Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Post Traumatic Stress Disorder – PTSD (மனவடு நோய்)

வாழ்க்கையில் ஏற்படுகின்ற அதிர்ச்சிகரமான, ஆபத்தான, உயிரிழப்புகளைக் கொடுக்கக்கூடிய, பயப்பீதியை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களின் பின்னர், அந்தச் சம்பவங்களுக்கு முகங் கொடுத்தவர்கள் மற்றும் அதற்குள் அகப்பட்டு மீண்டவர்களின் மனநிலையில் தற்காலிகமான  பாதிப்புகள் ஏற்படுவதும், தன்னிச்சையாக அந்த நிகழ்வு பற்றிய எண்ணங்கள், கனவுகள் வருவதும் மிகவும் சாதரணமானது. எனினும், இவ்வறிகுறிகள் தொடர்ச்சியாக நிலைத்திருந்தால், அல்லது அவை கடுமையான அளவுகளில் வெளிப்படுத்தப்படுமேயானால், அவை ஒருவரது வாழ்வை முன்னெடுத்துச் செல்வதில் பிரச்சினைகளை ஏற்படுத்துமேயானால், அது ஒரு நோய்க்குரிய பண்புகளைப் பெற்றுவிடுகின்றது. அது மனவடு நோய் ஆக மாறிவிடுகின்றது.

 அறிகுறிகள்

மனவடு நோயின் அறிகுறிகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  1. மீளனுபவம்

நடந்து முடிந்த, மனத் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வின் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருத்தல். அவை எண்ணங்களாகவோ, காட்சி மற்றும் ஒலிப் படிமங்களாகவோ, நிகழ்காலத்தில் நடைபெறுவதுபோன்ற பிரமைகளாகவோ, பயங்கரமான கனவுகளாகவோ அமைந்திருக்கலாம். மீளனுபவங்களானவை மனத்தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வினை நினைவூட்டுவதோடு, அதனோடிணைந்த பயம், பதகளிப்பு, நிச்சயமற்ற தன்மை போன்ற ஏனைய உணர்வுகளையும் வெளிக்கொணர்கின்றன.

  1. தவிர்த்தல்

மனத்தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வினை நினைவூட்டும், மீளனுபவ எண்ணங்களைக் கொண்டுவரும் இடங்கள், சந்தர்ப்பங்கள், பொருட்கள் போன்ற அனைத்திலிருந்தும் விலகி இருத்தலாக இது வெளிப்படும். அத்துடன் பயங்கரமான அந்நிகழ்வோடு தொடர்புடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் தவிர்த்தலாகவும் இது அமைந்திருக்கும்.

  1. அதிவிழிப்புணர்வு

மனத்தாக்கத்தைக் கொண்டுவந்ததை ஒத்த சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்துவிடுமோ எனும் அச்சத்தினால் எப்பொழுதும் அதியெச்சரிக்கையுடன் இருத்தல், பதற்றத்துடன் இருத்தல், நித்திரைக் குழப்பம், இலகுவில் திடுக்கிடுதல், இலகுவில் கோபப்படுதல் போன்ற வெளிப்பாடுகளாக இது அமைந்திருக்கும்.

  1. ஏனைய மனநிலைகள்

நடந்த சம்பவம், அதன் பலாபலன்கள் பற்றிய குற்ற உணர்வு, சுய பச்சாதாபம் போன்ற உணர்வுகளும், நிகழ்வு பற்றிய முக்கிய விடயங்களை நினைவுபடுத்த முடியாமை, ஒரு விடயத்திலும் ஈடுபட முடியாத தன்மை போன்ற அனுபவங்களும், வாழ்க்கை மற்றும் உலகம் பற்றிய மறை எண்ணங்களும் ஆட்கொள்ளல்.

காரணங்கள்

மனத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் காயங்களை ஏற்படுத்தலாம். மற்றவர்கள் மரணிப்பதைப் பார்த்திருக்க வைக்கலாம். இரத்தம் மற்றும் இறந்த சடலங்களைக் காண வைக்கலாம். மயிரிழையில் உயிர் தப்பியிருக்க வைக்கலாம். ஒரு கையறு நிலையை உணர்ந்து கொள்ள வைக்கலாம். இவ்வாறான தீவிர மனநிலைகளுக்கு ஆளாகியவர்கள் மனவடு நிலையை அடைவது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆயினும், இவ்வாறான அனுபவங்களுக்கு முகங்கொடுத்த பெருமளவானோர் அவர்களுடைய மீட்டெழும் நிலை காரணமாக மனவடுவின் தாக்கத்திற்கு ஆளாகாமல் தாக்குப் பிடிக்கிறார்கள்.

 ஆதரவுதவி பெறல்

மனவடு நோய் சிகிச்சை அளிக்கக் கூடிய ஒன்றாகும், மனவடு நோய்க்கான சிகிச்சைகள் பிரதானமாக உளசிகிச்சை வகைகளைச் சார்ந்தவையாக மைந்திருக்கும். மருந்துகளும் ஓரளவுக்கு உதவி செய்கின்றன. எனவே, மனவடு நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவரின் உதவியை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்வது சாலச்சிறந்தது.

 

Compiled by S. Vithyasahar