Mental Health Society Tellippalai, Jaffna.
Close

மரணம் பற்றிய சில மனப்பதிவுகள்

பிறப்பு என்று ஒன்று நடக்கும் பொழுதிலேயே இறப்பும் இடம்பெறும் என்பது நிச்சயிக்கப்பட்டு விடுகின்றது. இந்த நியதியானது உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக இருக்கின்றது.

ஆயினும், அநேகமான வேளைகளில், சாகாவரம் பெற்ற இந்த உண்மையை நாம் எமது மனதிடை இருத்துவதில்லை. எமது வாழ்க்கையில் சாதல் என்பது தவிர்க்க முடியாதது என்று தெரிந்திருந்த பொழுதும், அது எமது நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்துள்ள பொழுதும், அது முன்னைய காலங்களைவிட தற்பொழுது ‘சர்வ சாதாரணமாய்’ ஆகிவிட்டபோதும், எமது சமூகத்தில், தமிழ் சமுதாயத்தில், சாதல் பற்றிய உரையாடல்கள் திறந்த மனதோடு நடைபெறுவதில்லை.

ஒருவருடைய மரணம் பலருடைய மனங்களை அதிர வைக்கின்றது. இந்த அதிர்வுகளை எவ்வாறு தாங்கிக் கொள்ளலாம் என்பது பற்றியோ, அல்லது எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியோ நாம் அதிக அளவுகளில் இல்லாவிடினும், குறைந்த அளவுகளில்கூட தயார்ப்படுத்தப்படுவதில்லை. இதனால் மரணத்தின் மூலம் ஏற்படும் அதிர்வுகளானவை இயல்பானவையாக அமைந்து செல்லாது, பல சந்தர்ப்பங்களில் சிக்கலான நிலைமைகளைத் தோற்றுவித்து விடுகின்றன.

எமது சமூகத்தில் மிகப் பெரும்பான்மையோர் மரணத்துக்கு அஞ்சுபவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் எப்பொழுதும் ஆண்டாண்டு காலமாக, தீர்க்க ஆயுளோடு இருக்கவே விரும்புகிறார்கள். “நெடுநாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னும் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்” என்று தாயுமானவர் குறிப்பிட்டிருக்கின்றார். காலங்காலமாக மரணபயம் என்பது மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒன்றாகவே தொடர்ந்து வருகின்றது. சிலவேளைகளில் ஒருவர் தனது மரணத்தினை இனித் தவிர்க்க முடியாது என அறிகின்ற வேளைகளிலும், அவர் அதனை எதிர்கொள்வதில் பல்வேறுவிதமான சிக்கல்களை எதிர்கொள்வார். அதுபோல் மரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதொரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பலரும் அதனைப் பின்நோக்கிப் போடவே விரும்புவார்கள். எமது இந்த மரணபயமே ஆள்பவர்களுக்கும், ஆண்டவர்களுக்கும், அழிவுகாரர்களுக்கும் ஆயுதமாக அமைந்துள்ளது என்பதனையும் நாம் அவதானிக்கலாம்.

பொதுவாக நாங்கள் சாவினைப் பற்றிக் கதைப்பது குறைவு. வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் சாதல் பற்றி எமக்கு யாரும் படிப்பிப்பதில்லை. நாமாக அது பற்றிப் படிப்பதுமில்லை. எமது சமூகத்தில் சாதல் பற்றிய ஆராய்ச்சிகள் இல்லை என்று சொல்லுமளவிற்கு அவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. சமயங்கள் ஒருவிதமாகவும், தத்துவங்கள் இன்னொரு விதமாகவும் சாவினைப் பற்றிக் கதைக்கின்றன. மருத்துவ விஞ்ஞானமோ அதனை முற்றிலும் வேறு கோணத்தில் அணுகுகின்றது. எனவே ‘சா’ என்றால் என்ன என்பது பற்றி எம்மிடையே பொதுப்படையான கருத்துக்கள் இல்லை. சாதல் பற்றி நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான  விளக்கங்களையே கொண்டிருக்கிறோம்.

