Mental Health Society Tellippalai, Jaffna.
Close

முதியவர்களில் ஏற்படுகின்ற மிதமான உளப்பிரச்சினைகள்

கடும் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் வேலையிலிருந்து திடீரென ஓய்வு பெறுதல், நாட்பட்ட நோய்வாய்படுதல், அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் ஒருவரது சமூக அந்தஸ்துக் குறைதல் போன்றவை மிதமான உளப்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக்கூடியன.

பதகளிப்பு, மனச்சோர்வு, மெய்ப்படுத்துதல்

பல முதியவர்கள் தங்களுடைய உளப்பிரச்சினைகளை பதகளிப்பு, மனச்சோர்வு, மெய்ப்படுத்துதல் என்பவற்றினூடாக வெளிப்படுத்துவார்கள். முதியவர்களில் ஏற்படுகின்ற மனச்சோர்வுடன் சில வேளைகளில் ஞாபக மறதியும் சேர்ந்திருக்கும். இது அவர் அறளை நோயில் பீடிக்கப்பட்டுள்ளார் என்ற பொய்யான தோற்றத்தைத் தரலாம். சிலவேளைகளில் முதியவர்களில் ஏற்படுகின்ற மனச்சோர்வானது, ஒரு நாட்பட்ட நோயினது வெளிப்பாடாக அமைந்துவிடலாம்.

முதியவர்களில் இருக்கக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட உடல்நோய்களினால் சிலவேளைகளில் அவர்களது மெய்ப்பாட்டு அறிகுறிகள் உடல்நோயின் வெளிப்பாடுகளா என்ற சந்தேகத்தைத் தரலாம். பொதுவாக, அதிகளவான முறைப்பாடுகள் நீண்டகாலத்திற்கு இருக்கின்றபொழுது அது மெய்ப்பாடாகவே இருக்கும். ஆயினும், முதியவர் ஒருவருடைய முறைப்பாடுகள் பற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுந்தால், அனுபவமிக்க ஒரு சுகாதார சேவையாளரிடம் ஆலோசனை பெறலாம்.

வெறுங்கூட்டு நிலை (Empty Nest Syndrome)

முதுமையில் ஏற்படுகின்ற குறிப்பானதொரு உளப்பிரச்சினையாக இதனைக் கொள்ளலாம். பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் எனக் கலகலப்பாக இருந்த வீட்டில் வெவ்வேறு காரணங்களுக்காக அவர்கள் படிப்படியாக வெளியேறிவிட, இறுதியில் முதியவர்கள் மட்டும் தனிமையாக விட்டுவிடப்படலாம். இப்போது பிள்ளைகளும் இல்லை, பேரப்பிள்ளைகளும் இல்லை எனும் நிலைவரும்போது முதியவர்கள் ஒரு வெறுமையை உணர்வர்.

இப்படியான நிலைகளில் முதியவர்கள் தனிமையை உணருவார்கள். ஆதரவுக்கு ஒருவரும் இல்லாது அந்தரப்படுவார்கள். பதகளிப்பு, மனச்சோர்வு, மெய்ப்படுத்தல் அறிகுறிகளைக் காட்டி நிற்பர்.

ஆதரவான சூழலும், பழைய புதிய ஆர்வங்களை வளர்த்துக் கொண்டு அவற்றில் தொடர்ச்சியாக விருப்போடு ஈடுபடுதலும் இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும்.

இறப்பு

முதிய பருவத்தை இறப்பிற்கான காத்திருப்புக் காலமென்றும் சிலர் கூறுவர். சிலர் இதனை எண்ணிப் பயப்படுவதும் உண்டு. ஆயினும் இறப்பு ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதனையும், அதற்காக வீணாக வருந்துதல் பயனற்றது என்பதையும் உணரவேண்டும். அதைவிட, இறப்பிற்கான சில ஆக்கபூர்வமான தயார்ப்படுத்தல்கள் இருக்கின்றன. இவ்வாறு முற்கூட்டியே தயாராகினால், இந்தக் கட்டத்தைச் சுபலமான முறையில் தாண்டலாம்.

அநேகமான முதியவர்கள் இதனை நன்கு உணர்ந்து கொள்வர். பொதுவாகத் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்த திருப்தியில் இருக்கின்ற முதியவர்கள் இறப்பையும் சந்தோஷமாக எதிர்கொள்வர். அப்படியில்லாதவர்களே சிலவேளைகளில் சிக்கல்களை உணரக்கூடும்.

இழவுத்துயர்

எங்கள் பாரம்பரியத்தில் காணப்படுகின்ற செத்த வீட்டு முறைகள் (மரணச் சடங்குகள்) மிக நல்ல பயனை அளிக்கின்றன. ஒப்பாரி வைத்து அழுதல் சக்தி வாய்ந்த ஓர் உணர்ச்சி வெளியேற்றல் முறையாகும். மாரடித்தல், கட்டிப்பிடித்து அழுதல் போன்றன ஒருவரின் துக்கத்தை வெளியேற்றவும். அதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுகின்றன. இந்த முறைகள், இருப்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியேற்றவும், தாம் இறந்தவர்களுடன் கொண்டிருந்த முடிச்சுக்களிலிருந்து மீளவும் உதவுகின்றன. மேலும், ஒருவருடைய இறப்பைத் தொடர்ந்து சமூக ஆதரவும் அரவணைப்பும் கிடைப்பதனால். இருப்பவர்கள் இறப்பை ஏற்றுக்கொண்டு, தங்கள் பழைய வாழ்க்கைக்கு மீண்டு வருவதும் சுலபமாக இருக்கும்.

ஆயினும் யுத்தம், இயற்கை அனர்த்தம் (சுனாமி) போன்றவற்றிற்கு முகங்கொடுக்கும் சமுதாயங்களில் இவ்வாறு முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட செத்தவீடுகளும், மரணச் சடங்குகளும் நடைபெறாது போகலாம். இது இருப்பவர்களின் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தி, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

 

மிதமான உளநலப் பிரச்சினைகளுக்கு உதவுதல்

முதுமையுடன் தொடர்புடைய பலவிதமான பிரச்சினைகளுக்கு ஆதரவான உளவளத் துணையே தேவைப்படும். இளைய தலைமுறையினர் தங்களுடைய நேரத்தில் சிறிது  நேரத்தை ஒதுக்கி, அவர்களுடன் அன்போடும், ஆதரவோடும் அணுகுதல் பிரயோசனமானது. அவர்களைக் கதைக்கவிட்டு, முட்டுத் தீர்க்க உதவலாம்.

சிலவேளைகளில் அவர்களுக்கு வேண்டிய சிறுசிறு உதவிகள் கிடைக்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதே அவர்களது துன்பங்களுக்கு மருந்தாகலாம். அவர்கள் வாழுகின்ற வீடு வளவைத் துப்பரவு செய்துகொடுத்தல், தேவையான நேரங்களில் உணவுகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்குதல் போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்ள உதவலாம்.

 

 

நன்றி: தமிழ் சமுதாயத்தில் உளநலம்