பல சமுதாயங்களில் மது மற்றும் போதைப்பொருட் பிரச்சினைகள் பொதுவானவையாக இருக்கின்றன. சிலவேளைகளில், மது அல்லது போதைப்பொருள்களினுடைய பாவனை மக்களின் பொருளாதார நிலைமை குன்றும்போது குறைவடையலாம். ஆனாலும், வேறு சிலவேளைகளில், இவ்வாறான நிலைமைகளிலும் குடித்தல், போதைப் பொருட்களைப் பாவித்தல்போன்ற பழக்கங்கள் அதிகரித்து, அது அவர்களின் பொருளாதார நிலையை மேலும் சீரழித்துவிடுகின்றது.
பொதுவாகப் பொருளாதார நிலை குன்றி, வறுமையாக இருக்கின்ற பலர், அந்த வறுமையின பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமாக விடுதலை பெற எண்ணி மதுவையும் ஏனைய போதைப் பொருட்களையும் நாடுகிறார்கள். பின்பு மெல்ல மெல்ல அது பழகிப்போய், அவர்கள் தமக்குப் போதை தருகின்ற பொருட்களைத் தொடர்ச்சியாகப் பாவிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற பொருளாதாரச் சுமை கூடும். கடன்கள் அதிகரிக்கும். வீட்டிஸ் எஞ்சியிருக்கின்ற பெறுமதியான சொத்துக்கள் அழியும். தாங்கள் எந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட எண்ணி மதுவை அல்லது ஏனைய போதைப் பொருட்களைப் பாவிக்க ஆரம்பித்தார்களோ, அந்தப் பாவனையே, தங்களது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி, வாழ்வைச் சீரழிப்பதனை இவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். உண்மையில், இது ஒரு நச்சு வட்டம் போன்றது.
ஒரு சமுதாயத்தில் மது மற்றும் போதைப் பொருட்களின் துர்ப்பாவனை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு நபரோ அல்லது சமூகமோ இவற்றினுடைய தீங்கான விளைவுகள் பற்றி அறிந்திருந்தால், அவற்றைத் தடுக்கக்கூடிய பல செயல்களைச் செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்யலாம்.
மது துர்ப்பாவனை
மதுவை உட்கொண்ட அல்லது உட்கொள்ளும் அனைவருமே துர்ப்பாவனையாளர்களாக கருதப்பட மாட்டார்கள். மதுவினால் தனக்குப் பலவிதமான பிரச்சினைகள் வருகின்றன என்பதைத் தெரிந்த பின்னரும் தொடர்ச்சியாக மதுவைப் பாவித்தலையே மது துர்ப்பாவனை எனலாம்.
மது துர்ப்பாவனையில் ஈடுபடும் மக்கள், பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஆளாகும் அபாயத்திற்கு உள்ளாகின்றார்கள். இந்தப் பிரச்சினைகள் உடல், உள, குடும்ப, சமூகத் தளங்களிலே உருவாகலாம். மக்கள் எவ்வளவு அதிகமாக மதுவை பயன்படுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாகப் பல பிரச்சினைகள் தோன்றும் அபாயத்திற்கு அவர்கள் உள்ளாகிறார்கள். சிலவேளைகளில், ஆரம்பத்தில் உளவியல் பிரச்சினைகள் உள்ளவர்களாயிருந்த மக்கள் அதனால் குடிக்கத் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் தொடர்ந்து குடிக்கும்போது, படிப்படியாக மதுவில் தங்கியிருக்கும் நிலைக்கு ஆளாகின்றார்கள். இது நிலைமைகளை மேலும் சிக்கலாக்கி மோசமான பிரச்சினைகளுக்கு அவர்களை இட்டுச் செல்லுகின்றது. மதுவை பயன் படுத்தும் ஒருவர், “எதிர்காலத்தைப் பற்றி நான் அக்கறைப்படப் போவதில்லை. எனக்கு என்ன நடக்கிறது அல்லது மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை” என்று சொல்லக்கூடும்.
எங்களைச் சூழவுள்ள சிலர் தமது உண்மையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதைத் தவிர்க்கும் ஒரு வழியாக மதுவை பயன்படுத்தத் தொடங்கலாம். அதுபோல், வேலையற்று இருப்போரும், மற்றைய சிலரும் இடம்பெயர்ந்து வாய்ப்புகள் ஏதுமின்றி உள்ளோரும், மற்றையோரும் பயனுள்ள எதனையும் செய்யமுடியாத நிலையில், அதிக நேரமுள்ளவர்களாக இருக்கலாம். இந்த வேளைகளில் தமது பொழுதைப் போக்கும் ஒரு வழியாக இவர்கள் குடியை நாடலம். அசாதாரண சூழ்நிலைகளில் உள்ள ஒரு சமுதாயம் மக்களின் சாதாரணமான நடத்தைகளுக்கு குடிக்கு அறிமுகம் உருவாகின்றபோது, அந்த சமுதாயத்தின் உறுப்பினர்கள், குறிப்பாக இளைஞர்கள், வேறு வழிகளின்றி குடியினை தொடங்கலாம்.
மது மக்களின் உடல் நலத்தைப் பாரதூரமாகப் பாதிக்கக்கூடியது. ஏற்கனவே ஏழ்மையான நிலைமைகளில் வாழ்பவர்களுக்கு, அவர்களது போஷாக்கிலும் உடல்நலத்திலும் ஏற்படும் கெடுதிமிகப் பெரியதாகும். ஏழை மக்கள் தாம் வைத்திருக்கும் சிறுதொகைப் பணத்தையும் குடியில் செலவழிக்கும்போது அவர்கள் தமது குடும்பத்தின் நிலைமையை மேலும் கஷ்டமானதாக்குகிறார்கள்.
குடிபோதைகளின் பாவனையால் தோற்றுவிக்கப்படும் சமூகப் பிரச்சினைகள் தனியொருவருடைய குடும்பத்தைப் பாதிப்பதோடு நின்றுவிடாது, முழுமையாக ஒரு சமுதாயத்தையே பாதிக்கின்றன. உதாரணமாக, ஒரு சமுதாயத்தில் ஒரு சிலரே அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தாலும் அது முழுச் சமுதாயத்தினதும் கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றைப் பாதிக்கிறது.
நன்றி: மதுவில்லாத வாழ்வு நோக்கி, தமிழ் சமுதாயத்தில் உளநலம்