Mental Health Society Tellippalai, Jaffna.
Close

முதுமையில் உளநலம்

முதுமை என்றால் என்ன?

ஒருவரின் உடலில் உள்ள கலங்களிலும், தொகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு அவரது உடல் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட தொழிற்பாடுகளில் படிப்படியான தேய்வு ஏற்படுகின்ற நிலைமையை முதுமை என விளங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக உலகவழக்கில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களையே முதியவர்கள் என அழைக்கும் ஒரு பாரம்பரியம் நிலவுகிறது. எனினும், இது அவ்வளவு தூரத்திற்குப் பொருந்தாது. 50 வயதிலேயே முதுமைக்கோலம் கொள்பவர்களையும், எண்பது வயதிலும்கூட இளைஞர்கள்போல் வாழ்பவர்களையும் நாம் காணலாம். ஆகவே முதுமை என்பதை வயதின் வருடங்களை வைத்து வரையறுக்காது உடல், உள மாற்றங்களை வைத்துப் பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

அதிகரிக்கும் முதியவர்கள்

தற்காலத்தில் உலகம் முழுவதும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்லுகின்றது. தமிழ் சமுதாயததிலும் முன்பிருந்ததைவிடத் தற்போது மிக அதிக முதியவர்கள் இருக்கிறரர்கள். மேலும், சமுதாயத்தில் முதியோரின் விகிதாசாரம் கூடியுள்ளது, அதாவது மற்றைய வயதினருடன் ஒப்பிடுகையில் முதியோரின் பங்குவிகிதம் அதிகரித்திருக்கின்றது. மருத்துவ வசதிகள் கூடியமை, வாழ்க்கைத்தரம் அதிகரித்தமை போன்ற பொதுவான காரணங்களும், அதிகளவு இளைய சமூகத்தினர் அழிந்து, காணாமற்போய், வெளிநாட்டுக்குப்போய் இருப்பது போன்ற விசேட காரணங்களும் இதற்குப் பங்களிக்கின்றன.

சமுதாயத்தில் முதியவர்கள்

ஆரோக்கியமான முதியவர்களை உடைய சமுதாயம் உண்மையிலேயே பாக்கியம் செய்த ஒரு சமுதாயமாக அமைந்துவிடும். முதியவர்களின் அறிவும், அனுபவமும் (பட்டறிவு) இளைய தலைமுறையினர்க்கும், அடுத்த சந்ததிக்கும் மிகவும் பயனுடையதாக அமைந்துவிடும்.

முதியவர்களின் இந்த அனுகூலத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்ள சமுதாயம் முன்வர வேண்டும். உதாரணமாக, சிறிய பிள்ளைகளுக்கு கதை சொல்லுதல், ஊர் விடயங்களில் கலந்து கொள்ளுதல், ஆன்மீகப் பணிகளில் பங்கேற்றல் என அவர்களை ஈடுபடுத்தலாம். இவற்றினூடாக அனுபவங்களும், அறிவும் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுவதோடு; சமுதாயத்தின் விழுமியங்களும், நியமங்களுங்கூட நிலை நிறுத்தப்படுகின்றன.

முதுமையில் உளநலத்தைப் பாதிக்கும் காரணிகள்

உடற் காரணிகள்

முதுமையுடன் தொடர்புடைய பலவிதமான உடல் மாற்றங்கள் எங்களுடைய ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்படலாம். இந்த மாற்றங்களில் சில இயல்பாக ஏற்படுபவை பலநாட்பட்ட நோய்களால் ஏற்படுபவை. இந்த நோய்கள் தொழிற்பாட்டுக் குறைவையும், துன்பத்தையும், நோவையும் ஏற்படுத்த வல்லன. அத்துடன், மற்றவர்களில் தங்கி வாழுகின்ற நிலையையும் இவை ஏற்படுத்தலாம்.

உளக் காரணிகள்

முதுமையில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற உளக்காரணிகளிலே, திடீர் திடீரென்று, சடுதியாக ஏற்படுகின்ற மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீடு மாறுதல், இடம்பெயர்வு, மகளுக்குத் திருமணம் நடந்து வேறு இடத்திற்குப் போதல், நண்பர்களின் மரணம், எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கைத்துணையின் இழப்பு போன்றவை ஏற்கனவே தங்களது இயைபாக்கத் திறனில் மட்டுமட்டாக வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர்களின் வாழ்க்கைக் கோலத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடுவதனால், அவர்களில் அவை நெருக்கீடாக உணரப்படும்.

சமுதாயக் காரணிகள்

முதியவர் வாழுகின்ற சமுதாயமானது முதுமையை எவ்வாறு பார்க்கின்றது என்பது முக்கியமானது. முதியவர்கள் அனுபவங்கள் நிறைந்ததொரு நூலகம் போன்றவர் என மதிக்கின்ற வழமை சில சமுதாயங்களில் இருக்கின்றன.

எனினும், எதிர்மறையான கருத்துகளும் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக நவீன உலகத்தில், முதியவர்களை “ஒன்றுக்கும் உதவாதவர்கள்” என்றும், “நோய்களின் உறைவிடம்” என்றும் “பழசு” என்றும் ஒதுக்கி வைக்கும் பழக்கங்கள் வழக்கத்தில் இருக்கின்றன.

இதைவிட, தாம் வாழம் சமுதாயத்தில் கானப்படுகின்ற பொதுவான பிரச்சினைகள், வறுமை, பஞ்சம், அழிவுகள் போன்றமையும் முதியவர்களின் உளநலத்தைப் பாதிக்கத்கூடியவை.

முதியவர்களுக்கு உதவுதல்

பொதுவாகச் செய்யக் கூடியவை,

  • வேண்டிய வேளைகளில் அவர்தம் கருத்துகளைக் கேட்போம்.
  • தேவையான போதெல்லாம் அவருக்குச் சிறுசிறு உதவிகள் செய்வோம்.
  • அன்னவரோடு அன்பாய் இருப்போம்.
  • சிறு பொழுதாயினும் அவர் பேசக் கேட்டிருப்போம்.
  • இயலுமான வேலைகளில் அவர்தமை ஈடுபடுத்துவோம், செய்ய விடுவோம்.
  • பண்பாட்டுக் கடத்துகைக்கான சூழலை அமைப்போம்.
  • அவர்தம் உறவாடலுக்கு வழிசமைப்போம்.
  • அவர்தம் ஆன்மீகத் தேவைகளுக்கு உறுதுணையாய் இருப்போம்
  • நல்ல நாள், பெருநாட்களில் அவர்களை உபசரிப்போம்.

 

நன்றி: தமிழ் சமுதாயத்தில் உளநலம்