Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Obsessive Compulsive Disorder (எண்ணச்சுழல் நிர்ப்பந்தம்)

திரும்பவும் திரும்பவும் மனதில் ஊடுருவும் எண்ணங்களும், அவற்றால் நிர்ப்பந்திக்கப்பட்டு வரும் செயற்பாடுகளும் எண்ணச்சுழல் நிர்ப்பந்தம் (Obsessive Compulsive Disorder) எனும் நிலைமையின் அடிப்படையான குணங்குறிகளாக இருக்கும். இந்த நிலைமையில் ஒருவரது மனதைத் தொடர்ச்சியாக ஊடுருவி வருபவை எண்ணங்களாகவோ, கேள்விகளாகவோ, கருத்துகளாகவோ, காட்சிகளாகவோ அல்லது ஒரு செயலைச் செய்வதற்கான உந்துதலாகவோ இருக்கலாம். இவை எவையாக இருந்தாலும், அவை ஒருவரது விருப்பத்திற்கு எதிராக வருகின்றன. மனதைவிட்டுப் போக மறுக்கின்றன. அதனுடன், அவை பதகளிப்பையும் ஏற்படுத்துகின்றன.

பலர் இவ்வாறு ஏற்படுகின்ற பதகளிப்பைத் தணிப்பதற்காகச் சில செயற்பாடுகளை ஒரு நிர்ப்ந்தத்ததின் நிமித்தம் செய்வதுபோல் செய்வார்கள். சிலர் ஏதாவது பிழையாக நடந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகத் தொடர்ந்து விடயங்களைச் சரிபார்ப்பர். இன்னும் சிலர் ஏதாவது தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றம் காரணமாக அடிக்கடி கைகளைக் கழுவுவார்கள், அல்லது அதிக நேரம் குளிப்பார்கள். இந்த நிலைமையினால் துன்பப்படுகின்ற வேறு சிலர் பொருட்களை மிக மிக ஒழுங்காகவும், ஒரு குறிப்பிட்ட முறையிலும் அடுக்கி வைத்துக்கொள்ள விரும்புவர். ஒரு சிலருக்கு மற்றவர்களைத் தாக்க வேண்டும் என்ற ஆக்ரோஷ எண்ணம்கூட தொடர்ச்சியாக வரலாம். சிலர் தமது நாளாந்த அலுவல்களிலே மாற்ற முடியாத ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றப் பார்ப்பார்கள். வேறு சிலர் பொருட்கள் எதையும் எறியாமல் குவித்து வைக்கும் இயல்பை, அல்லது குறிப்பிட்ட சில பயனற்ற பொருட்களைச் சேகரித்து அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் இயல்பைக் காட்டுவார்கள். இவ்வாறு இந்த எண்ணச்சுழல் நிர்ப்பந்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு வெளிப்பாடுகளைக் காட்டலாம்.

எண்ணச்சுழல் நிர்ப்பந்தம் எந்த வயதினரிடையேயும் ஏற்படலாம் என்றாலும், அது கட்டிளமைப் பருவத்தினரிடையே அதிகளவு ஏற்படுவதனைக் காணலாம். எண்ணச்சுழல் நிர்ப்பந்தம் உடைய பலர் உளவியல் உதவிகளோடு முன்னேற்றம் அடைவார்கள். குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவ உதவியும் தேவைப்படலாம்.

 

நன்றி: சிறுவர் உளநலம்