Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Mania (பித்து)

இது மனோபாவத்தில் ஏற்படுகின்ற இன்னுமொரு வகை நோய் வெளிப்பாடாகும். இந்நோய் நிலைமையில் வழமைக்கு அதிகமான உற்சாக மனநிலை, தொடர்ச்சியாகவும் வேகமாகவும் அதிகளவு கதைத்தல், அமைதியின்மை, ஒன்று மாறி ஒன்று என அதிக வேலைகளில் ஈடுபடுதல், தன்னைப் பற்றிய மிக உயர்வான எண்ணம் அல்லது கற்பனையைக் கொண்டிருத்தல், தான் ஓர் இரட்சகன் அல்லது கடவுள் என்று நம்புவது போன்ற இயல்புகள் இவர்களில் காணப்படும். இந்நோயானது பல வழிகளில் மனச்சோர்வுநோய்க்கு எதிரான இயல்புகளைக் கொண்டிருப்பதனைக் காணலாம்

சிலவேளைகளில், இங்கு விபரிக்கப்பட்ட மனோபாவக் கோளாறுகள் ஒருவரின் வாழ்க்கையில் மாறிமாறிப் பல தடவைகள் ஏற்படலாம். ஒரு தடவை பித்து அல்லது மனச்சோர்வு ஏற்பட்டால் அது கிட்டத்தட்ட ஒரு மூன்று மாதகால அளவு நிலைத்திருக்கலாம். பொதுவாக, பித்து நோய் ஏற்பட்ட ஒருவருக்கு அதன் பின்பு மனச்சோர்வு நோய் ஏற்படலாம். அதன் பின்பு, ஓரிரண்டு வருட கால வழமையான வாழ்க்கைக்குப் பிறகு, மீண்டும் அவருக்கு பித்து நோய் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

அறிகுறிகள்

பின்வரும் இயல்புகள் ஒருவரில் காணப்பட்டால் அவர் பித்து நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்று கருதலாம்.

  • அளவுக்கதிகமான தன்னம்பிக்கை
  • மிகவும் கிளர்ச்சியடைந்த மனநிலை, மனவெழுச்சி
  • அதிகம் கதைத்தல் (அலட்டுதல்), அளவுக்கதிகமான உற்சாகம் (உஷார்), ஒன்று மாறி ஒன்று எனப் பல வேலைகளில் ஈடுபடுதல், வெட்கப்படாமல் பாடுதல், ஆடுதல் போன்ற அமைதியற்ற, அதிகரித்த நடவடிக்கைகள்
  • நிறையச் சக்தியுடையவர் போல களைப்பின்றிச் செயற்படல்
  • நடைமுறைச் சாத்தியத்தைப்பற்றி யோசிக்காது பாரியவேலைகளுக்கான திட்டங்களைத் தீட்டல் (உதாரணமாக ஒரு தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடல், ஒரு பெரிய வியாபாரம் செய்ய ஆயத்தமாதல் போன்றன)
  • நித்திரை குறைவாக இருத்தல்
  • அதிகரித்த அளவிலான பாலியல் நாட்டம்
  • தானே கடவுள், தான்தான் ஆட்சியாளர் போன்ற மிகைப்பட்ட, தவறான நம்பிக்கைகள்
  • சுயகட்டுப்பாடு குறைதல், பின்விளைவுகளை யோசிக்காது தீர்மானங்களை எடுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்
  • ஊதாரித்தனமாகச் செலவழித்தல் (உதாரணமாக, நெருங்கிய, நெருககமில்லாத உறவினர்கள் அனைவருக்கும் உடுபுடவைகள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி அன்பளிப்புச் செய்தல்)

உதவி பெறுதல்

மேற்குறிப்பிட்ட வகையிலான அறிகுறிகளும், நடத்தைகளும் ஒரு உளநோயின் வெளிப்பாடுதான் என்பதனை நோயாளியின் குடும்பத்தினரும், அயலவர்களும் புரிந்து கொள்ளவது அவசியமானது. நோயாளியுடன் விவாதம் புரிவதோ, அல்லது அவரை எதிர்த்துச் சவால் விடுவதோ அவ்வளவு பிரயோசனமாக இருக்காது. அவ்வாறான அணுகுமுறைகள் நோயாளி ஆக்ரோஷமான நடத்தைகளை வெளிக்காட்டுவதற்குக் காரணமாகிவிடலாம். மாறாக நோயாளியின் போக்கோடு சேர்ந்து, நகைச்சுவையாக, அவரது கவனத்தைத் திசை திருப்புவது என்பது பிரயோசனமான அணுகுமுறையாக இருக்கும்.

பித்து ஒருவகையான உளமாய நோயாக இருப்பதனாலும், அது மீண்டும் மீண்டும் மறுகலிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருப்பதனாலும், இந்நோய்க்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கிமானது. அத்துடன் இந்நோய்க்கான மருந்துகளை மிக நீண்டகாலம் (பல வருடங்களுக்கு) உள்ளெடுக்க வேண்டியிருக்கும்.

ஒருவர் பித்துநோயின் அறிகுறிகளை வெளிக்காட்டுகின்றார் எனக் கருதும்போது, அவரை உடனடியாக ஓர் உளமருத்துவரிடமோ, அல்லது ஓர் உளநலப் பிரிவிற்கோ அழைத்துச் செல்வது அவசியமானது.

 

Adapted from the book ‘Mental Health in Tamil Community’.