மதுப் பழக்கத்தினை உடைய ஒருவர். அவருக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தற்பொழுது மதுவிலே தங்கிநிற்கும் ஒரு நிலைக்கு வந்திருக்கலாம். இந்த நிலையையே மதுவுக்கு அடிமையாகிப்போன ஒரு நிலை என அழைக்கின்றோம்.
மதுவுக்கு அடிமையாகிப் போனவர்கள் தமது வழமையான விருப்பு வெறுப்புகள், குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டு மதுவுடன் தொடர்புடைய வெவ்வேறு இயல்புகளை வெளிக்காட்டுவார்கள்.
ஒருவரில் கடந்த ஒரு வருட காலத்தில் கீழ்வரும் இயல்புகளில் மூன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கும் எனில் அவர் மதுவுக்கு அடிமையாயிருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம்.
- மதுவின் மீது அதீத விருப்பம்– அநேகமான வேளைகளில் மதுவை உள்ளெடுக்க வேண்டும் என்ற அவாவும். தவிப்பும் ஏற்படுதல்
- உள்ளெடுக்கும் மதுவின் அளவில் படிப்படியான அதிகரிப்பு – ஆரம்பத்தில் குறைந்த அளவு மதுவுடன் ஏற்பட்ட போதையானது, காலம் செல்லச் செல்ல மிகவும் அதிகரித்த அளவுகளில் மதுவை உள்ளெடுக்கும் பொழுதே ஏற்படுகின்ற நிலை.
- மது தொடர்பான சுயகட்டுப்பாட்டை இழத்தல் – மதுவை அருந்துவதா இல்லையா என முடிவெடுப்பதிலும், உள்ளெடுக்கும் மதுவின் அளவைத் தீர்மானிப்பதிலும் அல்லது போதும் என்று நிறுத்துவதிலும் தனது கட்டுப்பாட்டை இழந்திருத்தல்.
- விடுபடல் அறிகுறிகள் ஏற்படல் – மதுவினுடைய அளவு உடலிலே குறைந்து கொண்டு போகும்போது, அதன் காரணமாக ஒருவருடைய உடலிலும் மனதிலும் விடுபடல் அறிகுறிகள் தோன்றுகின்றன. அநேகமானோர் அவ்வாறான விடுபடல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே மீண்டும் மீண்டும், சிலவேளைகளில் அதிகாலை நேரத்திலிருந்து மதுவை உள்ளெடுத்துக் கொண்டிருப்பர்.
- மது மட்டுமே வாழ்வாயிருத்தல் – மது அருந்துவதைத் தவிர்ந்த தமது வாழ்க்கையின் ஏனைய சந்தோஷங்களையும், பொழுதுபோக்குகளையும் புறக்கணித்தல்.
- துர்ப்பாவனை-மதுவினால் தனக்குப் பலவிதமான பிரச்சினைகள் வருகின்றன என்பதைத் தெரிந்த பின்னரும் தொடர்ச்சியாக மதுவைப் பாவித்தல்.
- பழைய குடிக்குத் திரும்புதல்-ஒருவர் குடியைச் சிறிது காலத்திற்கு விட்டிருந்தாலும், அதனை மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது திரும்பவும் பழைய மாதிரியே, பழைய அளவிலேயே குடிக்கத் தொடங்குதல்.
மதுவுக்கு அடிமையாகும் காரணிகள்
குடிப்பவர்கள் எல்லாம் நித்திய குடிகாரர் ஆவதில்லை. அதாவது, மதுவைத் தொட்டவர்கள் எல்லாம் மதுவுக்கு அடிமையான வாழ்வை அடைவதில்லை.
ஆயினும் குடிக்கத் தொடங்கும் பலர் நாளடைவில் மதுவுக்கு அடிமையாகி, அதிலே தங்கியிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, மிக இளவயதுகளில் குடிக்கத் தொடங்குபவர்களிற் பலர் விரைவாக அடிமை நிலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
உண்மையில், மது அடிமைநிலை என்பது ஒரு நோய் போன்றது. ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாகவே இந்த நோய் அவருக்கு ஏற்படுகின்றது. இதற்கு ஆரம்ப காலத்தில் விரும்பியோ அல்லது ஆர்வக் கோளாறு காரணமாகவோ மதுவைப் பாவிக்கத் தொடங்கியது மட்டுமே மது அடிமை நோய்க்குட்பட்டவரது பங்களிப்பாக இருக்கின்றது.
