Mental Health Society Tellippalai, Jaffna.
Close

பொதுவாகக் காணப்படுகின்ற சில பாலியல் கோளாறுகள்

ஆர்வக் குறைபாடு

மனிதர்களில் பாலியல் ஆர்வம் என்பது மிகவும் இயல்பாக எழுவது. அநேகமாக எப்போதும் இருப்பது. சாதாரண வாழ்வியல் நிலைமைகளில் இவை சிறிய அளவுகளில் கூடிக் குறையலாம்,

ஆயினும், சிலரில் பாலியல் ஆர்வம் என்பது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. ஓமோன் குறைபாடுகள் இதற்குக் காரணமாகலாம். எனினும், அவரது ஆளுமை சார்ந்த, உளவியல் சார்ந்த காரணிகளும் ஆராயப்பட வேண்டியவை.

அதிகரித்த ஆர்வம்

பாலியல்பு வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால், சிலரில் பாலியலே வாழ்க்கையாகி விடுவதுமுண்டு. பாலியல் வேட்கை அதிகரித்த நிலைமைகளைச் சில உளநோய்களின் வெளிப்பாடாகக் கொண்டாலும், கோளாறுள்ள ஆளுமையின் கூறாகக் கொண்டாலும், பலவேளைகளில் இதற்கான காரணம் தெளிவாகத் தெரிவதில்லை.

இவர்கள் வாழ்வியலோடு தொடர்புடைய வேறு விடயங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தி பாலியலுடன் தொடர்பான உளசக்தியை இடம்பெயரச் செய்வது பிரயோசனமானதாக இருக்கும்.

விறைப்படைதலில் குறைபாடு

பல ஆண்கள் தமது பாலியல் அருட்டல் நிலையின்போதும், பின்பு வருகின்ற நிலைகளின்போதும் இந்தப் பிரச்சினையை அனுபவிப்பர். விறைப்பே அடையாத நிலை, போதுமானளவு விறைப்பு ஏற்படாத நிலை, விறைப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை என இவை பல விதப்படும். Impotence என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்நிலையானது தமிழ் வழக்கில் ஆண்மைக் குறைபாடு என விபரிக்கப்படுகிறது. ஆண்மையை, (அதனுடைய Potency ஐ) வெறுமனே ஆண்குறி எழுச்சியடைதலுடன் இணைத்துப் பார்க்கும் நிலையானது முரண்நகைக்குரியது.

ஆண்குறி விறைப்பு நிலை எய்துவதற்கு போதியளவு இரத்த ஓட்டமும், நரம்புகளின் தொழிற்பாடும் அவசியமானது. எனவே இவற்றினைப் பாதிக்கும் சலரோகம் போன்ற எந்த நோய்களுமே இவ்வாறான குறைபாட்டைத் தோற்றுவிக்கலாம். எனினும் ஒருவரில், நித்திரையின்போது, பொதுவாக விடியற்காலை வேளையில், சிறுநீர்ப்பை நிரம்பி, தனது பக்கத்தால் செல்லும் நரம்பு ஒன்றைத் தூண்டுவதனால் ஏற்படுகின்ற ஆண்குறி விறைப்படைதல் நிகழுமாயின் நாம் ஓரளவுக்கு இரத்தோட்டத்திலும், நரம்புத் தொழிற்பாட்டிலும் பிரச்சினைகள் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

அநேகமான சந்தர்ப்பங்களில் பதகளிப்பு, பயம் போன்ற குறுகியகால உளவியல் காரணங்களும், உறவுச் சிக்கல்கள், குற்றவுணர்வு போன்ற நீண்டகால உளவியல் காரணிகளுமே இவ்வாறான குறைபாட்டிற்குப் பின்னணியாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

தற்பொழுது மருத்துவ உலகில் கிடைக்கின்ற Sildenafil எனும் மாத்திரை இதற்கு உதவ முடியும் என்றாலும், அதனுடைய இதயம் சம்பந்தமான கடுமையான பக்கவிளைவுகளைக் கருத்திற்கொண்டு, அதனை மருத்துவ நிபுணர்களின். ஆலோசனைப்படி மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

