Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Delusional Disorder (மாயநம்பிக்கைக் கோளாறு)

உளமாய நோய்கள் எனப்படுபவை பெரும்பாலும் மாயப் புலனுணர்வுகள் மற்றும் மாய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன. இந்த அசாதாரணமான அனுபவங்களாலும், நம்பிக்கைகளாலும் உளமாய நோயுடையவர்கள் பல்வேறுபட்ட பிரச்சினையான நடத்தைக் கோலங்களைக் காட்டி நிற்பார்கள். உளமாய நோய்க்குரிய ஒரு சிறந்த உதாரணமாக உளப்பிளவையைக் (Schizophrenia) கூறலாம்.

உளமாய நோய்களின் ஒரு வகையாக, மாய நம்பிக்கைகளை மட்டும் தனது பிரதான இயல்பாகக் கொண்டிருக்கும் மாயநம்பிக்கைக் கோளாறு அமைந்திருக்கின்றது. இந்த வகையான நோயுடையவர்கள் அடிப்படையாக தனித்த அல்லது இணைந்த ஒருசில மாய நம்பிக்கைகளை மட்டும் தமது பிரதான நோயியல்பாகக் கொண்டிருப்பார்கள். மற்றும்படி அவர்களது சிந்தனையிலோ, அறிகைத் தொழிற்பாடுகளிலோ, செயலாற்றல்களிலோ எதவிதமான வித்தியாசங்களும் காணப்படாது. இதனால் இந்நோயுடையவர்களும், அவர்களைச் சூழ உள்ளவர்களும் நோயினை உணர்ந்து கொள்ளாது, அடையாளங் காணாது இருப்பார்கள்.

உதாரணமாக ஒருவர் தனது அலுவலக முகாமையாளர் தனக்கு எதிராகத் தீங்கு செய்து கொண்டிருக்கின்றார் என நம்பத் தலைப்படலாம். இந்த நம்பிக்கையானது நோய்த் தன்மையுடைய மாயநம்பிக்கையாக மாறுமிடத்து, அதனை அவர் மிகவும் உறுதியாக நம்புபவராக மாறிவிடலாம். இந்த நம்பிக்கை காரணமாக அவர் எப்போதும் அவதானமாக இருப்பவராகவும், தனது முகாமையாளரின் நடவடிக்கைகளைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பவராகவும் மாறிவிடலாம். தனது முகாமையாளர் மீது வெறுப்புடையவராகவும், அவருக்கு எதிராக முறைப்பாடுகள் செய்பவராகவும் உருவாகிவிடலாம். ஆயினும், மறுதலையாக, அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை ஒழுங்காகச் செய்பவராகவும், ஏனைய பணியாளர்களோடு உறவைப் பேணக் கூடியவராகவும், தனது வீட்டில் பொறுப்பானதொரு தந்தையாகவும் கணவனாகவும் தொழிற்படுபவராகவும் இருக்கலாம். சுருங்கக் கூறின் அந்த ஒரு மாயநம்பிக்கையைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களிலும் அவர் ‘வழமை போன்று’ இருக்கலாம்.

சில மாயநம்பிக்கையுடையவர்கள், அந்த நம்பிக்கையுடன் தொடர்பான மாயப் புலனுணர்வுகளையும் அனுபவிக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட உதாரணத்தில் உள்ளவர் சிலவேளைகளில் தனது முகாமையாளர் தன்னைப் பற்றி மற்றவர்களுடன் கதைப்பதனை (மாயப்புலனுணர்வாகக்) கேட்கலாம். அவ்வாறு கேட்டதன் விளைவாக அவர் தனது முகாமையாளருடன் சண்டை போடலாம். இவ்வாறு சிலரில் இந்த நோய் அவர்கள் கொண்டிருக்கும் மாய நம்பிக்கைகளைக் கடந்தும் வெளிப்படுத்தப்படலாம்.

தனக்கு எதிராக ஒருவர் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோன்று மாயநம்பிக்கைக் கோளாறு உடையவர்கள் தங்களது வாழ்க்கைத் துணைவர் வேறு தொடர்புகள் வைத்திருக்கிறார் என்றோ, தங்களது உடலில் ஏதோ ஊர்ந்து கொண்டிருப்பதாகவோ, அல்லது ஏதாவது தீவிரமான மதநம்பிக்கையொன்றையோ கொண்டிருக்கலாம். இந்த நம்பிக்கைள் சாதாரணமானவையா? அசாதாரணமானவையா? நோய்நிலைக்குரியனவா? என்பதனைப் பெரும்பாலும் உளமருத்துவத்துறை சார்ந்த நிபுணர்களே தீர்மானிப்பார்கள்.

மாயநம்பிக்கைக் கோளாறுகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உளமாய எதிர்ப்பு மருந்துகளினைப் பாவிப்பதன் மூலம் குணப்படுத்தக் கூடியவையாகவே காணப்படுகின்றன. ஆயினும், ஒருவரில் காணப்படும் இவ்வாறான நம்பிக்கைகள் நோய்த் தன்மையுடையவை என அவரை ஏற்கவைத்து, மருந்துகளை உள்ளெடுக்கச் செய்து, அவரைக் குணமாக்குவது என்பது மிகவும் சிரமங்கள் நிறைந்த ஒரு பணியாகவே அமைந்து விடுகின்றது.