Mental Health Society Tellippalai, Jaffna.
Close

தற்கொலை

தற்கொலை என்பது உலகின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். மேலும் உலக சுகாதார நிறுவனத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 800,000 பேர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு நபர் தற்கொலை செய்கிறார். இந்த எண்ணிக்கையில் தெற்காசியா கணிசமானதொரு இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில், இலங்கையில் 1995 இல் அதிகளவான தற்கொலைகள் நிகழ்ந்தன. அது, அவ்வேளையில் 100,000 க்கு 47 ஆக இருந்தது. அதற்குப் பல காரணங்கள் பங்களித்திருந்தன. ஆயினும், அதன் பின்னர் எடுக்கப்பட்ட காத்திரமான நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக இலங்கையின் தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இருப்பினும், இப்போதும் இலங்கையில் காணப்படுகின்ற தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கையானது மிகவும் அதிகமானதாகவே காணப்படுகின்றது.

ஒருவர் சுயவிருப்போடு, தனது மரணத்தை வேண்டிச் செய்யும் செயல் தற்கொலை எனப்படும். தற்கொலை என்பது புரிந்து கொள்ள மிகவும் சிக்கலானது. மக்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆணித்தரமான விளக்கமும் இல்லை. பல காரணிகளின் ஒட்டுமொத்தமான கூட்டுச் சேர்க்கையினால் ஏற்படுகின்ற ஒரு விடயமாகவே அதனை நோக்க வேண்டியுள்ளது.

தற்கொலைக்கான இடர்தகவை அதிகரிக்கின்ற பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இவற்றுள் கடந்த காலத்தில் இடம்பெற்ற தற்கொலை முயற்சிகள் அல்லது தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் நடத்தைகள், (தனக்குத்தானே காயப்படுத்திக் கொள்ளும் பலர் இறக்க விரும்புவதில்லை. இருப்பினும், அவ்வாறு சுயதீங்கு விளைவிப்பவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அல்லது தற்கொலை புரிந்து இறக்கும் இடர்தகவை அதிகமாகக் கொண்டிருக்கிறார்கள் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.) வேலையில்லாமல் இருப்பது, நாட்பட்ட வலி, மரணத்தை விரைவில் ஏற்படுத்தக் கூடிய நோய்கள் போன்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள், தனியாக வாழ்தல், மது மற்றும் ஏனைய போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருப்பது, மனநலப் பிரச்சனைகள், உளசமூக நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்தல் போன்ற காரணிகள் முக்கியம் பெறுகின்றன.

ஒருவர் மரணம் அல்லது தற்கொலை பற்றி அடிக்கடி பேசுவது அல்லது எழுதுவது, வாழ்க்கையில் நம்பிக்கையற்ற, உதவியற்ற அல்லது பயனற்ற ஒருவர் போன்ற கருத்துகளை வெளியிடுதல், தாம் வாழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லை, தனது வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லை போன்ற எதிர்மறை வெளிப்பாடுகள், தான் இவ்வுலகில் இல்லாவிட்டால் நன்றாக இருக்கும் எனக் கூறுதல், தாம் மற்றவர்களுக்குப் பாரமாக இருப்பதைப் பற்றி பேசுவது, அதிகரித்த மது மற்றும் ஏனைய போதைப்பொருள்களைத் துஷ்பிரயோகம் செய்வது, தமது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்திலிருந்து விலகுதல், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுதல், சடுதியான மனநிலை மாற்றங்கள் என்பன தற்கொலைக்கான இடர்தகவுகளை அதிகரிக்கின்ற அறிகுறிகளாக் கொள்ளலாம். ஒருவரில் இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமிடத்து, அவருக்கு உடனடி உதவியும், பொருத்தமான இடையீடுகளும் அவசியமாகின்றன.

வினைத்திறனான உளநலப் பராமரிப்பு, பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கான எளிதான அணுக்கூடிய வசதிகள், தனிநபர்கள், குடும்பம், சமூகம் மற்றும் சமூக நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்படும் வலுவான தொடர்புகள், பிரச்சினை தீர்க்கும் மற்றும் முரண்பாடுகளைத் தீர்க்கும் திறன்களை விருத்தி செய்தல் என்பன தற்கொலை மரணங்களைக் குறைக்கக் கூடிய காரணிகளாக அமைந்திருக்கின்றன.

