Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Morbid Jealousy (சந்தேகக் கோடு)

 காதல், திருமணம் போன்ற நெருங்கிய உறவில் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருத்தல் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இது பற்றி ஒருவரும் பெரிதாகக் கதைப்பதுமில்லை. ஒருவருக்கொருவர் விசேடமாக உறுதி வழங்குவதுமில்லை. ஆனால், அது அவ்வாறே எதிர்பார்க்கப்படுகின்றது, இருக்கின்றது, நடைபெறுகின்றது.

இவ்வாறு விசுவாசமாயிருத்தல் என்பது ஒரு எழுதப்படாத விதியாக நடைமுறையில் இருப்பதனால், பொதுவாக தமது இணை, துணை அவ்வாறு விசுவாசமாக இருக்கின்றார்களா என்று ஒருவரும் பரீட்சித்துப் பார்ப்பதுமில்லை. பலர் அது பற்றி அக்கறை செலுத்துவதுமில்லை. ஆயினும், தமது இணையும், துணையும் தமக்கு மட்டும்தான் என்பதிலும், அவர்கள் தம்மைத் தவிர வேறு ஒருவருடனும் நெருக்கமாகப் பழகக் கூடாது என்பதிலும் அனைவரும் உறுதியாகவிருப்பார்கள். தமது வாழ்வில் வேறு ஒருவர் குறுக்கிட்டுத் தமக்கேயுரியதான உறவின் நெருக்கத்தையும், உடல் நெருக்கத்தையும் பங்குபோட்டுக் கொள்வதனை எவரும் விரும்புவதில்லை. இது இயல்பான ஒன்றே.

ஆதனால், தமது நெருங்கிய உறவு வட்டத்தினுள் இன்னொருவர் நுழைய முற்படுகின்றபோது, அல்லது நுழைந்து விடலாம் என மனம் நம்புகின்றபோது அவர்கள் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்துவார்கள். எவ்வாறாயினும், தமது உறவு பிரத்தியேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். இவ்வாறான பாதுகாப்பு உணர்வின்மை, அதீத மேற்பார்வை, எதிர்வினை உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகள் என்பன மிகவும் ஆதியான உணர்வுகளாக, நடத்தைக் கோலங்களாக இருக்கின்றன. நெருங்கிய உறவுகளில் ஏற்படுகின்ற இவ்வாறான ‘கவசங்கள்’, அதனை ஆங்கிலத்தில் Jealousy என அழைத்தாலும், வழமையானவை.

சிலவேளைகளில், இந்த ‘வழமைக்கு’ மாறாக, நெருங்கிய உறவில் இருக்கின்ற ஒருவர், மற்றவர் மீது, அந்த மற்றவர் வேறு எவருடனோ உறவில் இருக்கின்றார் எனும் நினைப்போடு, அளவுக்கதிகம் எதிர்வினையாற்றுவார்கள். இவ்வாறான எதிர்வினைகள் அவர்கள் தமக்குள் கொண்டிருக்கும் உறவின்மீது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி, அதனைச் சிக்கலுக்குள் கொண்டுவருகின்றன. அவர்களது நாளாந்த நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன. அவர்களுடைய உறவில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. ஒருவர் மீது ஒருவர் வெறுப்படையவும், பழிபோடவும் காலாகின்றன. அவர்கள் இருவரது மனநிம்மதியையும் சிதைத்து விடுகின்றன. இந்தவாறான அளவுக்கதிகமான, வாழ்க்கையைப் பாதிக்கின்ற எதிர்வினைகள் உணவின் விசுவாசம் மற்றும் நம்பிக்கைகளில் வேள்வியை உருவாக்கும் ‘சந்தேககங்களாக’ வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான ஒரு நம்பிக்கையில்லாத, உறவின் விசுவாசம் பற்றிச் சந்தேகப்படுகின்ற ஒரு நிலையையே மருத்துவ உலகில் “நோய்தன்மையுடைய பொறாமை அல்லது உறவில் சந்தேகம்” Morbid Jealousy என அழைப்பார்கள்.

சிலரில் இவ்வாறான சந்தேகமானது ஒரு மெல்லிய இழை போல, ஒரு கோடு போல ஏற்படும். ஆனாலும் சிலரில் இது மிகவும் தீவிரமாகி அவருக்கும், அவரோடு உறவில் இருப்பவருக்கும், ஏனைய குடும்பத்தவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகின்றது.

இவ்வாறு சந்தேகப்படுபவர்கள், தமது இணை அல்லது துணை வேறு ஒருவருடன் உறவு வைத்திருப்பதாகக் கருதி அது பற்றிக் கேட்பகவும், அதனை ஒத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தவும், வாய்மொழிகளாலும் உடலாலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடவும், கரவு கொள்ளவும், உளவு பார்க்கவும் தலைப்படுவார்கள். இதனால் ஓர் உறவில் இவ்வாறான சந்தேகம் ஏற்படுகின்றபோது, அந்த உறவு சிக்லகளுக்கு ஆளாகி, அதில் விரிசல்கள் ஏற்படுகின்றன.

தமது இணை அல்லது துணையின்மீது, அவர்களது பாலியல் நடத்தையின்மீது சந்தேகம் ஏற்படும் இயல்பானது மதுபாவனை உடையவர்களிலும், சில வகையான உளநோய்களிலும், ஒருசில உடல் நோய்களிலும் அவதானிக்கப்படுவதனால், இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுகின்றபோது, அந்த உறவில் இருப்பவர்கள் உளநலத்துறை சார்ந்த நிபுணர்களோடு கலந்துரையாடி ஆலோசனை பெறுதல் நன்மையானது.

 

Courtesy: Dr. S. Sivayokan