காலத்துக்கு முந்திய சுக்கிலப்பாய வெளியேற்றம்

Premature Ejaculation என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது, ஆண்கள் தொடர்பான ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களில் பாலியல் உச்ச திருப்தி நிலையிலே சுக்கிலப்பாய வெளியேற்றம் நிகழ்கின்றது. சில ஆண்களில், சிலவேளைகளில் இந்த உச்ச திருப்தியானது தம்பதியினரது எதிர்பார்ப்பிற்கு மாறாக மிக விரைவாக நிகழ்ந்துவிடுகின்றது. இவ்வாறான வெளியேற்றத்தைத் தொடர்ந்து ஆண்கள் தமது அருட்டல் நிலையிலிருந்து விடுபட்டு வழமையான நிலைக்குத் திரும்புவதனால், அவர்களால் தொடர்ந்தும் தொழிற்படுவது கஷ்டமானதாக இருக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் நேரத்திற்கு முந்திய சுக்கிலப்பாய வெளியேற்றமானது மிகப் பெரும்பாலான வேளைகளில் உளவியல் சார்ந்த காரணிகளாலேயே பதகளிப்பு, பயம், தன்னம்பிக்கைக் குறைவு, தவறான கற்றல் போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன.

பதகளிப்பைக் குறைத்து மனத்தளர்வான ஒரு நிலையை அடைவதும், உறவின்போது எண்ணங்களைத் திசை திருப்புவதும், உச்ச நிலையை அடைவதற்குச் சற்று முன்பாக இயக்கத்தை நிறுத்துவதும் அல்லது பாலுணர்வைக் குறைக்கும் தூண்டல் ஒன்றை ஆண்குறிக்கு வழங்குவதும் இந்தப் பிரச்சினைக்கான பரிகாரமாக அமையலாம்.

உச்ச திருபதி நிலையை அடைவதில் பிரச்சினை ஆண்களில் எதிர்பார்க்கப்படும் நேரத்திற்குப் பிந்திய சுக்கிலப்பாய வெளியேற்றமானது உளவியல் காரணங்களினாலும், மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற ஏனைய காரணிகளினாலும் ஏற்படுகின்றது.

பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் இலகுவாக உச்ச நிலையை அடையாது விடுவதற்கு அவர்களிலே காணப்படும் மன இறுக்கம் போன்ற உளவியல் காரணிகளே முக்கிய பங்கை வகிக்கின்றன. உடலையும் மனதையும் தளர்வாக வைத்திருத்தல் மூலம் இதனை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

வலியை ஏற்படுத்தும் உடலுறவு

Dyspareunia எனப்படும் இது, பொதுவாகப் பெண்களிலே காணப்படுகிறது. உடலுறவின் போது உள் உறுப்புகளில், அடிவயிற்றில் ஏற்படும் வலியாக இது உணரப்படும். தயார்ப்படுத்தல் அற்ற உடலுறவின்போதும், விருப்பமில்லாத நேரங்களில் நடைபெறும் உடலுறவின்போதும் இது உண்டாகலாம். என்றாலும், இதற்கு அடிப்படையாக இடுப்புக்குழி அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள நோய்கள் போன்றனவும் காரணமாகலாம். எனவே, இவை பற்றி ஒரு மருத்துவருடன் கலந்தாலோசிப்பது பிரயோசனமானது.

யோனிவாய் இறுக்கம்

பெண்களில் காணப்படுகின்ற இன்னுமொரு பிரச்சினையாக யோனிவாய் இறுக்கம் (Vaginismus) இருக்கிறது. இந்த நிலைமையில் இருக்கின்ற பெண்களுடைய யோனியின் வாய்ப்பகுதியானது அதனுள் எதனையும் உட்புகவிடாதவாறு இறுக்கமடைகின்ற தன்மையைக் கொண்டிருக்கும். இதனால் ஒரு வைத்திய பரிசோதனையோ அல்லது உடலுறவோ நடைபெறமுடியாத ஒரு நிலை ஏற்படும்.

யோனிவாய் இறுக்கத்திற்குரிய பிரதான காரணமாக உளவியல் சார்ந்த காரணிகளே இருக்கின்றன. உடலுறவு சம்பந்தமான பயம், அது பற்றிய எதிர்மறை எண்ணம், தவறான அபிப்பிராயங்கள் போன்றன இதற்கான தோற்றுவாய்களாக அமையக்கூடும்.

பாலியல் சிகிச்சையின்போது மிகவும் அதிகளவில் பலன் கிடைக்கின்ற ஒன்றாக இந்த யோனிவாய் இறுக்கம் காணப்படுகிறது. பாலியல் அறிவூட்டல், தளர்வுப் பயிற்சிகள், யோனிவாயினுடைய இறுக்கத்தைச் சுயமாகவே படிப்படியாகத் தளரச் செய்தல் போன்ற முறைகளின் மூலம் நல்ல பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

 

நன்றி: உயிர்ப்பு