குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலர் அந்நிலையிலிருந்து விடுபட விரும்பினாலும், அதனை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருக்கின்றார்கள். அத்துடன், அவர்கள் குடியை நிறுத்துவது தொடர்பாகப் பல்வேறு விதமான நம்பிக்கைகளையும் பயங்களையும் கொண்டிருக்கிறார்கள்.
குடியைத் திடீரென்று விட்டால், “கையைக், காலை இழுத்துவிடும்”, “வருத்தங்கள் வரும்” போன்ற நம்பிக்கைகள் ஆதாரமற்றவை. யாராவது குடியை விட முன்வந்தால், அவரோடு சேர்ந்து குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இவ்வாறான கதைகளைச் சொல்லி அவரைத் தொடர்ந்தும் குடிக்க வைப்பார்கள்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் மருத்துவ உதவியுடன் அப்பழக்கத்தை முழுமையாக நிறுத்திவிட முடியும்.
எமது சமூகத்தில் மதுவுக்கு அடிமையான ஒருவர், மது பாவனையிலிருந்து விடுபடுவதற்கு முடிவு செய்தால், அவர் அதனைப் பூரணமாகக் கைவிடுதல் என்பதே நடைமுறைச் சாத்தியமான தெரிவாக இருக்கும். எம்மில் பலர் விரும்புவது போன்று குடிக்கும் அளவைக் குறைப்பதாலோ, குடிக்கின்ற இடைவெளியை அதிகரிக்கச் செய்வதாலோ, குடிக்கும் மதுபான வகைகளை மாற்றுவதாலோ ஒருவரால் குடிப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியாது. இவ்வாறு முயற்சிப்பவர்களில் பலர் மிகக் குறுகிய காலத்திலேயே தமது முயற்சியில் தோல்வியடைந்து, மதுவைத் தொடர்ந்தும் வழமைபோல் பாவித்துக் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.
எனவே குடியை நிறுத்துவது என ஒருவர் முடிவு செய்தால், அவர் இனி எனது வாழ்நாள் முழுவதும் குடிக்காமல் இருப்பேன் எனத் தீர்மானிப்பதுவே இந்நோயிலிருந்து விடுபடும் ஒரே வழியாக இருக்கும்.
ஒருவர் மதுவிற்கோ அல்லது ஏனைய போதைப் பொருட்களுக்கோ அடிமையாகி விடுவது என்பது அவர் எண்ணிக் கருதிச் செய்கின்ற ஓர் ஒழுக்கக் குறைபாடான காரியமோ, அல்லது பாவச்செயலோ அல்ல.
மதுவுக்கு அடிமையாகுவது என்பது ஒரு நோய். சிகிச்சைக்குக் கட்டுப்படும் ஒரு நோய். ஆனால், இதனைக் கவனிக்காமல் விடும் பொழுது நோயின் தாக்கம் அதிகரித்து, பல்வேறு வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதனால், மது அடிமைநிலையில் உள்ள ஒருவர் காலதாமதம் செய்யாமல் சிகிச்சை பெறவேண்டியது மிக அவசியமானது.
மது அல்லது வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் உடலும் உள்ளமும் அந்தப் போதைப் பொருட்களோடு இணைந்தே தொழிற்பட்டுக் கொண்டிருக்கும். எனவே, மதுவுக்கு அடிமையானவர்கள் அதனைச் சடுதியாக நிறுத்தும்போது அவர்கள் “விடுபடல் அறிகுறிகளை” (Withdrawl Symptoms) அனுபவிப்பார்கள். மதுவை உள்ளெடுப்பதனை நிறுத்தும் பொழுது அல்லது அதன் அளவைக் குறைக்கும் பொழுது இவ்வாறான விடுபடல் அறிகுறிகள் தோன்றுவதனை அவதானிக்கலாம்.
இந்தச் சிகிச்சையின் முதலாவது படியாக மதுவின் விடுபடல் அறிகுறிகளைக் குறைப்பதற்கான சிகிச்சை அமைகின்றது. இதனை “நச்சு நீக்கல் சிகிச்சை” என அழைப்பர்.
நச்சு நீக்கல் சிகிச்சையானது பொதுவாக ஒரு பொது மருத்துவ விடுதியிலேயே நடைபெறும். இதன்போது,
- மதுவை விடுவதனால், உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய அறிகுறிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் மாத்திரைகளாகவோ. ஊசி மூலமோ உடலில் சேர்க்கப்படும்.
- மதுவைத் தொடர்ந்து பாவிப்பதனாலும், சாப்பாடுகளில் கவனமில்லாமல் இருப்பதனாலும், ஏற்படக்கூடிய விற்றமின் குறைபாடுகளை நீக்குவதற்காக சக்தி வாய்ந்த விற்றமின் மருந்துகள் கொடுக்கப்படும்.
- ஏற்கனவே நித்திரையின்மையும். ஏனைய குழப்பமான மனநிலைமையும் தோன்றியிருந்தால் அவற்றைச் சீர்செய்வதற்குரிய மருந்துகள் பாவிக்கப்படும்.
- இவற்றைவிட மதுவினால் ஏற்பட்டிருக்கக் கூடிய ஏனைய உடல் சார்ந்த பிரச்சினைகளான ஈரல் பாதிப்பு, இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், கிருமித்தொற்றுக்கள் போன்றன இருப்பின் அவையும் முறையாகப் பரிசோதிக்கப்பட்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.
- நச்சு நீக்கல் சிகிச்சை பெறுகின்ற ஒருவர் சாதாரணமாக மூன்று தொடக்கம் ஏழு நாட்களுக்குள் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுச் சுகம் பெறலாம்.
நச்சு நீக்கல் சிகிச்சையைத் தொடர்ந்து, மதுவுக்கு அடிமையான ஒருவர் தனது வழமையான நிலைமைக்கு வந்துவிடுவர்.
ஆயினும், அவர் தொடர்ந்தும் மதுவை நாடாது, தனது மதுப்பழக்கத்திலிருந்து பூரணமாக விடுபட விரும்பினால், அந்த விருப்பத்திற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக அவர் கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டிவரும். முக்கியமாக, அவர் சிறிது காலத்திற்குத் தனது வழமையான வாழ்க்கைச் சூழலிலிருந்து விலகி, தன்னைப் போன்றே மதுவை விட விரும்பும் ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து. மருத்துவப் பராமரிப்பும், உளவியல் பராமரிப்பும், புனருத்தாரணமும் கிடைக்கக் கூடிய ஒரு இடத்தில் தங்கிநிற்க வேண்டும். அவ்வாறான ஒரு இடத்தில் தங்கி நின்று தனக்குத் தேவையான சிகிச்சைகளைப் பெறுவதுடன், தன்னைப் புதியதோர் வாழ்க்கை முறைக்கு மாற்றிக் கொள்வதும் அவசியமானது
நன்றி: மதுவில்லாத வாழ்வு நோக்கி, தமிழ் சமுதாயத்தில் உளநலம்