Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Bipolar Affective Disorder  (இருதுருவ மனோபாவக் கோளாறு)

சாதாரணமாக எமது மனநிலையானது சிறிய சிறிய ஏற்ற இறக்கங்களோடு காணப்பட்டாலும் அது பெரும்பாலும் சமநிலையிலே இருக்கின்றது. காலையில் சலிப்போடு இருந்த மனமானது மாலையில் உற்சாகமாக மாறிவிடுவதனை அவதானிக்கலாம். மறுதலையாக காலையில் மிகவும் புத்துணர்ச்சியோடு இயங்கிக் கொண்டிருந்து மனமானது பகற்பொழுதின் அனுபவங்களால் சலிப்புற்றுச் சோர்ந்து போவதனையும், பின்பு மாலையின் மகிழ்வுகளால் புத்துயிர் பெறுவதனையும் நாம் உணரலாம். இவை யாவும் சாதாரணமான அனுபவங்களே. எமது மனநிலையானது எப்போதும் ஓர் இயக்கத்திலேயே இருக்கின்றது.

ஆயினும், எமது மனநிலையானது (மனோபாவம், மனவெழுச்சி) சிலவேளைகளில் ஏதோவொரு உணர்வு நிலையால் தொடர்ச்சியாக ஆட்கொள்ளப்பட்டு நிற்கின்ற பொழுது, அந்நிலைமையானது அசாதாரணமாகக் கொள்ளப்படலாம். மனம் தொடர்ச்சியாகச் சலிப்புற்று, கவலை மிகுந்த உணர்வில் இருக்கின்ற பொழுது அது மனச்சோர்வு (Depression) என அழைக்கப்படுகின்றது. இதற்கு எதிர்மாறாக மனமானது வழமையிலும் அதிகமான உற்சாகத்தோடு, மிகைப்படுத்தப்பட்ட மகிழ்வுணர்வோடு, அதீத சக்தியோடும், தொடர்ச்சியாக உருவாகும் விரிந்து செல்லும் எண்ணங்களோடும் காணப்படுகின்ற பொழுது அது பித்து (Mania) என அழைக்கப்படுகின்றது. மனச்சோர்வு, பித்து என்பன தனித்தனியான நோய்நிலைமைகளாக இருந்தாலும், சிலரில் அவை இரண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தப் பின்னணியில் இருதுருவ மனோபாவக் கோளாறு என்பதனை மனச்சோர்வு (Depression), பித்து நிலை (Mania) என்பன மாறி மாறி வருகின்ற, நீண்டகாலம் நிலைத்து இருக்கக்கூடிய ஒரு உளமாய நோயாகப் புரிந்து கொள்ளலாம். இந்நோயின் கடுமையான வெளிப்பாடுகளின்போது மாயப் புலனுணர்வுகள், போலி நம்பிக்கைகள் ஆகியன ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதனால் இது ஓர் உளமாய நோயாகக் கொள்ளப்படுகின்றது. நோயின் தீவிரமான நிலைமைகளில் அது ஒருவரை மிக அதிகளவில் பாதிப்பதனாலும், நீண்ட காலம் தொடர்ந்து நிலைத்திருக்கின்ற வாய்ப்புகள் இருப்பதனாலும், மருந்துகள் பாவிப்பதன் மூலமே தொடர்ச்சியான கட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்பதனாலும் இது “பாரிய உளநோய்” எனும் வகைப்படுத்தலிற்குள் அடங்குகின்றது.

இருதுருவ மனோபாவக் கோளாறு என்பது பெரும்பாலும் சிறுவயதிலேயே, பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் அல்லது இருபதுகளின் முற்பகுதியிலேயே ஆரம்பமாகின்றது. இது உருவாவதற்கான காரணங்கள் தெளிவாக அறியப்படாவிட்டாலும், பரம்பரையலகுகளின் பங்களிப்பும், சூழல் சார்ந்த நெருக்கீடுகளும் இந்நோயின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கின்றமை அவதானிக்கப்பட்டிருக்கின்றது.  முதலில் மனச்சோர்வாகவோ, பித்து நிலையாகவோ வெளிப்படும் இக்கோளாறு, பின்னர் மனச்சோர்வு, பித்து எனும் இரண்டு நிலைமைகளும் எழுந்தமானமாக, மாறி மாறி ஏற்படுகின்ற, ஒரு நிலைமையாகப் பரிணமிக்கின்றது. நோய் ஒவ்வொரு முறை மறுகலிக்கும் பொழுதும், அந்தவேளையில் பிரதானமாக இருக்கும் மனோபாவ நிலைமைகளுக்கேற்ப அது தனது அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றது.

எனவே, இருதுருவ மனோபாவக் கோளாறு நிலைமைகளுக்குச் சிகிச்சையளிக்கின்ற பொழுது, வைத்தியர்கள் இரண்டுவிதமான அணுகுமுறைமைகளைக் கையாள்வார்கள். ஒன்று, அந்த வேளையில் பிரதானமாக மேலோங்கியிருக்கின்ற மனோபாவத்தினைச் சீர்செய்வதற்கான சிகிச்சை. மற்றையது, இந்த இரண்டுவிதமான மனோபாவக் கோளாறுகளும் அடிக்கடி மறுகலிப்பதனைத் தடுப்பதற்கு உதவக்கூடிய, மனநிலையைச் சமப்படுத்தும் சிகிச்சை. இவ்வாறு இரண்டு விதங்களில் சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதனால் இருதுருவ மனோபாவக் கோளாறு உடையவர்கள் நோய் மறுகலிப்புகளின்போது மாத்திரமின்றி, தொடர்ச்சியாகவும் நீண்ட காலத்திற்கு மருந்துகளை உள்ளெடுக்க வேண்டிய தேவை எழுகின்றது.

இருதுருவக் கோளாறு உடையவர்கள் நோயின் மறுகலிப்புகள் ஏற்படாத காலப்பகுதியில் மிகவும், சாதாரணமாக இருப்பார்கள். அவர்களால் படிக்கவும், தமது வேலைகளைப் பழுதின்றிச் செய்யவும் முடியும். அவர்கள் முழுக்க முழுக்க ஒர சாதாரண வாழ்வை வாழ முடியும்.