Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Depression (மனச்சோர்வு)

மனச்சோர்வு என்பது உலகளாவிய ரீதியில் காணப்படும் மிகவும் பொதுவான ஓர் உளநோயாகும். இது எமது அன்றாட வாழ்வில் ஏற்படும் தற்காலிக மனநிலை மாற்றங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகளில் இருந்தும் வேறுபட்டது. குறிப்பாக மனசோர்வு நோயானது பல வாரங்கள் தொடக்கம் மாதங்கள் வரைக்கு நீடிக்கும் இயல்பைக் கொண்டது. இதனால் மனச்சோர்வுக்கு ஆட்பட்டவர்களின் தினசரி வாழ்வின் செயற்பாடுகள் யாவும் பாதிப்படையும். மனச்சோர்வு தீவிரமானதாக அமைந்திருந்தால், அல்லது அது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தால், சிலவேளைகளில் அது தற்கொலைக்கும் வழிசமைக்கலாம்.

எப்பொழுதும் சோகமாக இருத்தல், வாழ்க்கையின் மேல் பிடிப்பு இல்லாது போதல், எதிலும் நாட்டம் இல்லாது  இருத்தல் (இந்த இயல்புகளின் ஒரு நாளின் முழு நேரமும், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், குறைந்தது இரண்டு வாரங்களுக்கு நீடித்துச் செல்லுமாயின் ஒருவர் மனச்சோர்வு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என அனுமானிக்கலாம்.)

  • சிறிய விடயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை உருவாதல்
  • முன்பு எளிதாக செய்த வேலைகளைக் கூடத் தற்பொழுது செய்ய முடியாது போதல்
  • எப்பொழுதும் உடல் சோர்வாக உணர்ந்து கொள்ளல்
  • மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்
  • பசியின்மை ஏற்படுதல். அதன் காரணமாக உடல் எடை குறைதல் (மறுதலையாக, மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்ற ஒரு சிலருக்கு அதிக பசி ஏற்படுதல், மற்றும் உடல் எடை கூடுதல் போன்றன ஏற்படலாம்.)
  • தூக்கமின்மை (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம் பிடிப்பது, தூக்கம் முழுமையாகக் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல், திருப்தி தராத தூக்கம் போன்றவை ஏற்படலாம்.)
  • தாம்பத்திய உறவில் நாட்டமின்மை
  • தன்னம்பிக்கை இல்லாது போதல்
  • தாழ்வு மனப்பான்மை உருவாதல், எதிர்காலத்தை பற்றிய வெறுமையான உணர்வு ஏற்படுதல்
  • எளிதில் எரிச்சல் அடைதல்
  • அடிக்கடி தலைவலி, மற்றும் உடம்பு முழுவதும் காரணமில்லாத நோக்கள், குத்து உளைவுகள் ஏற்படுதல்
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்கும் ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
  • வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம் மிகுதல், அதற்குரிய முயற்சிகளை செய்தல்

மனச்சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்

பெரும்பான்மையான நேரங்களில், நம்மை மனதளவில் பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மன உளைச்சல்களை உருவாக்கும் விடயங்கள் (குடும்ப உறவில் சச்சரவு, பணப்பிரச்சினை, அலுவலகம் தொடர்பான நெருக்கீடுகள், மற்றும் நண்பர்களுடனான உறவுப் பிரச்சினைகள்) மனச்சோர்வு நோய் உருவாவதற்கு காரணமாகிறது. சில வகையான உடல் உபாதைகளும், நோய்களும் (புற்று நோய், மாரடைப்பு, மூளை பாதிப்பு, தைரொயிட் குறைபாடு) கூட மனச்சோர்வு நோயை உருவாக்கலாம். முக்கியமாக, சில நேரங்களில் எந்தவிதமான மன உளைச்சல்களோ அல்லது உடல் உபாதைகளோ இல்லாத வேளைகளிலும்,  மனச்சோர்வு நோயானது தானாகவே உருவாகலாம்.

 மனச்சோர்வு நோய்க்கான சிகிச்சைகள்

மனச்சோர்வு நோய்க்கு வினைத்திறனான சிகிச்சை உண்டு. மனச்சோர்வின் தீவிரத்தன்மை மற்றும் அதனது வகைக்கேற்ப மனச்சோர்வு நோய்க்கெதிரான மருந்துகளும், மனச்சோர்வை அகலச் செய்யும் உளசிகிச்சை முறைகளும் வழங்கப்படும்.

 

Adapted from the article on Depression by The Royal College of Psychiatrists, and the article on Depression by the World Health Organization.