ஒருவர் இறந்தால், “அவர் செத்துவிட்டார்” என்றோ அல்லது “எப்படிச் செத்தார்?” என்றோ கதைப்பதற்கு அப்பால் நாங்கள் அது பற்றி அதிகம் கதைக்காது மௌனித்து விடுகிறோம். எங்களுக்குத் தெரியாத ஒன்றைப்பற்றி, நாங்கள் பயப்படும் ஒன்றைப்பற்றி, அறிவியல், சமயம், ஆத்மீகம், தத்துவங்கள் என்பவற்றில் வெவ்வேறுவிதமாக சித்தரிக்கப்படும் ஒன்றைப் பற்றிக் கலந்துரையாடுவதனை நாம் முற்றிலும் தவிர்த்து விடுகின்றோம். நாங்கள் பல சமயங்களில் மரணத்தோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சாதல் என்பதற்குக் கொடுக்கப்படுகின்ற அர்த்தங்கள், அவை தமக்குள் வேறுபட்டாலும், சில பொதுவான தன்மைகளைக் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். இறப்பு என்பதனை, “இனி ஒன்றுமேயில்லை” என்பதாகவோ, இருப்பவர்களுடனான ஒரு நிரந்தரமான பிரிவாகவோ கொள்ளாதிருத்தல் என்பது ஒரு பொதுமையான கருத்துருவாக்கமாக உள்ளது. ‘இவ்வுலகை நீத்தார்’, ‘இறைவனடி சேர்ந்தார்’, ‘கர்த்தருக்குள் ஐக்கியமானார்’, ‘சிவபதமடைந்தார்’, “அமரரானார்”, “பஞ்சத்துவம் அடைந்தார்” போன்ற சொற்றொடர்கள் இறந்த ஒருவர் தனது இறப்பின் பின்னரும் எங்கோ நிரந்தரமாக இருப்பது போன்றதொரு தோற்றத்தைக் கொடுக்கிறது. இறந்தவரின் படத்தை வீட்டில் வைத்து, அதற்கு மாலையிட்டு, அந்தப் படத்திற்குரியவருக்கு அமானுஷ்ய இடம் கொடுக்கப்படுதல் மூலம் அவர் தொடர்ந்தும் அந்த வீட்டில், அந்த வீட்டின் அங்கத்தவர்களோடிருந்து, அவர்களை வழிநடத்தி, நன்மை தீமைகளில் கலந்து கொள்கிறார் என்ற உணர்வு பெறப்படுகின்றது.

மரணத்தின் பின்னர் இடம்பெறுகின்ற உடனடியான மற்றும் நீண்டகாலக் கிரியைகள் யாவும் மரணமடைந்த ஒருவரை இடைநடுவே “அந்தரிக்கவிடாது” (அந்தராத்மா) அவர் எங்கேயோ இருக்கும் தனது சேரிடத்தை அடையச் செய்வதனையே நோக்கமாகக் கொண்டிருப்பதனைக் காணலாம். இந்த வகைப்பட்ட கிரியைகளுடைய (மரணச் சடங்குகள் தொடக்கம் ஆண்டு நிறைவு தினங்கள் வரையுள்ள பல்வேறு கிரியைகள்) தனிப்பட்ட, சமூக, உளவியல், மானுடவியல் இயக்கப்பாடுகள் மிகவும் முக்கியமானவை. நன்மையான பலாபலன்களைத் தரக்கூடியன.

பொதுவாக, இருப்பவர்களின் மனங்கள் தங்கள் இழப்பினை ஊடகப்படுத்தி முடிக்கும் மட்டும், இறந்தவர்களுக்கான அல்லது அவர்களின் பெயரிலான பற்பல சடங்காசாரங்களையும்,  நிகழ்வுகளையும் நடத்திக் கொண்டிருப்பதனைக் காணலாம். இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மாசியம். மாளயம், ஆண்டுத் திவசங்கள் போன்றவற்றை செய்வார்கள். அவர்களுக்கு சித்திரா பௌர்ணமியும், ஆடி அமாவாசையும் இறந்தவர்களை நினைவுகூரும் பொதுவான நாட்களாகின்றன. ஏனைய சமயத்தவர்களுக்கும் இதுபோன்று இறந்தவரை நினைவுகூரும் பொது நாட்கள் இருக்கின்றன. ஆனால், இந்தச் சடங்குகளும், நிகழ்வுகளும் கூட நிலையானவையாக இருப்பதில்லை. காலஞ் செல்லச் செல்ல, இருப்பவர்களின் மனங்கள் ஆறும் பொழுது, அவற்றினது எண்ணிக்கையும், பெருப்பமும் குறைந்து செல்வதனைக் காணலாம்.

