பாலியல் தொழிற்பாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைப் பாலியல் கோளாறுகள் என அழைக்கலாம். இந்தப் பிரச்சினைகள் ஆண்களிலும், பெண்களிலும், பாலுறவுடன் தொடர்புடைய எல்லா அவத்தைகளிலும் ஏற்படலாம்.
சில பிரச்சினைகள் நீண்டகாலமாக, தொடர்ச்சியாக அமைந்திருக்கக் காணப்படலாம். வேறு சில பிரச்சினைகள் அண்மையில் ஏற்பட்டனவாக அல்லது இடையிடையே ஏற்பட்டனவாக அமையலாம். அதுபோல் சில பிரச்சினைகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏற்படலாம். ஆனால் வேறு சில பிரச்சினைகளோ குறிப்பிட்ட சிலவேளைகளில், சூழ்நிலைகளில் மட்டுமே ஏற்படுவதனை அவதானிக்கலாம்.
பாலியல் கோளாறுகள் ஏற்படுவதற்கு உடலமைப்பியல், உடற்றொழிலியல் சார்ந்த சில குறைபாடுகள் காரணமாகலாம். உதாரணமாக, இனப்பெருக்க உறுப்புகளின் விருத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பாலியல் தொழிற்பாட்டில் குறைபாடுகளை ஏற்படுத்தலாம். அதுபோல் நரம்புகளின் செயலிழப்பு, குருதிக் குழாய்களில் அடைப்பு போன்றனவும் திருப்திகரமான பாலுறவுக்குத் தடையாக அமைந்துவிடலாம்.
மேலும் ஒருவருக்கு இருக்கக்கூடிய உடல் நோய்கள் (உதாரணமாக சலரோகம், வலிப்பு நோய், குருதிக்குழாய் நோய்கள் போன்றன), உளநோய்கள் (உதாரணமாக உளப்பிளவை, மனச்சோர்வு, பதகளிப்பு போன்றன) மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் (உதாரணமாக மனநோய் மருந்துகள், வலிப்பு எதிர் மருந்துகள், உயர் குருதியமுக்கத்திற்கு எதிரான சிலவகை மருந்துகள் போன்றன) பாலியல் கோளாறுகளை ஏற்படுத்தவல்லன.
அங்கவீனங்கள். சிலவகையான சத்திரசிகிச்சைகள் போன்றனவும் பாலியல் தொழிற்பாட்டில் குறைகளை ஏற்படுத்தக்கூடும். அதுபோல் அதிகரித்த மதுபாவனையும், புகைப்பிடித்தலும் உடல், உளநோய்களை மட்டுமன்றி பாலியல் கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடியனவாக அடையாளங் காணப்பட்டிருக்கின்றன.
மிகப் பெரும்பாலான (கிட்டத்தட்ட 85%மான) பாலியல் கோளாறுகளின் பின்னணியில் உளவியல் சார்ந்த பிரச்சினைகளே இருப்பதாகக் கருதப்படுகின்றது. இந்த உளவியல் பிரச்சினைகள் பயம், பதகளிப்பு, ஆர்வக் குறைபாடு, தொடர்பாடல் இன்மை, தம்பதியினருக்கிடையில் ஏற்படும் உறவுப் பிரச்சினைகள், தன்னம்பிக்கைக் குறைபாடு போன்ற பலவிதமான குறுகியகாலக் காரணங்களால் ஏற்படலாம்.
உதாரணத்திற்குப் பயம் என்ற ஒன்றை மட்டும் எடுத்து ஆராயலாம். ஒரு பாலுறவின்போது பயம் பல வழிகளில் ஏற்படலாம். ஒருவர், தான் சரியாக நடந்து கொள்கிறேனா? திறம்படத் தொழிற்படுகின்றேனா? எனப் பயப்படலாம். சாதகமற்ற சூழ்நிலைகளில் நடைபெறுகின்ற பாலுறவின்போது, தங்களை மற்றவர்கள் கவனித்து விடுவார்களோ? என்று பயம் தோன்றலாம். பாதுகாப்பற்ற பாலுறவின்போது பாலியல் நோய்கள், வேண்டத்தகாத கர்ப்பம் போன்றன ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் தலை தூக்கலாம். தான் மறுப்புச் சொன்னால், அதனால் உறவுப் பிரச்சினை ஏற்படலாம் என ஒருவர் பயங்கொள்ளலாம். இவ்வாறான பல்வேறு பயத்தை ஏற்படுத்தும் நிலைமைகள் ஒரு திருப்திகரமான, தளர்வான, மனதுக்கு இனிமையான பாலுறவை மேற்கொள்வதில் தடங்கல்களை ஏற்படுத்தலாம்.
