Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Generalised Anxiety Disorder (பொதுவான பதகளிப்பு நோய்)

பயம் மற்றும் பதகளிப்பு என்பவை மனிதரை ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக புதிய விடயங்களுக்கு முகங்கொடுக்கின்றபோது, அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைமைகளை எதிர்கொள்ளும்போது, பதகளிப்பு ஏற்படுவது என்பது மிகவும் சாதாரணமாகும். ஆனால் விகிதாசாரமற்ற முறையில் உருவாகின்ற பதகளிப்பானது நோயியல் தன்மையுடையது. இவ்வாறான பதகளிப்பு நிலையானது ஒருவரிற்கு அவரது நாளாந்த நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதாக,  நீண்டகாலம் நிலைத்து நிற்கின்ற பிரச்சினையாக அமையுமாயின், அவர் மருத்துவரை நாடுவது சிறந்ததாகும்.

பொதுவான பதகளிப்பு நோய் என்பது ஒரு குறித்த நிகழ்வோடு அல்லது சந்தர்ப்பத்தோடு மட்டும் தொடர்புபடாது, அனைத்து வேளைகளிலும், பல்வேறுதரப்பட்ட, வெவ்வேறு வகையான சூழ்நிலைகள் மற்றும் பிரச்சினைகளின்போதும் பதகளிப்பு நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நீண்ட கால நோய் நிலைமையாகும். இந்நோய் ஏற்படுவதற்கு ஒருவரது உயிரியற் காரணிகள் (மூளையில் உள்ள் செரோடோனின் மற்றும் நோரெட்ரீனலின் அளவுகள், பரம்பரையலகு, நோய்கள்), அவரது குடும்பப்பின்னணி, ஆளுமை இயல்புகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் (குடும்ப வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம்) மது மற்றும் புகைப் பழக்கங்கள், நாளாந்தம் உள்ளெடுக்கும் கஃபெயினின் அளவு (கோப்பி, சக்தியளிக்கும் செயற்கைப்பானங்கள்), மற்றும் அவரில் இருக்கின்ற சில உடல்நோய்கள் போன்றன தொடர்பு பட்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளன.

பொதுவான பதகளிப்பு நோய் உள்ளவர்கள் பெரும்பாலான நாட்களில், ஒரு நாளின் பெரும்பான்யான நேரங்களில் பதகளிப்பை உணர்ந்த வண்ணம் காணப்படுவார்கள். இந்த நிலைமை நீண்ட காலம் நீடிக்கக் கூடிய ஒன்றாக இருப்பதனால், அவர்கள் கடைசியாக நிதானமாக, மன அமைதியோடு இருந்த நாட்களை நினைவு கூருவது கடினமாக இருக்கும். ஒரு பதகளிப்பூட்டும் சிந்தனை விட்டுவிலகும்போது, வேறு ஒரு சிந்தனை தோன்றும். பதகளிப்பு நோயாளிகள் தமது சிந்தனைகளை அசாதாரணமாக உணர்ந்தாலும் அந்தச் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை தமக்கில்லை என்பது போல் அவர்கள் உணர்வார்கள்.

பதகளிப்பு நோயுடையவர்கள் அமைதியின்மை, கவலை, மனதை ஒருநிலைப்படுத்தலில் சிரமம், நித்திரையின்மை, ஆபத்து வருவது போன்ற உணர்வு, படபடப்பு, வேகமாகச் சுவாசித்தல், தசை இறுக்கம், உழைவு குத்து போன்ற உடல் சார்ந்த முறைப்பாடுகள், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல், உள ரீதியிலான அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம்.

பதகளிப்பு நோய் நிலையானது உளசிகிச்சை முறைகள் மூலம் கட்டுப்படுத்தக் கூடியன, தேவையெனின் ஒரு குறகிய காலத்திற்கு பதகளிப்புக்கு எதிரான மருந்துகளை வைத்தியரின் ஆலோசனைப்படி உள்ளெடுக்கலாம். கிரமமான முறையில் தளர்வுப் பயிற்சிகளை மேற்கொள்ளல் பதகளிப்பு நிலையினைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாக அமைந்திருக்கும். இவற்றுடன் கோப்பி போன்ற பானங்களின் பாவனையைக் குறைத்தல், புகைத்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல், சக நண்பர்கள் மற்றும் வீட்டாருடன் மனம்திறந்து கதைத்தல், யோகாசனம், தியானம் போன்றவற்றை ஒழுங்காகச் செய்துவரல் போன்ற செயற்பாடுகள் பதகளிப்பு நோயின் அறிகுறிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு உதவுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, பதகளிப்பை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்து, அவற்றினை முகாமைத்துவம் செய்து கொள்வதும், அல்லது அவற்றில் மேலாண்மை பெற்றுக் கொள்வதும் முக்கியமானது.

 

 

Compiled by K. Heerthikan