ஒருவர் படைப்பாற்றலைப் பயன்படுத்தி கலை வடிவங்களின் ஊடாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்வது என்பது அவர் தமது உணர்வுகளைப் பரிசீலனை செய்யவும், வார்த்தைகளால் பகிரப்பட முடியாத ஆழ்ந்த உணர்வுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளவும் வழிவகை செய்யும்.
எழுதுதல், வரைதல், பாடல், ஆடல், நாடகம் ஆகிய அழகியற் கலைகளின் மூலம் தம்மை வெளிப்படுத்துவதானது ஒடுக்கப்பட்ட உணர்வுகளை விடுதலை செய்து, உளநலன் சார்ந்த கரிசனங்களில் இருந்து குணமடைவதற்கு உதவுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான சிகிச்சை முறையே வெளிப்பாட்டுச் சிகிச்சை ஆகும்.
பயிற்சி பெற்ற ஒரு வெளிப்பாட்டு சிகிச்சையாளரால் இவ்வாறாக வெளிப்படுத்தபடும் உணர்வுகளையும், எண்ணங்களையும் விளங்கிக் கொண்டு, அவற்றின் ஊடாக, சிகிச்சை பெறுபவரின் உளநிலையை அறிந்து கொள்ளவும், அவரது கரிசனங்களை அடையாளம் காணவும் முடியும். மேலும், வெளிப்பாட்டுச் சிகிச்சையானது உளசிகிச்சை பெறும் ஒருவரைப் பல்வேறு கலைவடிவங்களின் ஊடாகத் தம்மை வெளிப்படுத்த உதவுவதன் மூலமாக அவரது உளநலன் சார்ந்த கரிசனங்களில் இருந்து விடுவித்து, அவரைக் குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றது.
பொதுவாக வெளிப்பாட்டுச் சிகிச்சையானது அடிப்படையாக நான்கு வகைகளைக் கொண்டிருக்கின்றது.
- சங்கீதச் சிகிச்சை
- வரைதல் சிகிச்சை
- நடனச் சிகிச்சை
- எழுத்துச் சிகிச்சை
இவ்வகைகள் அவரவரது ஆர்வத்துக்கும், விருப்புத் தெரிவுக்கும் ஏற்பத் தனித்தனியாக பயன்படுத்தப்படும்போது, அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட வெளிப்பாட்டுச் சிகிச்சை முறையாகத் தொழிற்படக்கூடியன. இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டும் வெளிப்பாட்டுச் சிகிச்சையை வழங்கலாம்.
வெளிப்பாட்டு முறைகள் பின்வரும் உளநலன் சார்ந்த கரிசனங்களில் மீள்வதற்கு அல்லது குணமடைவதற்கு உதவலாம்
- அவதானக் குறைவுடனான மிகையியக்க நோய் (ADHD)
- பதகளிப்பு (Anxiety)
- மனச்சோர்வு (Depression)
- ஓட்டிசம் (Autism)
- விருத்திக் குறைபாடு (Developmental problems)
- மனவடு நோய் (PTSD)
- மன அழுத்தம் (Stress)
- ஆளுமைக் கோளாறுகள் (Personality Disorders)
வேளிப்பாட்டு முறைகளின் மூலம் பயன் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட அழகியற் கலை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக, நம்பிக்கையோடு, இதயசுத்தியுடன் இவற்றில் ஈடுபடுதல் மாத்திரமே பயன் தரக்கூடியது.
Compiled by S. Vithyasahar