இன்னுமொரு வகை உளவியல் சார்ந்த காரணிகளை நீண்டகாலமாக இருக்கின்ற உளவியல் காரணிகள் என அழைக்கலாம். குற்றவுணர்வு. அசூயை உணர்வு, எதிர்ப்பாலாருடனான நம்பிக்கைக் குறைபாடு, சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகம், மனவடுவை ஏற்படுத்துகின்ற வல்லுறவுகள், பிரத்தியேகமான சில நம்பிக்கைகள் போன்றவற்றை நீண்டகாலமாக இருக்கக்கூடிய உளவியல் பின்னணியாகப் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு, ஒரு சிறுவன் அல்லது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டால், அதனால் ஏற்படுகின்ற உளத்தாக்கமானது மனவடுவாக மாறி நீண்டகாலம் நிலைத்து நிற்கும். அது அவர்களுக்கு எதிர்ப்பாலார் சம்பந்தமாக இருக்க வேண்டிய நம்பிக்கையைச் சிதைத்து, அவர்கள் தொடர்பான ஓர் எதிர் உணர்வைத் தோற்றுவித்துவிடக்கூடும். இந்தத் தாக்கம் அவர்கள் வளர்ந்ததன் பின்பு, பாலியல் தொடர்புகளை ஏற்படுத்தும்போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இவை பாலியல் கோளாறுகளுக்குக் காரணமாகலாம்.
பாலியல் கோளாறுகளுக்கான பரிகாரம்
பாலியல் கோளாறுகளுக்கான தீர்வுகளுக்காக எவ்வாறு உதவி வழங்கலாம்? என்பதனைத் தீர்மானிப்பதற்குப் பல்வேறு விடயங்கள் கருத்தில் எடுக்கப்படுகின்றன.
பாலியல் பிரச்சினை பற்றிய தகவல்கள் தம்பதியினர் இருவரிடமும் தனியாகவும், கூட்டாகவும் பெறப்படும். இதன்பொழுது பிரச்சினைகளின் தன்மை, வகை போன்றன அடையாளங் காணப்படும். பிரச்சினையின் பின்னணியில் ஏதாவது உடல் நோய்கள், மருந்துகள் சார்ந்த பக்கவிளைவுகள் போன்றன காணப்பட்டால் அவற்றுக்கான பரிகாரங்கள் சிபாரிசு செய்யப்படும்.
உளவியல் காரணங்கள் ஆராயப்பட்டு, அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகள், சிகிச்சை முறைகள் முன்வைக்கப்படும். அறிகை மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சை முறைகளே பாலியல் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு எனப் பெரும்பாலும் பயன் படுத்தப்படுகின்றன.
மாஸ்ரர்ஸ் மற்றும் ஜோன்சன் (Masters and Johnson) ஆகியோரினால் முன்மொழியப்பட்ட அறிகை மற்றும் நடத்தைச் சிகிச்சை முறைகள் சில மாற்றங்களோடு மிகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சிகிச்சையில், பாலுறவைத் தற்காலிகமாக நிறுத்தி, பின்பு படிப்படியான அறிவூட்டல்களும் பயிற்சிகளும் ‘வீட்டு வேலையாகக்” கொடுக்கப்பட்டு, அவற்றுக்கான பின்னூட்டல்கள் பெறப்பட்டு, அதன் மூலம் பாலியல் கோளாறுகள் உள்ள தம்பதியினரின் அநேகமான பிரச்சினைகள் சீர்செய்யப்படுகின்றன.
இவற்றைவிட, பாலியல் கோளாறுகளுடன் தொடர்புடைய தனியாள் சார்ந்த குறுகிய கால – நீண்டகால உளப் பிரச்சினைகள் ஆழமாக ஆராயப்பட்டு, உளவியல் ரீதியாக அணுகப்படும்.
பாலியல் கோளாறுகளுக்கான மருந்துகளின் பாவனை என்பது மிகவும் சிக்கலான, நிபுணத்துவம் சார்ந்தவையாக இருக்கின்றன. அதனை வைத்திய நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
என்னவிதமான காரணங்களாக இருந்தாலும் சில பொதுவான விடயங்கள் பாலியல் வாழ்வின் பிரச்சினைகளைக் குறைத்துச் சுவையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. பாலியல் உறுப்புகள் பற்றியும், சாதாரணமான பாலியல் தொழிற்பாடு பற்றியும் அறிந்திருப்பது முக்கியம். பாலியல் தொழிற்பாடுகளில் புலனுறுப்புகளின் பயன்பாடு சம்பந்தமாகவும், சூழற் காரணிகளின் தாக்கம் சம்பந்தமாகவும் விழிப்புணர்வு இருப்பது பிரயோசனமானது. தெளிவான புரிந்துணர்வுடன் கூடிய வாய்மொழி – உடல் மொழித் தொடர்பாடல்கள், பின்னூட்டல்கள் மிகவும் தேவையானது. துணைவரின் விருப்பு வெறுப்புகளை மதிக்கத் தெரிந்திருத்தல் அவசியமானது.
இவற்றைவிட, பாலுறவின்போது பாலுறுப்புகள் தவிர்ந்த உடலின் ஏனைய பகுதிகளின் மூலம் கிடைக்கின்ற உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பாலுறவின்போது, எல்லா உறவு நிலைகளிலும் இருப்பது போல், எதிர்பார்ப்புகளைப் பொருத்தமான வகையில் வைத்துக்கொள்ளல் வேண்டும். பாலியல் மூலம் கிடைக்கின்ற இன்பத்தையும், திருப்தியையும் வெறும் உடல் சார்ந்த இன்ப அனுபவமாக மட்டும் கருதாது, அதனை நெருக்கமான, அன்பான ஓர் உறவின் பரிமாணமாகக் காண்பது பயன் மிக்கது. இதன் மூலம் பாலியல் வாழ்வு இன்னுமோர் தளத்தினுள் நடைபெறும்.
நன்றி: உயிர்ப்பு