பரம்பரை அலகுகளும், ஒருவருடைய தனிப்பட்ட உடல், உளக் காரணிகளும், ஆளுமைப் பண்புகளும் இவ்வாறு போதை தரும் பதார்த்தங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.
இதனால்தான் சிலர் மதுவுக்கு மட்டும் அடிமையாகாது, வேறு பல போதை தருகின்ற பதார்த்தங்களுக்கும் அடிமையாகி இருப்பதனைக் காணமுடிகிறது.
மது அடிமை நிலையின் வெவ்வேறு பருவங்கள்
ஒருவர் படிப்படியாக மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் பொழுது அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு பருவங்களைக் கடந்து செல்வதனைக் காணலாம்.
ஆரம்பப் பருவம்
இந்தப் பருவத்திலே ஒருவர் போதையில் உள்ள நாட்டம் காரணமாக, தனக்கு விரும்பிய அளவு போதை ஏற்படுகின்ற வரையில் குடிப்பார்கள். காலஞ் செல்லச்செல்ல, ஒரேயளவினதான போதை ஏற்படுவதற்கு முன்பு குடித்ததைவிட அதிகளவில் குடிக்கவேண்டிய தேவை ஏற்படும். மிக அதிகளவில் குடிப்பவர்கள் சிலரில் மது உள்ளெடுத்த நிலையில் நடந்த சம்பவங்களை ஞாபகத்தில் கொண்டு வருவது கஷ்டமாக இருக்கும். குடியில் ஏற்படும் நாட்டம் காரணமாக மனமோ அடுத்து எங்கே குடிக்கலாம்? எப்படிக் குடிக்கலாம்? என்பது பற்றிய சிந்தனையிலேயே இருக்கும்.
இடைப் பருவம்
இந்தப் பருவத்தில் இருக்கும் ஒருவர் தான் குடியை நிறுத்த வேண்டும் என்று இடைக்கிடையே விரும்பினாலும், அவரால் தான் குடிக்கும் அளவைக் குறைக்க முடியாமலும், குடிக்கும் நேரம் அல்லது சூழல் இரண்டையும் கட்டுப்படுத்த முடியாமலும் இருக்கும். அதனால் அவர் தான் குடிப்பதற்காகப் பல காரணங்களை முன்வைப்பார். சிலர் தமது தொடர்ச்சியான குடிக்கு தமது குடும்பத்தினரை, வேலையை, அல்லது வாழ்க்கைச் சூழ்நிலையைக் காரணம் காட்டுவார்கள். அத்துடன், இந்தப் பருவத்தில் ஒருவரில் அடிக்கடி கோபம் ஏற்படுதல், சண்டை பிடித்தல் போன்ற குணவியல்பு மாற்றங்களும் ஏற்படும்.
வேறு சிலர் தற்காலிகமாக ஒரு சமாளிப்புக்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ அல்லது கோயில் திருவிழா காரணமாகவோ தமது குடியைச் சிறிது காலம் நிறுத்தினாலும், அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் மறுபடியும் அதிகமாகக் குடிக்கின்றமையையும் காணலாம்.
இறுதிப் பருவம்
இந்தத் தீவிரமான பருவத்திலே இருப்பவர்கள் தொடர்ச்சியாகவும் மிக அதிக அளவுகளிலும் குடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உள்ளெடுக்கும் மதுவின் அளவு குறைகின்ற பொழுது அவர்களில் விடுபடல் அறிகுறிகள் ஏற்படும். இந்நிலையில் உள்ளோர் தமது தொழில்களை இழந்து, அதிகளவு பொருளாதாரப் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுக் கொள்வதனால் தாம் தொடர்ந்து குடிப்பதற்காகக் கடன் வாங்குதல், பொய் பேசுதல், திருடுதல், பிச்சை எடுத்தல் போன்ற பல்வேறு நடத்தைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் தமது சுயகௌரவத்தை இழந்து, நண்பர்கள் உறவினர்களால் கைவிடப்பட்டு, கடைசியில் குடித்தால்தான் செயற்பட முடியும், குடித்தால்தான் உயிர்வாழ முடியும் என்கின்ற ஒரு நிலையில் அலைந்து திரிபவர்களாக மாறிவிடுவர்.
நன்றி: மதுவில்லாத வாழ்வு நோக்கி, தமிழ் சமுதாயத்தில் உளநலம்