Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Panic disorder (பீதி நோய்)

பயம் மற்றும் பதகளிப்பு ஆகியன ஆபத்தான மற்றும் அசாதாரணமான சூழ்நிலைகளில் ஏற்படும் இயற்கையான துலங்கல்கள் ஆகும். எனினும், ஒருவர் எந்தவிதமான காரணமோ அல்லது தூன்டுதலோ இன்றி சடுதியாக, குறுகிய நேரம், அவரால் தாங்க முடியாத,   அளவுக்கு அதிகமான பதகளிப்பை வெளிக்காட்டும்போது, அது பீதி நோய் என அழைக்கப்படுகின்றது.

பீதி நோயால் பாதிக்கபட்டவர்கள் பீதித் தாக்கம் எனப்படும் திடீரென ஏற்படும், பய உணர்வுடனும், பதகளிப்போடு தொடர்புடைய பல உடற்தொழிலியல் வெளிப்பாடுகளுடனும் கூடிய அனுபவங்களை மீண்டும் மீண்டும் அனுபவிப்பார்கள். பீதித் தாக்கங்களினால் பாதிக்கப்படுபவர்கள் தமக்கு மரணம் போன்ற ஏதொவொரு அசம்பாவிதம் நடக்கப் போவதாகவும், அந்த நிலைமையைத் தம்மால் சமாளிக்க முடியாததாகவும் உணர்ந்து கொள்ளவார்கள். அந்த அனுபவமானது மிகவும் பயங்கரமாக அமைந்து விடுவதனால், இவ்வாறான பீதித் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் தாங்கள் அவ்வாறான இன்னொரு தாக்கத்துக்கு உள்ளாகலாம் என்ற தொடர் அச்சத்தினால் பீடிக்கப்பட்டு இருப்பர்.

 பீதித் தாக்கத்தின் அறிகுறிகள்

  • வரவிருக்கும் அசம்பாவிதத்தின் மீதான அதீத அச்சம்
  • மரணம் அல்லது வேறு ஏதொவொரு சுயகட்டுப்பாடின்மை சம்பவிக்கலாம் என்ற அச்சம்
  • அதிகரித்த இதயத் துடிப்பு
  • சுவாசிப்பது கடினமாதல் மற்றும் நெஞ்சு இறுக்கமானதுபோல் உணர்ந்து கொள்ளல்
  • கை, கால் மற்றும் உடல் முழுவதும் நடுக்கம் ஏற்படுதல்
  • மிகவும் அதிகளவு வியர்த்துக் கொட்டுதல்
  • வயிற்றுப் பிரட்டல், வயிற்று வலி
  • குளிர் ஏற்படுதல்
  • கடுமையான தலைவலி
  • விறைப்புத் தன்மை
  • மயக்கம்

பீதித் தாக்கங்கள் பொதுவாக சில நிமிடங்கள் வரையுமே நீடிக்கின்றன. ஆயினும், சில சந்தர்ப்பங்களில் அவை கூடியளவு நேரத்திற்கும் நிலைக்கலாம். உயிராபத்தை தோற்றுவிக்காத இந்த பீதித் தாக்கங்களின் அறிகுறிகள் தாமாகவே குறைந்து போகக் கூடியவை. பீதித் தாக்கங்களானவை ஆபத்தற்றவையாக இருக்கும் போதிலும், அவை ஒருவருக்குக் கடுமையான அச்சத்தை உண்டாக்குவதன் காரணமாக, அவரின் வாழ்க்கைத் தரத்தைக் கணிசமான அளவில் பாதித்து விடக்கூடியன.

காரணங்கள்

பீதி நோயை உண்டுபடுத்தும் காரணங்கள் அறியப்படவில்லை. எனினும், பீதி நோயின் உருவாக்கத்தில் பீதி அல்லது மனநலம் குறித்த வேறு கரிசனங்கள் கொண்ட குடும்ப வரலாறு, எளிதில் பதற்றமுறும் சுபாவமுடைய ஆளுமை, மற்றும் நெருக்கீடு போன்ற காரணிகள் சம்பந்தபட்டிருக்கலாம் என அறியப்பட்டிருக்கின்றது.

ஆதரவுதவி பெறல்

பீதி நோய்க்கான சிகிச்சை முறைகள் அறிகை நடத்தைச் சிகிச்சை, மருந்துகள் அல்லது அவை இரண்டையும் உள்ளடக்கிய சிகிச்சைத் தொகுதி ஆகியனவற்றை கொண்டது.

அறிகை நடத்தைச் சிகிச்சை என்பது பீதி நோய்க்குரிய முதன்மையான சிகிச்சை முறையாக இருக்கின்றது. இச்சிகிச்சை முறையில் ஒருவரது சிந்தனைகளையும், நடத்தைகளையும் மாற்றியமைப்பதன் மூலம் பீதி நோயின் குணங்குறிகளைக் கட்டுபடுத்த முடியும். இது தவிர, உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி ஆகியனவும் பீதி தாக்கங்கள் ஏற்படுவதை குறைக்க உதவலாம்.

பீதி நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் ஒரு மருத்துவரின் உதவியை நாடி, தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது சாலச்சிறந்தது.

 

Compiled by S. Vithyasahar