உறவுநிலையில் இருப்பவர்களின் பாலியல்சார் உறவுநிலையும் குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும்.

 

3.முன்னுறவுச் செயற்பாடுகளின் போதாமை

ஓர் உடலுறவிற்கு முதல் தம்பதியினரிடையே உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இடம்பெறும் நெருக்கமான செயற்பாடுகள் முன்னுறவுச் செயற்பாடுகள் என்ற வகையுள் அடங்குகின்றன. இந்தச் செயற்பாடுகள் ஒரு பாலியற் செயற்பாட்டுக்குத் தேவைப்படும் பாலியல் வேட்கை மற்றும் அருட்டல் நிலையை உருவாக்குவதோடு, தயக்கங்களை அகற்றி, நெருக்கத்தைக் கூட்டுகின்றன. முன்னுறவுச் செயற்பாடுகளானவை போதுமானளவு நேரம் இடம்பெற வேண்டியது அவசியம். குறிப்பாக, பெண்கள் பாலியல் ரீதியிலான அருட்டல் நிலையை அடைவதற்கு இவை மிகவும் முக்கியமானவை. அருட்டல்நிலை போதுமானளவு இல்லாத பொழுது, யோனியினுள் சுரக்கப்படும் சுரப்புகள் குறைவாக இருப்பதனால், உடலுறவானது நோவை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக மாறிவிடலாம். இது பின்பு பாலுறவு தொடர்பில் பெண்ணுக்கு ஏற்படுகின்ற விருப்பு வேட்கையைக் குறைத்து விடலாம். மேலும், சிலர் தமது பாலியலின்பத்தின் உச்சதிருப்திநிலையை உடலுறவினால் இன்றி, வேறு வழிவகைகளாலமைந்த பாலியல் தூண்டுதல்களால் பெற்றுக் கொள்வார்கள் என்பதுவும் மனங்கொள்ளத்தக்கது.

 

4.துணைவர்மீது பாலியல் ஈர்ப்பு அற்றுப்போதல்:

இது உறவு தொடங்கிய காலம் முதலேயோ, அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் திருப்திகரமான பாலுறவு இருந்து, அதன் பின்னர் ஏற்பட்ட ஒரு விடயமாகவோ இருக்கலாம். மிகவும் குறைந்த எண்ணிக்கையான சிலர் பாலியல் ஆர்வம் அறவே அற்றுப்போனவர்களாக இருக்கலாம்.

 

தமது துணைவர்மீது பாலியல் ஈர்ப்பு அற்றுப்போகும் நிலையானது பிற்காலத்தில் உருவாகிய ஒன்றாயின், அது அநேகமாக ஓர் உளநோயின், ஓய்வொழிச்சலில்லா மனநிலையின், சலிப்படைதலின் வெளிப்பாடாக, அல்லது இன்னொருவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இருக்கலாம்.

 

போதை தரும் இன்பம்

ஒருவர் இன்பமாக உணர்ந்து கொள்வதற்கான பொறிமுறையாக, மூளையிலிருக்கும் ‘வெகுமதித் தொகுதி’ எனும் ஒரு கட்டமைப்பு தூண்டப்படுவது காரணமாக அமைந்திருக்கின்றது. ஒரு சுவையான உணவை உண்ணுகின்ற பொழுது, விருப்புக்குரிய இசையைக் கேட்டு இரசிக்கின்ற பொழுது, அல்லது உடலுறவில் ஈடுபடும் பொழுதுகளில் எல்லாம் மூளையின் இந்த வெகுமதித் தொகுதியில் கணத்தாக்கங்கங்களைக் கடத்துவதற்கான இரசாயனப் பதார்த்தமாக இருக்கும் டோப்பமின் வெளிவிடப்படுகின்றது. இதனால் ஒருவர் இன்பமானதோர் உணர்வைப் பெறுகின்றார்.

 

போதையை ஏற்படுத்தி அடிமைப்படுத்தும் பதார்த்தங்களும் இந்த வெகுமதித் தொகுதியில் டோப்பமினைச் சுரக்கச் செய்து, அதனூடாக ஒரு தற்காலிகமான, குறுகிய காலம் மட்டும் நிலைத்து நிற்கக் கூடிய இன்பத்தை ஏற்படுத்தி, ஒருவரைப் போதையை அடிக்கடி உபயோகிக்கின்ற ஒரு நோயாளியாக (போதைப்பொருள் துர்ப்பாவனை, போதைப்பொருளுக்கு அடிமைப்பட்ட நிலை) ஆக்குகின்றன. இதனை ஒரு பாரிய உளநோயாகக் கொள்ளலாம். இந்த நிலையினது முக்கியமானதோர் அம்சமாக இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடலுறவு உட்பட, ஏனைய தனது நாளாந்தச் செயற்பாடுகள் ஊடாக இயல்பாகப் பெறுகின்ற இன்பமான உணர்வைப் பெறமுடியாதவராக மாறிவிடுவார்.

 

 

பொதுவான பாலியல் குறைபாடுகள்

 பாலியல் பிரச்சினைகளுக்கு உதவிபெறுதல்

ஒருவர் தனது பாலியல் வாழ்க்கையில் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அவர் ஒரு தகுதியான வைத்தியரை நாடுவது முக்கியமானது. அதுபோல், பாலுறவில் சம்பந்தப்பட்ட இரு துணைவர்களும் வைத்தியரைச் சந்திக்கச் செல்வதுவும், தமது பிரச்சினை பற்றி வைத்தியரோடு மனம் திறந்து கதைப்பதுவும் முக்கியமானது. வைத்தியர் என்பவர் ஒருவரது பாலியல் செயற்பாடுகளைப் பற்றித் தீர்ப்பிடமாட்டார். மாறாக, அவர் ஒருவரது தேவையில்லாத பயங்கள் மற்றும் கட்டுக்கதைகள் ஊடாக ஏற்பட்ட மன அபிப்பிராயங்கள் என்பவற்றைக் களைந்து கொள்ள உதவுவதோடு, அவரது பாலியல் பிரச்சினைக்குரிய அடிப்படையான காரணிக்குத் தகுந்த சிகிச்சைகளையும் மேற்கொள்வார். ஒருவர் வைத்தியருக்குத் தெரிவிக்கின்ற விடயங்கள் யாவும் இரகசியத் தன்மையோடு பேணப்படும் என்பதனை வைத்தியத்துறை சார்ந்த ஒழுக்க நெறிமுறைகள் உறுதி செய்யும்.

 

This is an extract from the Tamil translation of the book, ‘You and Your Mental Health by Dr. Dewasmika Ariyasinghe, Senior Lecturer and Specialist in Psychiatry