Mental Health Society Tellippalai, Jaffna.
Close

பிள்ளைகளில் இழவிரக்கம்

பெற்றோர், பேரன், பேர்த்தி, மாமா, அத்தை, பெரியம்மா, சித்தப்பா, நண்பனின் அம்மா, அன்போடு பழகிய வேறு ஒருவர் என்று நெருங்கிய (உறவினர்) ஒருவரின் இறப்பு துயரைக் கொண்டு வருவது இயல்பானது. அவ்வேளைகளில் அழுவதும் சாதாரணமானது. இழந்த அந்த ஒருவரது நினைவுகளில் மூழ்கியிருப்பதுவும், அவர் இறக்காது விட்டிருந்தால் நல்லது என எண்ணுவதும் வழமையானது. இறந்தவரைக் கனவில் காணுவதும், அவர் தொடர்பாக அடிக்கடி கதைப்பதும் எதிர்பார்க்க கூடியதே. இந்தவிதமாக, அன்புக்குரிய ஒருவரின் இறப்பினைத் தொடர்ந்து இருப்பவர்களில் ஏற்படுகின்ற உளம் சார்ந்த (அறிகைப் புலம், உணர்ச்சிகள், நடத்தைகள்) எதிர்வினைகளை இழவிரக்கம் (grief) என அழைப்பர்.

பிள்ளைகளைப் பொறுத்தவரை, பொதுவாக இழவிரக்கமானது ஒரு துயர்தரும் விடயமாக இருந்தாலும், அது பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை ஓட்டத்தைக் குழப்புவதில்லை. பாடசாலையும், படிப்பும், விளையாட்டும், வீட்டு வேலைகளும், வெளி வேலைகளும் விரைவில் வழமைக்குத் திரும்பிவிடும். இழவிரக்கத்தின் ஊடாகச் செல்லும் பிள்ளைகள் தற்காலிகமாக வெவ்வேறுவிதமான உணர்ச்சிகளையும், நடத்தைப் பிரச்சினைகளையும் வெளிக்காட்டலாம். ஒதுங்கியிருத்தல், கல்வியில் அக்கறை குறைதல், எளிதில் அழுதல், சிறிய விடயங்களுக்கும் கோபப்படுதல், மற்றவர்களுடன் உறவை ஏற்படுத்துவதில் சிக்கல்படுதல் போன்ற பல வெளிப்பாடுகளை அவர்கள் காட்டலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அப்பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்து, அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதும், அவற்றை அவர்கள் பொருத்தமான வழிகளில் வெளிப்படுத்த உதவுவதும் போதுமானது.

ஆயினும், குறித்த இழப்பு நடைபெற்று ஓராண்டு கடந்த பின்னரும், அந்த இழப்பினால் ஏற்பட்ட மறையுணர்வுகளைச் சமநிலைப்படுத்திச் சாதாரண வாழ்வுக்குத் திரும்ப முடியாது துயருறும் பிள்ளைகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறைகளில் உதவுவது அவசியம். அவர்கள் தமது இழப்பினைப் பற்றிக் கதைக்கவும், இழந்தவருடன் தாம் கொண்டிருந்த உறவு மற்றும் பிணைப்புகளைப் பற்றி வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுதல் நன்மையானது. பிள்ளைகள் தமது உணர்வுகளை வார்த்தைளால் சொல்வதற்கு கஷ்டப்படுகின்ற வேளைகளில் எழுதுதல், வரைதல் போன்ற மாற்று வழிகளை உபயோகித்து அவற்றை வெளிப்படுத்த உதவலாம். மக்களது பண்பாடு மற்றும் கலாசாரத்துடன் இணைந்ததான பல சடங்குகளும், நிகழ்வுகளும் இழப்புகளை ஏற்று, அவற்றை ஊடகப்படுத்தி, அவற்றிலிருந்து மீண்டு, மனந்தேறி வருவதற்கு உதவுகின்றன.

சில வகைப்பட்ட இழப்புகள் சிக்கல்கள் நிறைந்தவையாக அமைந்து விடலாம். குறிப்பாக தாயை இழத்தல், நெருங்கிய உறவினர் ஒருவரின் எதிர்பாராத, நெருக்கீடான இறப்பு, மற்றும் இறந்த உடலைப் பார்க்க முடியாத நிலையில் நடைபெற்ற இழப்பு போன்றவற்றில் இழவிரக்கமானது நீண்டகாலம் நீடிப்பதனைப் பொதுவாகக் காணலாம். அதுபோல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரிவினால் ஏற்படும் இழவிரக்கமானது சிக்கல்தன்மை நிறைந்ததாக அமைந்து விடுகின்றது.

 

நன்றி: சிறுவர் உளநலம்