இறப்புப் பற்றிய அறிவானது இருள் நிறைந்ததாக இருப்பினும், இறப்பை ஊடகப்படுத்துவதில் எமது சமுதாயத்தில் இருக்கும் நம்பிக்கைகள் மிகவும் பயனுடையதாக இருக்கின்றன.

இந்து சமயமும், பௌத்தமும் மறுபிறப்புப் பற்றிய நம்பிக்கையை ஊட்டினாலும், எமது சமுதாயத்தில் மிகக் குறைந்தவர்களே இறந்தவர்களுடைய மறுபிறப்புப் பற்றி ஆழமாக யோசிப்பவர்களாக இருக்கிறார்கள். பலர் மறுபிறப்புப் பற்றிய கருத்துக்களை மேலோட்டமாகக் கதைப்பதோடு நிறுத்தி விடுகின்றார்கள். மற்றவர்கள் அவ்வளவு தூரம் அதனைப் பற்றி அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. நாங்கள் பல விடயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை எடுப்பதில்லை என்பதற்கு இது இன்னுமொரு உதாரணமாகி விடுகின்றது.

ஆயினும், விதி அல்லது கர்மா என்பது பற்றிய எமது பாரம்பரிய நம்பிக்கைகள் மிகவும் வலிமையானவையாகவும், மனச்சாந்தியைத் தருவனவாகவும் இருக்கின்றன. “எப்பவோ முடிந்த காரியம்”, “எழுதியதை மாற்ற முடியாது”, “ஒருவருடைய பலன்”, “காலம்”, “விதி”, “அளந்தது அவ்வளவுதான்” போன்ற வாசகங்கள் வாழ்வின் நிலையாமையையும், மரணத்தின் நிரந்தரத்தையும் பறைசாற்றி மனதுக்கு ஆறுதல் தருகின்றனவாக இருக்கின்றன.

நீண்ட நாள் வாழ்வதற்கான பெருவிருப்பினிடையேயும், “நிம்மதியாய்”, “கஷ்டமில்லாமல்”, “இலகுவாய்”, “நோவில்லாமல்” சாக வேண்டும் என்ற விருப்பும் எம்மிடையே உண்டு. அதனால்தான் நாங்கள் “அழுந்திச் சாவதனை” அவ்வளவு தூரம் விரும்புவதில்லை. யாராவது சடுதியாக, அதிகம் பிரச்சினைப்படாது, (மற்றவர்களையும் பிரச்சினைப்படுத்தாது, அல்லது பயப்படுத்தாது) இறந்தார்களாயின், உதாரணமாக ஒருவர் நித்திரை கொள்ளும்போதே இறந்துவிடுவாராயின், நாங்கள் அதனை “நல்ல சாவு” என்று விளிக்கிறோம். செத்தவரைக் “கொடுத்து வைத்தவர்” என்றும், “புண்ணியம் செய்தவர்” என்றும் குறிப்பிடுகிறோம்.

நாம் நேசிக்கும் ஒருவரின், அல்லது எமக்குத் தெரிந்த, வேண்டப்பட்ட ஒருவரின் இறப்பானது எமது மனங்களில் பலவிதமான எதிர்வினைகளை உருவாக்குகின்றது. நாங்கள் அதனை இழவிரக்கம் என அழைக்கின்றோம். இறந்தவருடைய மரணம் போன்று, இருப்பவருடைய இழவிரக்கமும் தவிர்க்கப்பட முடியாததாக இருப்பதனை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். ஒருவருடைய இறப்பிற்காக வருந்தி, அழுது, பின் தேறிவருதலே இயல்பானதாகும். இந்த இயற்கையான செயற்பாட்டைக் குழப்புகின்ற குறுக்கு வழிகள் யாவும் நீண்டகால நன்மைகளைத் தரமாட்டா.

 

Dr. சா. சிவயோகன்

உளமருத்துவ நிபுணர்