யாராவது தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறினால், நீங்கள் அவர்களின் கவலைகளையும், கரிசனைகளையும் கவனமாகக் கேட்க வேண்டியது அவசியமானது. அவர்களின் திட்டங்களைப் பற்றி கேள்விகளைக் கேட்கப் பயப்பட வேண்டாம். நீங்கள் அவர்களது நலனில் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் தனியாக இல்லை. அவர்களுக்கு உதவிசெய்வதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்ற விடயத்தை வெளிப்படுத்துங்கள். ஒரு துறைசார் நிபுணரிடம் உடனடியாக உதவி பெறுமாறு அவர்களை ஊக்குவிக்கவும். ஒருபோதும் அவர்களைத் தனியாக விடாதீர்கள். மேலும், மிகவும் கவலையாக இருக்கின்ற ஒருவரிடம் அவர் தற்கொலை பற்றி நினைக்கிறார்களா என்று கேட்டுப் பார்ப்பது நல்லது. (பொதுவாக மக்கள் இவ்வாறு கேட்பதற்குத் தயங்கினாலும், அவ்வாறு கேட்பது பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.) தற்கொலை செய்யக்கூடிய இடர்தகவு உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வழிமுறைகள் கிடைப்பதற்கான அல்லது அவற்றை அணுகுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும். தகுந்த உதவிகள் கிடைக்கும் வரைக்கும் அவர்களுடன் கூட இருப்பது நல்லது.

தற்கொலை முயற்சிகளைப் பொறுத்தவரைக்கும், பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் பலர் உடல் மற்றும் உள ரீதியான சவால்களுக்கு ஆளாகி இருப்பார்கள். அவர்களைச் சார்ந்தவர்களும் உள ரீதியான சவால்களுக்கு உள்ளாகி இருப்பார்கள். எனவே, அவ்வாறானதொரு நிலையில் இருதரப்புகளுக்குமான உளநல ஆலோசனை என்பது இன்றியமையாததாகக் காணப்படுகிறது.

தற்கொலைக்கு முயற்சி செய்த ஒருவரின் கதையை (அவரது பிரச்சினைகளை, தற்போதைய நெருக்கடி நிலையை) மதிப்பீடு செய்யாது, அவரைக் காயப்படுத்தாத வகையில் ஒத்துணர்வோடு பரிவுடன் செவிமடுத்தல் வேண்டும். அவரது உணர்வுகள் சரியானவைதானென்றும், ஆயினும், தற்கொலை செய்வது என்பது அதற்கான தீர்வு அல்ல என்றும் தெளிவுபடுத்த வேண்டும். அவர் மீது பழி சுமத்துவது அல்லது கோபப்படுவது போன்ற அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும். சுருக்கக் கூறின், அனைத்தும் சரியாக அமையும் எனும் நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்த வேண்டும்.

ஒருவர் தற்கொலை செய்து இறந்து கொண்ட பின், அவரது குடும்பத்தவர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு உள ரீதியான ஆதரவு கிடைக்கப் பெறுவது மிகவும் அவசியமாகும். அவர்களுக்குப் பொதுவாக ஏற்படக்கூடிய கோபம், குற்றவுணர்ச்சி போன்ற உணர்வுகள் அவர்களைப் பாதிக்காது இருக்க நாம் உதவ வேண்டும். ஒரு தற்கொலை இறப்பு நடந்த குடும்பத்தில் அங்கத்தவராக இருக்கும் வேறு ஒருவருக்கும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது, அல்லது அவர்களும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது போன்றன நடைபெறலாம். எனவே தற்கொலை செய்து இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகுந்த உளநல ஆலோசனைகள் சிடைக்கப் பெறுவது அவசியமாகும். இது அவர்களின் இழவிரக்கப்படிமுறைகள் சரியான முறையில் ஏற்படவும், சரியான திசையில் பயணிக்கவும் உதவும்.

Compiled by K. Heerthikan