Mental Health Society Tellippalai, Jaffna.
Close

முதியவர்களில் ஏற்படுகின்ற பொதுவான பாரிய உளப்பிரச்சினைகள்

மாறாட்டம் (Confusion)

ஒருவர் தன்னைப் பற்றியும், தான் வாழும் சூழல் பற்றியும் தெளிவில்லாமல் இருத்தலை மாறாட்டம் என அழைக்கலாம். மாறாட்டத்தின் உச்சநிலையைச் ‘சன்னி” என்று ஊர் வழக்கில் அழைப்பார்கள். சன்னியிலிருப்பவர்களிடம் அவர்கள் சூழலைப் பற்றிக் கொண்டிருக்கும் தெளிவை அறிவதற்காகவே, வழமையாக இப்படியானவர்களிடம் நாங்கள் “என்னைத் தெரியுமோ?”, “இவ ஆரெண்டு சொல்லுங்கோ பாப்பம்?” என்று இயல்பாகக் கேட்போம்.

முதுமையில் ஏற்படுகின்ற மாறாட்டங்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் நாட்பட்ட மூளையைப் பாதிக்கும் நோய்கள் காரணமாக இருக்கலாம். சிறிய தலைக் காயங்கள் (உதாரணமாக கட்டிலிருந்து நிலத்தில் விழுதல்), மதுபாவனை போன்றனவும் மாறாட்டம் ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகரிக்கவல்லன.

சந்தேக உளமாய நோய்கள் (Paranoid Psychosis)

ஏற்கனவே நாட்பட்ட நோய்களை உடையவர்களிலும், சந்தேக ஆளுமையுடையவர்களிலும் இது தோன்றலாம். அறளை நோயின் ஓர் அறிகுறியாகவும் இது அமையலாம். முதுமையில் ஏற்படுகின்ற பார்வைக் குறைபாடு, கேட்டல் குறைபாடு போன்றனவும் இந்நோயின் தோற்றத்திற்கு வித்திடலாம்.

சந்தேக உளமாய நோயுடையவர்கள், குறிப்பாகச் சிலரையோ அல்லது எல்லாரையுமோ சந்தேகிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு எதிராக ஏதோ செய்கிறார்கள் என்று நம்புவார்கள். இதனால் அந்த அவர்களுடன் தேவையில்லாமல் சண்டை பிடிப்பார்கள். சிலவேளைகளில் இந்தச் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இவர்களுக்கு மாயப்புலனுணர்வுகளும், போலி நம்பிக்கைகளும் தோன்றலாம். இதன் காரணமாக உணவுகளில், நீராகாரங்களில் ஏதோ கலந்திருக்கிறார்கள் என்று சொல்லி, அவற்றை உண்ணாமல், குடிக்காமல் விடுவார்கள். எந்த நேரமும் தமது சூழலில் ஏற்படக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கியபடி, ஒரு கண்காணிப்புடன் இருப்பார்கள்.

அறளை பெயர்தல் (Dementia)

முதுமையுடன் தொடர்புடைய ஒரு பெரிய பிரச்சினை அறளை நோய் ஆகும். முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அறளை நோயுடையவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும். இது சமுதாயத்தில் பெரிய நெருக்கடியையும், எதிர்த்தாக்கங்களையும் ஏற்படுத்தவல்லது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவரது உடல், உளத்தொழிற் பாடுகளில் சீரழிவு ஏற்படுகின்றது. இந்நோயுடையவர்களில் முக்கிய குறைபாடாக ஞாபக மறதி இருக்கும். தான் வைத்த பொருட்களையே மீண்டும் எடுக்கமாட்டாமல் கஷ்டப்படுவர். வீட்டிற்கு வந்துபோவது யாரென்று தெரியாமல் இருக்கும். சாப்பிட்டதா இல்லையா என்பதுகூட மறந்துவிடும். இப்படியான நிலைமை ஏற்பட்ட ஒருவரை ஊர் வழக்கில் அவருக்கு “அறளை பெயர்ந்துவிட்டது” என அழைப்பர்.

 

பாரிய உளநலப் பிரச்சினைகளுக்கு உதவுதல்

சந்தேக உளமாய நோய்கள் உடையவர்களைப் பராமரிப்பதில் சில சிக்கல்கள் இருக்கும். இவர்களுடன் ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும். இவர்கள் தமது நெருங்கிய உறவினர்களைக்கூட நம்பமாட்டார்கள். மேலும், இவ்வாறான மனக்குழப்பம் உடையவர்கள் சொல்வழி கேட்கமாட்டார்கள். ஆயினும் இவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் மருந்துகளைக் கொடுத்தால், சில நாட்களுக்குள் இந்த வகையான நடத்தைகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். அதன் பிறகு, இவர்கள் உங்களுடன் ஒத்துழைப்பார்கள்.

அறளை நோயுடையவர்களின் உறவினர்களுக்கு, அந்நோய் பற்றி விளங்கப்படுத்துவது நல்லது. அறளை என்பது முற்றாக மாற்ற முடியாத ஒரு நோய்நிலை எனவும், படிப்படியாக நோயாளி ஒரு சிறுகுழந்தைபோல மாறிவிடுவார் என்பதனையும் விளங்கப்படுத்த வேண்டும். அறளை நோயினைக் குணமாக்க முடியாதுவிடினும், அந்நோயின் குறிப்பான சில அறிகுறிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்பதனையும் கூறவும். அறளை நோயாளியாகிவிட்ட முதியவருடன், அன்போடும் ஆதரவோடும் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தலாம்.

மாறாட்டம் உடையவர்களை ஒரு பொதுவைத்தியசாலையில் அனுமதித்து வைத்தியர்களது ஆலோசனைகளைப் பெறலாம்.

 

 

நன்றி: தமிழ் சமுதாயத்தில் உளநலம்