Mental Health Society Tellippalai, Jaffna.
Close

போதை வஸ்துக்களின் துர்ப்பாவனை

போதை மருந்துகளில் அபின், ஹேரோயின், பெதடின் போன்றவையும், கொகேயின், எக்ஸ்டசி, அம்பிற்றமீன் எனப்படும் ஊக்கிகளும், எல்.எஸ்.டி, கஞ்சா போன்ற இல்பொருள் காட்சி தரக்கூடிய பதார்த்தங்களும் அடங்கும். இவற்றைவிட, நாளாந்த வாழ்வில் காணக்கூடிய வேறு சில பதார்த்தங்களும், மருந்து வகைகளும் போதையை ஏற்படுத்தலாம்.

இப்போது தாம் உள்ள மனநிலையில் இருந்து வேறொரு மனநிலைக்குச் செல்ல விரும்பும் சிலர் போதைப் பொருள்களைப் பாவிக்கிறார்கள். போதை தரும் மனஉணர்வை மகிழ்ச்சி எனச் சிலர் தவறாக எண்ணலாம். போதையைத் தமது செயல்களுக்குப் பொறுப்பேற்காமல் விடுவதற்கான ஒரு சாட்டாகவும் சிலர் உபயோகிப்பார்கள். சிலர் தமது கவலையை மறக்கவென்று போதையைத் தேடுவார்கள். மனிதனுடைய மனம் தாங்கிக்கொள்ளக்கூடிய விடயங்களுக்கு அப்பாற்பட்டுச் சம்பவங்கள் நடக்கும்போது, ஏற்படும் உணர்வுகளிலிருந்து தப்பித்துச் கொள்வதற்குப் போதையைத் தேடுவது அவசியம் போல் ஆகலாம். எது எவ்வாறாயினும், பலவீனமான மனங்களே போதையைத் தேடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்

போதையைப் பாவிக்கும் ஒருவர் சிறிது காலத்தின்பின் அதற்குப் பழக்கப்பட்டுப் போகிறார். போதையின்றி இயங்குவதற்குச் சிரமப்படத் தொடங்குவார். இந்நிலையில், போதையை ஏற்படுத்தும் அந்தப் பதார்த்தத்தில் தங்கியிருக்க நேரிடுகின்றது. தங்கியிருத்தல் என்பது அடிப்படையில் உடல் உளப் பரிமாணங்களைக் கொண்டது. பெரும்பாலும் அந்தப் பதார்த்தத்தில் இருந்து அவரால் விடுபட முடியாதிருக்கும். அபின், ஹேரோயின் போன்ற போதைப்பொருள்கள் தனது பாவனையாளர்களை விரைவில் அவற்றிற்கு அடிமையாகும் நிலைக்கு இட்டுச் செல்லும். அப்போது அது அவர்களை ஆட்சி செய்யத் தொடங்கும். மதுபாவனையாளர்கள் அவர்கள் மதுவினைப் பாவிக்கத் தொடங்கிப் பல வருடங்களின் பின்னரே அதற்கு அடிமையாகும் நிலைக்கு வருகிறார்கள் என்றால், போதைமருந்துகள பாவிப்பவர்கள் ஒரு சில மாதங்களிலேயே அவற்றிற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

போதையை ஏற்படுத்தும் இரசாயனக் கடத்திகள் எமது மூளையிலும் தேவையேற்படும்பொழும் (அளவோடு) சுரக்கப்படுகின்றன. ஆனால், நாம் புறத்தே இருந்து போதைப்பொருட்களை உள்ளெடுக்கத் தொடங்கும்போது, மூளையில் அது போன்ற பொருள்களின் உற்பத்தி குறையத் தொடங்கும். அதனால் ஏற்படும் உணர்வைத் தாங்க முடியாத நிலையில், மேலும் மேலும் அதிக போதைப் பொருள்களை உள்ளெடுக்க நேரும். இந்த அபாயகரமான நச்சுச் சுழலுக்குள் அகப்படுதல் என்பது மிகப் பரிதாபகரமான நிலையாகும்.

போதைப்பொருள் பாவனையில் ஆரம்பத்தில் இனங்காணக்கூடிய அறிகுறிகளாகப் பசி குறைவு, சோம்பல், மந்த நிலை, சாப்பிட விருப்பமின்மை போன்றவை இருக்கலாம். சிறிது காலத்தின்பின் கண் சிவந்தல், தாகம், கை நடுங்குதல், கண்ணீர் வருதல், கை உலர்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். பின்னர் விடயங்களில் கருத்தூன்ற முடியாமை, தேவையற்றுக் கதைத்தல் போன்ற மாற்றங்கள் தெரியும். அடிக்கடி கோபப்படுவதும், சோர்ந்து போவதும், தன் கவனிப்புக் குறைவதும், அலங்கோலம் ஆவதும், சம்பந்தமற்றுச் சிரிப்பதும் அல்லது அழுவதும் காணப்படக்கூடும். வன்முறைசார்ந்த நடவடிக்கைகள் அல்லது தனிமைத் தன்மை அதிகமாகலாம். மேலும், சகபாடிகளிடமிருந்து ஒதுங்கி, சமுதாயத்தைக் குறைகூறுவதும், சமுதாய நிகழ்வுகளைக் குழப்புவதும் அவதானிக்கப்படலாம். போதைப்பொருள் வாங்குவதற்குத் தேவைப்படும் பணத்திற்காக வீட்டிலோ, வேறு இடங்களிலோ களவு எடுக்கும் பழக்கமும் இவர்களில் ஆரம்பமாகலாம்.

போதை பொருட்கள் இலகுவில் அடிமையாக்க கூடியவையாக இருப்பதோடு உடல், உள நலனை கடுமையாக பாதிக்கவும் கூடியன.

 

நன்றி: மதுவில்லாத வாழ்வு நோக்கி, தமிழ் சமுதாயத்தில் உளநலம்