மின்வலிப்பு சிகிச்சை ஆனது சில வகையான உளநோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். இதனை ஆங்கிலத்தில் Electro Convulsive Therapy (ECT) என அழைப்பர். இந்தச் சிகிச்சையின்போது ஒரு குறித்தளவு மின்சாரம் மூளையினூடாகச் செலுத்தப்பட்டு, வலிப்பு ஏற்படுத்தப்படுவதன் மூலம் உளநோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும்.
மனச்சோர்வு, பிரசவத்தின் பின்னான உளமாய நோய்கள், உளப்பிளவை, பித்து நோய், இருமுனைவு மனோபாவக் கோளாறு போன்ற உளநோய்களுக்கு இச் சிகிச்சை மிகப் பயனுடையதாக அமைகிறது.
இச் சிகிச்சையானது ஒருவருடைய நோயினுடைய அறிகுறிகளை விரைவாகக் குறைத்து அவரை நல்லதொரு தொழிற்படு நிலைமைக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கது. ஆயினும், நோய் நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கட்டுப்படுத்துவதற்கும், அவை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கும் தகுந்த மருந்துகளைப் போதியளவு காலம் தொடர்ச்சியாகப் பாவிக்க வேண்டும்.
மின்வலிப்புச் சிகிச்சையானது பொது மயக்க மருந்து கொடுத்த பின்பே மேற்கொள்ளப்படும். எனவே, மின்வலிப்புச் சிகிச்சை பெறுகின்ற ஒருவர் பொது மயக்க மருந்து பெறுவதற்குத் தகுதியுடையவராக இருந்தால் மட்டுமே அவருக்கு இச்சிகிச்சை அளிக்கப்படும். ஒருவருக்கு அண்மைக் காலத்தில் பாரிசவாதம், மாரடைப்பு மற்றும் ஏனைய இருதய நோய்கள் போன்றன ஏற்பட்டிருக்குமேயானால், அவருக்கு மின்வலிப்புச் சிகிச்சை வழங்குவது பற்றித் துறைசார் நிபுணர்கள் கவனமாக ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்.
மின்வலிப்புப் பெற இருக்கின்ற ஒருவர் (மயக்க மருந்து கொடுக்கப்படுவதனால்) சிகிச்சை வழங்கப்படுவதற்கு முன் குறைந்தது 6 மணித்தியாலங்களுக்கு திண்ம உணவுகளைத் தவிரத்துக் கொள்ள வேண்டும். அதுபோல், சிகிச்சை பெறுவதற்கு முன்பு குறைந்தது 2 மணித்தியாலங்களுக்குத் தானும் நீர் அருந்துவதைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். தலையை இயலுமானளவு சுத்தமாகவும், எண்ணெய்ப் பிசுக்கு அற்றதாகவும் வைத்திருத்தல் வேண்டும். கழற்றக்கூடிய ஆபரண அணிகலன்களைக் கழற்றிவிடுதல் நன்று. இறுக்கமற்ற, தளர்வான ஆடைகளை அணிந்திருப்பது முக்கியமானதொன்றாகும். மின்வலிப்புச் சிகிச்சை பெறுவதற்கு முன்பு சிறுநீர் வெளியேற்றம் செய்யப்படுவதும் தேவையானது.
மின்வலிப்புச் சிகிச்சை வழங்குவதற்கு முதல், அதனைப் பெறுபவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அவர் ஒரு நித்திரை நிலைக்குக் கொண்டுவரப்படுவார். இதனால் அவருக்கு நடப்பது எதுவுமே தெரியாது. மின்வலிப்புச் சிகிச்சைப் படிமுறைக்கு அண்ணளவாக 10 – 15 நிமிடங்கள் வரை எடுக்கலாம். உண்மையில், மின்வலிப்புச் சிகிச்சை ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால், ஒருவர் மயக்கத்துக்குள்ளாவதற்கும், பின்பு மயக்கம் தெளிந்து எழுவதற்கும் மிகுதி நேரம் தேவைப்படும்.
சிகிச்சையின்போது, வலிப்பு ஒன்றை ஏற்படுத்தத் தேவையாள மிகக் குறைந்தளவு மின்சாரமே மூளையினூடாகப் பாய்ச்சப்படுகின்றது. இதனால் பெரிய பாதிப்புக்களோ, நீண்ட காலப் பின்விளைவுகளோ ஏற்படமாட்டாது. அநேகமான சிகிச்சை முறைகளைப் போல மின்வலிப்புச் சிகிச்சையும் சில பக்க விளைவுகளைக் கொண்டிருக்கத்தான் செய்கிறது. மினவலிப்புச் சிகிச்சையைத் தொடர்ந்து வரும் அடுத்த சில மணித்தியாலங்களுக்கு தலையிடி, குழப்பமான மனநிலை, தேக உளைவுகள், வாந்திக் குணம் போன்றன பொதுவாக ஏற்படுகின்ற பக்க விளைவுகளாகும். இவை மிகவும் தற்காலிகமானவை. இவற்றைவிட, சிலருக்குக் குறுகிய கால ஞாபகமறதியும் ஏற்படலாம். இது சில வாரங்களுக்கு நீடிக்கலாம்.
மின்வலிப்பு சிகிச்சை ஆனது நோயின் தன்மையையும், குணமாகும் வீதத்தையும் பொறுத்து 6 – 8 தடவைகள் வரை கொடுக்கப்படலாம். மின்வலிப்புச் சிகிச்சையானது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட, சிறந்த பயன்களைக் கொடுக்கின்ற ஒரு சிகிச்சை முறையாகும். எனவே, அது பற்றிய வீண் பயங்களைத் தவிர்த்துக் கொள்வதும், அது ஒருவருக்குத் தேவைப்படுகின்றது எனத் தீர்மானிக்கப்படுமிடத்து, அதனைத் தயங்காது பெற்றுக் கொள்வதும் முக்கியமானது.
Adapted from an information leaflet found at the Mental Health Unit, Base Hospital, Tellipalai